முதல் அரசியல் தலைவர்: ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநராகப் பதவி ஏற்றார் மனோஜ் சின்ஹா

By பிடிஐ

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மனோஜ் சின்ஹா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டபின், அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக அங்கு துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்து.

ஸ்ரீநகரில் உள்ள துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைக்க, மனோஜ் சின்ஹா பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்தப் பதவி ஏற்பு விழாவுக்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா இருவரும் அழைக்கப்பட்ட நிலையில் அவர்கள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர். பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியை விடுவித்தால்தான் ஜனநாயகம் உருவாகும் எனக் கூறி நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படாதபோது, பாஜகவைச் சேர்ந்த சத்யபால் மாலிக் ஆளுநராக இருந்தார். அதன்பின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.

மாநிலம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில் முதல் துணைநிலை ஆளுநராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டிருந்தார். கிரிஷ் சந்திர முர்மு, தற்போது மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக நியமிக்கப்படுவதையொட்டி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் மனோஜ் சின்ஹாவைத் துணைநிலை ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.

துணைநிலை ஆளுநராகப் பதவி ஏற்றபின் நிருபர்களுக்கு மனோஜ் சின்ஹா அளித்த பேட்டியில் கூறுகையில், “ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் சொர்க்கம். ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள். நீண்டகாலமாகத் தனிமைப்படுத்தி இருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலம், தேசிய நீரோட்டத்தில் இணைந்தது.

பல ஆண்டுகளாக முடிக்கப்படாத பல பணிகள் கடந்த ஓராண்டில் முடிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்துவேன். யாரையும் பாகுபாடு காட்டி நடத்தமாட்டேன். அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் மக்களின் நலனுக்காகவே பயன்படும். மக்களின் உண்மையான குறைகள் கேட்கப்பட்டு அது விரைவாக உரிய முறையில் தீர்க்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். காஷ்மீரை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வது எனது குறிக்கோள்” எனத் தெரிவித்தார்.

வளர்ச்சியின் நாயகன் என்று அழைக்கப்படும் 61 வயதாகும் மனோஜ் சின்ஹா, கடந்த 1959-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் காஜிப்பூர் மாவட்டம், மோகன்புரா கிராமத்தில் பிறந்தவர்.

கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகத் தீவிரமாகப் பணியாற்றியவர் மனோஜ் சின்ஹா. பனாரஸ் ஐஐடியில் சேர்ந்து கடந்த 1982-ம் ஆண்டு படித்தபோது மாணவர்கள் அமைப்பில் சேர்ந்தார். அப்போது அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. கடந்த 1996-ம் ஆண்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சின்ஹா, 1999-ம் ஆண்டிலும் மீண்டும் தேர்வானார்.

கடந்த 1989-ம் ஆண்டிலிரு்து 1996-ம் ஆண்டுவரை பாஜகவின் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக மனோஜ் சின்ஹா இருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது அப்போதும் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார். 2019-ம் ஆண்டு தேர்தலில் காஜிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு மனோஜ் சின்ஹா தோல்வி அடைந்தார்.

இதற்கு முன், ரயில்வே துறையின் இணையமைச்சராகவும், தகவல் தொழில்நுட்பத் துறைக்குத் தனிப்பொறுப்பு அமைச்சராகவும் மனோஜ் சின்ஹா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோஜ் சின்ஹா தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் ஸ்பெக்ட்ரம் ஏலம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்