மக்களுக்குப் பயம் தேவையில்லை; எச்சரிக்கைதான் தேவை!- கரோனாவுக்குப் பலியானவர்களைத் தகனம் செய்யும் கேரளத்து தைரியலட்சுமி

By என்.சுவாமிநாதன்

கரோனாவால் உயிர் இழந்தவர்களை நெருங்கிய சொந்தங்களே அடக்கம் செய்ய அச்சப்படும் சூழலில் கேரளத்தில் பெண் அதிகாரி ஒருவர் துணிச்சலாக அதைச் செய்துவருகிறார். மனம் உருகப் பிரார்த்தனை செய்து, உறவுகளின் உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து அவர் செய்யும் செயல் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் இளநிலை சுகாதார ஆய்வாளராக இருப்பவர் சைனி பிரசாத். திருவனந்தபுரத்தில் உள்ள கரோனா வார்டில் உயிரிழக்கும் நோயாளிகளை, மாநகராட்சிக்குச் சொந்தமான மின் மயானத்தில் சைனி பிரசாத் தலைமையிலான குழுவினரே கொண்டு சென்று எரியூட்டுகின்றனர். பெண்ணாக இருந்தாலும் சவாலான இந்தப் பணியை மிகவும் தைரியமாக எதிர்கொள்கிறார் சைனி பிரசாத்.

இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையத்திடம் பேசிய அவர், “நெருக்கடியான காலகட்டத்தில் இந்தப் பணியைச் செய்வது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. கரோனா நோயாளிகளின் ரத்த சொந்தங்களில் இரண்டு பேர் மட்டுமே எங்களுடன் வருவார்கள். நல்லதுக்கும், கெட்டதுக்கும் நான்கு பேர் வேண்டும் என்று சொல்வார்கள். இந்தக் கரோனா நோயாளிகளின் கடைசிக் காலத்தில் அந்த நான்கு பேரில் நானும், எங்கள் குழுவினரும் இருப்பதாக நினைத்துக் கொள்வோம். இறந்தவர்களைத் தகனம் செய்யும்முறை குறித்து மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறையை வகுத்துள்ளது. அதைப் பின்பற்றியே செய்கிறோம்.

என் கணவர் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணி செய்கிறார். குழந்தைகளும் இருக்கிறார்கள். என் மூலமாக வீட்டில் இருக்கும் அவர்களுக்கு நோய் தொற்றிவிடக்கூடாது என்பதிலும் முழுக்கவனத்தோடு இருப்பேன். கரோனாவால் இறந்தவர்களை நெருங்கும்போதே முழு உடல் கவசத்தோடுதான் நெருங்குவோம். மின் மயானத்தில் எரியூட்டியதும் அங்கேயே போட்டிருக்கும் முழு உடல் கவசத்தையும் களைந்துவிடுவோம். வீட்டிற்குள் செல்லும் முன்பு மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீரில் குளித்துவிட்டுத்தான் குழந்தைகளை நெருங்குவேன். கையில் எப்போதும் சானிடைசர் இருக்கும். என்னோடு இந்தப்பணியில் சக பணியாளர்களான வினு, நிகில், அனீஸ், சுரேஷ் ஆகியோரும் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.

நாங்கள் செய்யும் இந்தப் பணியை எங்கள் வேலையின் ஓர் அங்கம் எனச் சொல்வதைவிட எங்கள் கணக்கில் சேர்க்கப்படும் புண்ணியம் என்பதாகத்தான் பார்க்கிறேன். கரோனாவால் மரணித்தவரின் இல்லங்களின் அருகிலேயே மக்கள் செல்ல அச்சம் கொள்கின்றனர். அவர்களது ரத்த உறவுகளைத் தவிர்த்து மற்றவர்கள் துர்மரணமாக நினைத்து ஆறுதல் சொல்லக்கூட அருகில் இருப்பதில்லை.

‘நோயுடன் போராடுங்கள்... நோயாளியுடன் அல்ல’ என அரசு தொடர்ந்து விழிப்புணர்வூட்டினாலும் மக்கள் இன்னும்கூட கரோனா நோயாளிகளை சகஜமான மனநிலையில் பார்க்கும் சிந்தனைக்குள் வரவில்லை. இப்படியான சூழலில், கரோனாவுக்குப் பலியானவர்களின் உடலை எரியூட்டும் முன்பு கடவுளை மனம் உருகிப் பிரார்த்திக்கின்றோம். இப்போதைய சூழலில் மக்களுக்கு ஒன்றே ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகிறேன். நமக்கு இப்போது கரோனா குறித்த பயம் தேவை இல்லை; போதிய எச்சரிக்கைதான் தேவை. அது இருந்துவிட்டால் கரோனா நம்மை நெருங்காது” என்றார்.

இதற்கு முன்பு கோழிக்கோடு மாவட்டம், வடகரை நகரசபையில் பணி செய்தார் சைனி பிரசாத். அப்போது, ஆதரவின்றி இறக்கும் பலரது உடல்களை எடுத்து நல்லடக்கம் செய்துள்ளார். அரசுப் பணி என்பது சம்பளத்துக்கான விஷயம் மட்டுமல்ல. ஆத்ம திருப்திக்காகவும்தான் என்ற லட்சியத்தோடு வாழும் சைனி பிரசாத்துக்குச் சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்