காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு? கட்சிக்குள் கருத்துப் பிளவுகள்; பரபரப்பான சூழலில் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று கூடுகிறது

By பிடிஐ

காங்கிரஸ் கட்சியின் தலைமை தொடர்பான விஷயத்தில் கட்சிக்குள் இரு வேறு கருத்துகள் வலுவாக எழுந்துள்ளன. வலுவான, நிலையான முழுநேரத் தலைமை தேவை என மறைமுகமாக சோனியா காந்தியின் தலைமைக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மற்றொரு தரப்பினர் சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என காந்தி குடும்பத்துக்கு ஆதரவாக நிற்கின்றனர்.

அடுத்தடுத்து தேர்தல் வரும் நிலையில் தலைமைப் பதவிப் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி சிக்கித் தவிக்கிறது.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தபின், தலைவர் இல்லாமல் சில மாதங்கள் சென்றன. அதன்பின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியிலிருந்து தற்போதுவரை ஓர் ஆண்டுக்கும் மேலாக இடைக்காலத் தலைவர் தொடர்வது கட்சிக்குள் நிலையான தலைமை கோருபவர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அஸ்வானி குமார், சல்மான் குர்ஷித் ஆகியோர் காந்தி குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

ஆனால், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், முகுல் வாஸ்னிக், மணிஷ் திவாரி, சசி தரூர், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திரசிங் ஹூடா ஆகியோர் காங்கிரஸ் தலைமையில் மறுமலர்ச்சி, புத்துணர்ச்சி தேவை, முழுநேரத் தலைமை அவசியம் எனக் கோருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர்கள், முதல்வர்கள், எம்.பி.க்கள், மூத்த நிர்வாகிகள் பலரும் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். அந்தக் கடிதம் குறித்து இன்று நடக்கும் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு நேரு-காந்தி குடும்பம்தான் ஒட்டுமொத்த தலைமையின் கருப்பகுதியாகத் தொடர்ந்து இருப்பார்கள் என்பதைக் கடிதம் எழுதிய காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியபோதிலும் தலைமையில் மாற்றம் தேவை என்பது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தக் கடித விவகாரம் வெளியே தெரிந்தவுடன், சோனியா காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்த காங்கிஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, தலைவர் பதவியில் சோனியா காந்தி தொடர்கிறார். அவ்வாறு வரும் செய்திகள் தவறானவை என விளக்கம் அளித்தார்.

இன்று நடக்கும் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி தனது தலைவர் பதிவியை ராஜினாமா செய்வாரா அல்லது புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் முக்கிய முடிவு எடுக்கப்படுமா என்பதுதான் இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த 1999-ம் ஆண்டில் நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில், சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பிறப்பு குறித்து அப்போதைய மூத்த தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பினார். இதனால் தனக்கு எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து, சோனியா காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சரத் பவாரும் கட்சியிலிருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் எனும் கட்சியை பி.ஏ.சங்மா, தாரிக் அன்வர் ஆகியோருடன் சேர்ந்து தொடங்கினார்.

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேரத் தலைமை தேவை, களத்தில் உற்சாகமாகச் செயல்படும் தலைமை, மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பிரித்தளிப்பது, காரியக் கமிட்டி உறுப்பினர்களை மாற்றியமைப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பேசப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால் ஒட்டுமொத்த முடிவுகளை தலைமையிடம் எடுப்பதாலும், அதிகாரம் ஒரே இடத்தில் குவிவதாலும் எந்த முடிவையும் விரைந்து எடுக்க முடியவில்லை. இதனால் பல்வேறு நேரங்களில் தொண்டர்கள் சோர்வடைவது கட்சியை மேலும் பலவீனப்படுத்துகிறது என்று காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருதரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வருவதற்கு ராகுல் காந்தி தயங்குவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரியங்கா காந்தியும், தற்போதுள்ள பொதுச்செயலாலர் பதவியே போதுமானது என்றும், மிக அதிகமான பொறுப்புள்ள தலைவர் பதவிக்கு இப்போது தயாராகவில்லை என்று மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதலால், இன்றைய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் புதிய தலைமை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்