‘‘ராகுல் காந்தி அப்படி பேசவில்லை’’ - குலாம் நபி ஆசாத்தும் மறுப்பு

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் சேர்ந்து செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாக தகவல் வெளியான நிலையில் அதுபோன்று ராகுல் காந்தி ஏதும் பேசவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியைக் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தபின், தலைவர் இல்லாமல் சில மாதங்கள் கட்சி சென்றது. அதன்பின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.


ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியிலிருந்து தற்போதுவரை ஓராண்டுக்கும் மேலாக இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர்வது கட்சிக்குள் நிலையான தலைமை கோருபவர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

இது தொடர்பாக சோனியா காந்திக்கு மூத்த தலைவர்கள் 24 பேர் கடிதம் எழுதி தலைமை குறித்து உறுதியான முடிவு எடுக்க வலியுறுத்தியுள்ளனர். குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், முகுல் வாஸ்னிக், மணிஷ் திவாரி, சசி தரூர், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திரசிங் ஹூடா ஆகியோர் காங்கிரஸ் தலைமையில் மறுமலர்ச்சி, புத்துணர்ச்சி தேவை, முழுநேரத் தலைமை அவசியம் எனக் கோருகின்றனர்.

இந்நிலையில் தலைமை குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று காணொலி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, தான் இடைக்காலத் தலைவர் பதிவியிலிருந்து விலகுவதாக விருப்பம் தெரிவித்து பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு விளக்கமாகப் பதில் அளித்து கடிதம் அளித்துள்ளார் என்றும், புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்குங்கள், தன்னைத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார் என்றும் தகவல் வெளியாகியது.

ஆனால்,சோனியா காந்தியே தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்று மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் சோனியா காந்திக்கு எதிராகக் கடிதம் எழுதிய தலைவர்களை மன்மோகன் சிங்கும், மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியும் கடுமையாக விமர்சித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய ராகுல் காந்தி, சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தபோது அவருக்கு மூத்த தலைவர்கள் ஏன் கடிதம் அனுப்பினார்கள் என்றும், மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் சேர்ந்து செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தியின் இந்த திடீர் குற்றச்சாட்டால் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தி அடைந்தனர்.

மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டை நிருபித்தால் தான் ராஜினாமா செய்யவேன் என குலாம் நபி ஆசாத் கூறியதாக தகவல்கள் வெளியாகின. எனினும் ராகுல் காந்தி இதுபோன்று பேசவில்லை என கட்சியின் செய்திததொடர்பாளர் சுர்ஜேவாலா மறுத்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் குலாம் நபி ஆசாத்தும் மறுத்துள்ளார். ‘‘காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அல்லது வெளியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக ஏதும் கூறவில்லை. இதுதொடர்பாக வெளியான தகவல் ஏதும் உண்மையில்லை’’ என ஆசாத் கூறியுள்ளார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்