பெங்களூருவில் பகலில் கட்டுமானப் பணி செய்துகொண்டு, இரவில் மண்ணெண்ணெய் விளக்கில் கஷ்டப்பட்டு படித்த மாணவர் 10-ம் வகுப்பு தேர்வில் 98 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
கர்நாடகாவில் கரோனா பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்பு தேர்வு கடந்த ஜூலையில் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 11-ம் தேதி வெளியானது. இதில் பெங்களூரு ஜீவன்பீமா நகரில் உள்ள அரசுஉயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் மகேஷ் 98 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலே முதல் இடத்தை பிடித்துள்ளார். மொத்தமுள்ள 625 மதிப்பெண்ணுக்கு 616 மதிப்பெண் பெற்றதோடு, கன்னடத்தில் 125க்கு 125 மதிப்பெண்ணையும், கணக்கு மற்றும் இந்தியில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த கர்நாடக தொடக்க கல்வி அமைச்சர்சுரேஷ் குமார் மாணவர் மகேஷைசந்திக்க விரும்பினார்.
குடிசைக்கே சென்ற அமைச்சர்
கல்வி அதிகாரிகளின் மூலம்அவரது முகவரியை கண்டறிந்த சுரேஷ்குமார் இரு தினங்களுக்கு முன்பு ஜீவன்பீமா நகரில் உள்ளகுடிசைப் பகுதியில் வாடகை குடிசையில் வாழும் மகேஷை சந்தித்தார். அப்போது அவருக்கு மாலை அணிவித்து, அன்பளிப்பாக தனதுசொந்தப் பணத்தில் இருந்து ரூ.5 ஆயிரத்தை வழங்கினார். மேலும்மாணவர் மகேஷின் உயர்கல்விக்கு தேவையான உதவிகளைசெய்யுமாறு கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து மகேஷ் (17) ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
எங்களுடைய சொந்த ஊர் வடகர்நாடகாவில் உள்ள யாதகிரி. எனக்கு 5 வயசு இருக்கும் போதே அப்பா இறந்துவிட்டார். என் அம்மா மல்லம்மா மிக குறைந்த கூலிக்கு மிகவும் கஷ்டப்பட்டு எங்களை காப்பாற்றினார். குடும்பத்தை சமாளிக்க முடியாததால் என் அண்ணன் விஷால் ராஜ் படிப்பை நிறுத்திவிட்டு, பெங்களூருவில் கட்டுமானப் பணிக்கு சென்றார்.
அதன்பின் யாதகிரியில் அம்மாவுக்கு வேலை தொடர்ச்சியாக கிடைக்காததால் என்னையும் தம்பியையும் பெங்களூரு அழைத்து வந்துவிட்டார். அவருக்கு பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை கிடைத்தது. நானும் என் தம்பியும் இந்த குடிசையில் இருந்தவாறு ஜீவன்பீமா நகர் அரசு பள்ளியில் போய் சேர்ந்தோம்.
விடுமுறை நாட்களில் அண்ணனோடு கட்டுமான வேலைக்கு போவேன். வீட்டில் மின்சார வசதிஇல்லாததால் சோலார் விளக்கில்தான் படிப்பேன். பெரும்பாலானநேரங்களில் அது அணைந்துவிடுவதால் மண்ணெண்ணெய் விளக்கிலே படிப்பேன். எங்களோட பள்ளியில் இந்தி, கன்னடம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.
எனது சமூக அறிவியல் ஆசிரியர் பீம் ராவ் தான் எனக்குகன்னட பாடத்தையும் நடத்தினார். இந்தி பாடத்தை நானே புத்தகம்துணைக் கொண்டு படித்தேன். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது என்னிடம் ஆன்டிராய்டு செல்போன் இல்லாததால் ஆன் லைன் வகுப்பை கவனிக்க முடியவில்லை. புத்தகம், வழிகாட்டியை மட்டுமே முழுமையாக நம்பி படித்தேன்.
இதனிடையே யாதகிரி சென்ற என் அண்ணன் ஊரடங்கு உத்தரவால், பெங்களூரு திரும்ப முடியாமல் போனது. எனவே குடும்பத்தை காப்பாற்ற நான் கட்டுமான வேலைக்கு போக ஆரம்பித்தேன். பகலில் வேலை செய்துவிட்டு, இரவில் வீட்டுக்கு வந்தால் உடல் வலி அதிகமாக இருக்கும். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு படித்தேன். 90 சதவீத மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் 98 சதவீத மதிப்பெண்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு மகேஷ் கூறினார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago