காங்கிரஸ் கட்சித் தலைவராக நேரு-காந்தி குடும்பத்தைச் சாராதவர்கள் வரலாம் என்பது கோட்பாட்டளவில் வேண்டுமானால் சாத்தியமாகலாம், ஆனால், நடைமுறையில் சாத்தியமில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்குள் தலைமைப் பிரச்சினையும், உட்கட்சிப் பிரச்சினையும் புதிதாக முளைத்தது அல்ல. 1885-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை ஆலன் ஆக்டேவியன் ஹியூம் தொடங்கிய காலத்திலிருந்து அடிக்கடி பிரச்சினைகள் எழுவதும், தலைமையுடன் மோதலில் ஈடுபட்டு பல்வேறு புதிய கட்சிகள் தோன்றுவதும் பல ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது.
அதேபோன்ற தலைமையுடன் மோதும் பிரச்சினைதான் தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் நடந்து வருகிறது. இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி, நியமிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் புதிய தலைவருக்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. முழுமையான தலைவர், ஆக்கபூர்வமாக சுறுசுறுப்பாக செயல்படும் தலைவர், காந்தி குடும்பத்தைச் சேராத தலைவர் தேவை என 23 மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.
» இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் 24 லட்சமாக உயர்வு: 58 ஆயிரத்தைக் கடந்தது உயிரிழப்பு
இந்தக் கடிதத்தால்தான் நேற்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் கூட்டப்பட்டு 7 மணி நேரம் விவாதம் நடந்தது. பல்வேறு தலைவர்களும் தங்களின் மனக்குறைகளை, அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து, அடுத்த 6 மாதங்களுக்குள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி நடக்கும், அதுவரை இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இதுவரை காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக வெளியிலிருந்து அதாவது நேரு-காந்தி குடும்பத்தைச் சேராதவர்கள் 13 பேர் தலைவராக வந்துள்ளார்கள். நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 5 முறை தலைவராக இருந்துள்ளனர்.
இதில் நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 5 முறைதான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றாலும் அதிகமான காலம் கட்சியை நிர்வாகம் செய்தவர்கள் காந்தி குடும்பத்தார்தான்.
ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என 5 நபர்கள் ஒரே குடும்பத்திலிருந்து வந்து கட்சியை ஆண்டுள்ளார்கள். சுதந்திரத்திலிருந்து கணக்கிட்டால், ஏறக்குறைய 40 ஆண்டுகள் இந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சியை நிர்வாகம் செய்துள்ளார்கள்.
இதில் சோனியா காந்தி மட்டுமே நீண்டகாலமாக காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். மற்ற வகையில் வெளியிலிருந்து, இதுவரை ஜே.பி. கிர்பாலனி, பி.பட்டாபி சீதாராமையா, புருஷோத்தமன் தாஸ் டான்டன், யு.என்.தேபார், என். சஞ்சீவ ரெட்டி, கே.காமராஜ், எஸ்.நிஜலிங்கப்பா, ஜெகஜீவன் ராம், சங்கர் தயாள் சர்மா, டி.கே.பரோவா, கே.பி.ரெட்டி, பி.வி.நரசிம்மராவ், சீதாராம் கேசரி ஆகியோர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களாக இருந்துள்ளனர்.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து தலைமை தேவை என்று கடந்த வாரம் பிரியங்கா காந்தி ஒரு பேட்டியில் கூறியதுதான் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஆனால், அதற்கு எதிர்வினையாக கட்சியிலிருந்தே சோனியா காந்தி அல்லது ராகுல் காந்திதான் அடுத்த தலைவராக வர வேண்டும். அதைத்தான் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று கட்சித் தலைமை தெரிவித்துவிட்டது.
ஆனால், நேரு-காந்தி குடும்பத்தைச் சேராதவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வரமுடியுமா என்ற கேள்வி எழுந்தது
அதுகுறித்து மூத்த பத்திரிகையாளரும், 24 அக்பர் சாலை எனும் நூலின் ஆசிரியருமான ரஷீத் கித்வேய் பிடிஐ நிருபருக்கு அளித்த பேட்டியில், “ நேரு-காந்தி குடும்பத்துடன் எப்போதும் இருக்கும் தலைவர் பதவி குறித்துதான் இப்போது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது.
இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் நேருவுக்கு அளிக்கும் ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கும் ஓட்டு என்ற கோஷம் எழுப்பப்பட்டது. 2004-ம் ஆண்டிலிருந்து சோனியாவின் தலைமை, இப்போது, ராகுல், பிரியங்கா என்ற தலைமையை சோனியா காந்தி பயன்படுத்துகிறார். எனவே காங்கிரஸின் அரசியல் தலைமை எப்போதுமே காந்திகளுடன் இருந்து வருகிறது. காந்தி அல்லாத குடியரசுத் தலைவர்கள்கூட கூட அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.
நேரு-காந்தி குடும்பத்தைச் சேராதவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு வரமுடியும். இது கோட்பாட்டளவில்தான் சாத்தியம், ஆனால், நடைமுறைச் சாத்தியம் என்பது இல்லை” எனத் தெரிவித்தார்.
வளர்ந்துவரும் சமூகங்கள் குறித்த ஆய்வு மையத்தின் இயக்குநர் சஞ்சய் குமார் கூறுகையில், “ நேரு-காந்தி குடும்பத்தைச் சாராதவர்கள் தலைவர்களாக இருந்த காலத்தை, காந்தி குடும்பத்தினர் தலைவராக இருந்த காலத்தோடு ஒப்பிடமுடியாது. பதவிக்காலத்தில் அதிகமான வேறுபாடுகள் உள்ளன.
காந்தி குடும்பத்திலிருந்து தலைவராக வருபவர் சொத்தாகவும், பொறுப்பாகவும் இருப்பார் என நம்பப்படுகிறது. தலைவராக வருபவர் கட்சிக்குச் சொத்தாகவும், கட்சியைக் கட்டுக்கோப்பாகவும், ஒன்றாகவும் வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும். ஆனால், நிர்வாகிகளுக்கும் பொறுப்பு என்பது மிகவும் அவசியம். தற்போது காந்தி குடும்பத்தாலும், கட்சியின் தலைவர்களாலும் வாக்களார்களை ஈர்க்க முடியாததால், இப்போது அவர்களின் பொறுப்பு மேல்நோக்கி வருகிறது.
ஆனால், நேரு-காந்தி குடும்பத்தைச் சேராதவர்கள் தலைவராக பல்வேறு சூழல்களில் செயல்படுவதும், அழுத்தங்களைச் சமாளித்துச் செல்வதும் கடினமானது” எனத் தெரிவித்தார்.
ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், அரசியல் விமர்சகருமான சஞ்சய் கே பாண்டே கூறுகையில், “நேரு-காந்தி குடும்பத்தைச் சேராதவர்கள் தலைவராக காங்கிரஸ் கட்சிக்குள் வந்து அந்தக் குடும்பத்தினருடன் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்போது செயல்படுவதும், நீடிப்பதும் கடினம்.
அத்தகைய சூழ்நிலையைச் சமாளிக்க காங்கிரஸ் ஒரு வழிமுறையை வகுக்காவிட்டால், கட்சியின் எதிர்காலம் மிகவும் ஒளிமயமாக இருக்காது. பிரச்சினை இந்தக் குடும்பத்தால் அல்ல, கட்சிக்குள் இருக்கும் தலைவர்கள், அந்தக் குடும்பத்தைத் தவிர்த்துச் சிந்திக்காமல் இருப்பதாலும் பிரச்சினை வருகிறது.
காங்கிரஸ் தலைவர்களுக்கு நம்பிக்கையில்லை. அந்தக் குடும்பத்தின் சொகுசில் பயணித்துப் பழகிவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
ஆனால், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் காந்தி குடும்பத்தைச் சாராமல் காங்கிரஸ் தலைவராக இருந்தும், பிரதமராகவும் இருந்துள்ளார். கடந்த 1973-ம் ஆண்டு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி ஆகியோரையும், அவர்களின் ஆதரவாளர்களையும் எதிர்த்து உட்கட்சித் தேர்தலை நடத்த முடிவு செய்தார்.
கடந்த 1991- முதல் 1996-ம் ஆண்டுவரை பிரதமராக இருந்த நரசிம்மராவுக்கும் சோனியாவுக்கும் இடையே நட்புறவு சீராக இல்லை. மைனாரிட்டி அரசை வைத்திருந்தபோதிலும்கூட தனது திறமையால 5 ஆண்டுகளை நிறைவு செய்தார். ஆனால், நரசிம்மராவ் மீது இருந்த அதிருப்தி காரணமாக அவர் 2004-ம் ஆண்டு இறந்தபோதுகூட அவரின் உடல் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்படவில்லை. மாறாக ஆந்திராவில்தான் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago