வைரஸைக் கட்டுப்படுத்துவதில் முன்னணியில் இருந்த கேரளத்தில் திடீரென கரோனா அதிகரிப்பது எப்படி?

By என்.சுவாமிநாதன்

இந்தியாவில் முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்ட மாநிலம் கேரளம். சீனாவின் வூஹான் நகரில் மருத்தும் படித்து வந்த கேரள மாணவி ஊர் திரும்பிய போது கடந்த ஜனவரி 30-ம் தேதி அவருக்கு கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவின் பிற மாநிலங்கள் கரோனா குறித்து பேசத் தொடங்காத அன்றைய நாளிலேயே கரோனா நோயாளியை எதிர்கொண்டது கேரளம். முந்தைய ஆண்டில் கேரள சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக இருந்த நிபா வைரஸில் இருந்து கற்றுக் கொண்ட பயிற்சி, கரோனாவை கையாள்வதில் பெரிதும் துணைபுரிந்தது.

இதேபோல் இத்தாலியில் இருந்து திரும்பிய ஒரு குடும்பத்தினர் விமான நிலையத்தில் சோதனையில் சிக்காமல் வெளியே செல்ல அவர்களின் பயண வழித் தடத்தை தயாரித்து ஆயிரக்கணக்கானோரை தனிமைப்படுத்தி தொடக்க நிலையிலேயே சமூகப் பரவலைத் தடுத்தது.

இதுபோன்ற செயல்பாடுகளால் கேரளம், பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக கொண்டாடப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக கேரளத்திலும் கணிசமான அளவுக்கு கூடி வருகிறது கரோனா. சனிக்கிழமை நிலவரப்படி, 233 பேர் கேரளத்தில் கரோனா வைரஸின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். 19,538 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 36,539 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாநிலத்தில் 616 பகுதிகள் கரோனா ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கேரளத்தில் இந்த அளவுக்கு கரோனா அதிகரிக்க பொதுப் போக்குவரத்தும், வளைகுடா நாடுகளில் இருந்து திரும்பியோரும் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய கேரள சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பொது முடக்க காலம் முழுவதும் கேரளத்தில் கரோனா கட்டுக்குள்தான் இருந்தது. ஊரங்கு தளர்வுகள் நாடு முழுவதும் தொடங்கிய போதுதான் கேரளத்தில் கரோனாவும் அதிகரிக்கத் தொடங்கியது. கேரளாவைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கானோர் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர். தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அவர்கள் இங்கு அழைத்து வரப்பட்டனர்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனியாகவும், நோய் தொற்றாதவர்களை தனியாகவும் அழைத்து வர வேண்டும் என்பது உட்பட கேரள அரசு சில நிபந்தனைகளை வைத்தது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ‘‘வளைகுடா நாட்டில் இருப்பவர்களின் பணம் மட்டுமே கேரள அரசுக்கு வேண்டும். அவர்களின் உயிர் அல்ல’’ என்பதைப் போல் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

வளைகுடாவில் இருந்து வந்தவர்களில் நோய் தொற்றியோர், அவர்களோடு தொடர்பில் இருந்தோர் என பலருக்கும் நோய் கண்டறியப்பட்டது. இத்தனைக்கும் வளைகுடாவில் இருந்து வந்த அனைவரையும் முழு உடல் கவசத்தோடே அழைத்து வந்தனர்.

ஊரடங்கு அமலுக்கு வந்ததும், தொழிற்கூடங்கள் பலவும் இயங்கத் தொடங்கிவிட்டன. அருகாமை மாவட்டங்களுக்குள் பேருந்து சேவை இன்னும் இயங்குகிறது. இதுவும்கூட கரோனாவை கூட்டியிருக்கும் என்று யோசித்து வருகிறார்கள்.

கரோனா தாக்கியவரோடு தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடித்து சோதனை செய்ய தொடக்கத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகளையே பயன்படுத்தி வந்தனர். ஆனால் நோய் தொற்றியவர்கள் முழுமையானத் தகவல்களை தருவதில்லை என்பதால் இந்த தகவல்களைத் திரட்டும் வேலையை காவல் துறை வசம் ஒப்படைத்தது அரசு. இதனால் தனிப்பட்ட சுதந்திரம் பறிபோவதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கிளப்பின.

நவம்பரில் கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. அதை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சிகள் அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கின்றன. கேரள அரசும் அதற்காக சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதுபோக கேரளத்தில் ரயில் சேவையும் இயக்கப்பட்டு வருகிறது.

இது எல்லாவற்றையும்விட கேரளம், இந்த கரோனா காலத்தில் தொடர்ந்து பேரிடர்களையும் சந்திக்கிறது. பெருமழை, நிலச்சரிவு, கரிப்பூர் விமான விபத்து என அடுத்தடுத்து சோக சம்பவங்கள் நடந்து விட்டன. இங்கெல்லாம் மீட்புப் பணியிலும், களத்திலும் சமூக இடைவெளி சாத்தியமா? கரிப்பூர் விமான நிலையத்தை உள்ளடக்கிய மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணனுக்கும் இப்படித்தான் நோய் தொற்றியது. அவரோடு அரசுப் பணி விவகாரமாக தொடர்பில் இருந்த முதல்வர் உட்பட 7 அமைச்சர்களும் சுய தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவத்தையும் கேரளம் கடந்தது.

வரும் 31-ம் தேதி ஓணம் பண்டிகை வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்களுக்கு கோலாகலமாக நடக்கும் ஓணம் கொண்டாட்டம் இந்த முறை களையிழந்துள்ளது. வீடுகளுக்குள் மட்டுமே அத்தப்பூ கோலமிட்டு குடும்பத்துக்குள்ளே கொண்டாட அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதைக் கேட்காதபட்சத்தில், வழக்கம் போல் ஓணத்தைக் கொண்டாட வீதிக்கு வந்தால் கரோனா கேரளத்தில் இம்மாத இறுதியிலேயே புதிய உச்சத்தைத் தொடும் அபாயமும் இருக்கிறது.

இவ்வாறு சுகாதாரத் துறை அதிகாரி கூறினார்.

கேரளத்தில் வரும் செப்டம்பரில் தினமும் 20 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா எச்சரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்