தலைமை செயலகத்தில் திடீர் தீ; கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கின் ஆவணங்களை அழிக்க சதியா?- எதிர்க்கட்சிகள் புகாரால் முதல்வர் பினராயி விஜயனுக்கு புதிய சிக்கல்

By என்.சுவாமிநாதன்

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில் வழக்குக்கு தேவைப்படும் ஆவணங்கள் இருந்ததாகக் கூறப்படும் தலைமை செயலக அறையில் திடீரென தீப்பிடித்தது. ஆவணங்களை அழிக்க ஆளும் தரப்பு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

கேரள மாநிலத் தலைமை செயலகம் திருவனந்தபுரத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தின் வடக்குப் பகுதியில் இருக்கும் பொது நிர்
வாகப் பிரிவில் செவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென தீப்பிடித்தது. தீ விபத்து நடந்த பொது நிர்வாகப் பிரிவில் அப்போது பணியாளர்கள் யாரும் இல்லை. கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் வந்து போன பகுதி என்பதால் அது மூடப்பட்டிருந்தது. தீ விபத்தை பார்த்த மற்ற பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்தான் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் முக்கியமான சில கோப்புகள் எரிந்து போனதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் தெரிந்ததுமே பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் தன் கட்சியினரோடு போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கேரள தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா உத்தரவின் பெயரில் காவல் துறையினர் தலைமை செயலகத்தில் இருந்து வெளியேற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது தண்ணீர் பீய்ச்சியும் விரட்டினர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் ரமேஷ் சென்னிதலா தலைமையில் அங்கு வந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றச்சாட்டு பின்னணி

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் இருந்தது தெரிய வந்தது. சங்கிலித் தொடராக நீண்ட இதன் விசாரணையில் தூதரகத்தின் முன்னாள் ஊழியர்கள் சரித், ஸ்வப்னா சுரேஷ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரனையும் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

தங்கக் கடத்தலில் முதல்வர் அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனைத் தொடர்ந்து சிவசங்கரனை அந்த பொறுப்பில் இருந்து நீக்கினார் முதல்வர் பினராயி விஜயன்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தும் தேசிய புலனாய்வு அமைப்பினர் இவ்வழக்கில் சில ஆவணங்களை கேரள தலைமை செயலகத்திடம் கேட்டிருந்தனர். இதேபோல் கேரள மாநில அமைச்சர் கே.டி.ஜலீல், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு, பரிசு பெறும் படத்தையும் சேகரித்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் அது புரோட்டோகாலின்படி அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிதானா எனவும் தலைமை செயலகத்தின் புரோட்டாகால் பிரிவில் தகவல் கேட்டிருந்தனர். பொதுப் பிரிவில் ‘புரோட்டாக்கால்’ பகுதியின் கோப்பு
களும் தீ விபத்தில் சேதமானதாகக் கூறப்படுகிறது. இதையெல்லாம் முன்வைத்தே எதிர்க்கட்சிகள் தீ விபத்தை திட்டமிட்ட சதி என போராட்டத்தில் குதித்துள்ளன.

இயங்காத சிசிடிவி

கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் கூறுகையில்‘’தங்கக் கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் வழக்கோடு தொடர்புடைய ஆவணங்கள் புரோட்டாக்கால் அலுவலகத்தில் இருந்தன. இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்துவிடக் கூடாதென அரசே தீ வைத்துள்ளது. தீ விபத்து நடந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களும் இயங்கவில்லை. அது இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கிறது. இடி, மழையில் சிசிடிவி கேமராக்கள் பழுதானதாக சொல்வது நம்பும்படியாக இல்லை. விசா ரணை அதிகாரிகள் சிசிடிவி கேமரா இயங்காததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது திட்டமிட்ட சதி’’ என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்எல்ஏ பல்ராம் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் தலைமை செயலரையே கேள்விக்குள்ளாக்குகிறோம். அவரது ஈடு
பாட்டையும் இதில் சந்தேகிக்கிறோம். அவர்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக்கூட தலைமை செயலகத்துக்குள் நுழைந்து தீ சேதத்தை ஆய்வு செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினார்’’ என்றார்.

மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் தீ விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என கேரள மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா மனு கொடுத்துள்ளார்.

தன்மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுத்திருக்கும் கேரள தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா ‘‘தலைமை செயலகத்துக்குள் அனைவரும் நுழையும் அணுகுமுறை இல்லை. போராட்டம் செய்ய வருபவர்கள் இன்று தலைமை செயலகத்துக்குள் நுழைவார்கள். நாளை எனது அறையிலும், முதல்வரின் அறையிலும் நுழைவார்கள். அதனால்தான் தலைமை செயலகத்துக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. தீ விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

இதனிடையே தலைமை செயலகத்தில் நடந்த தீ விபத்தில் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தக் கோரி காங்கிரஸ், பாஜக
கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோழிக்கோட்டில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கரோனா காலத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் போராட்டங்கள் நடத்த கேரளத்தில் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன், காங்கிரஸ் எம்எல்ஏ சிவகுமார் உட்பட போராட்டத்தில்
ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்