2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 5 தேசியக் கட்சிகள் உள்பட 10 அரசியல் கட்சிகள் போட்டியிட்டுச் செலவிட்டதில் பாதிக்கு மேல் அதாவது 54 சதவீதம் பாஜக மட்டும் செலவு செய்துள்ளது என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) தகவல் வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இருந்து இந்தத் தகவலை ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) எடுத்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 5 தேசியக் கட்சிகளும், சிவசேனா, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், அனைத்து இந்திய ஃபார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இந்தக் கட்சிகளின் தேர்தல் செலவுகள் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.
அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 5 தேசியக் கட்சிகளும், சிவசேனா, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், அனைத்து இந்திய ஃபார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.
இதில் 5 தேசியக் கட்சிகள் சேர்ந்து தேர்தலில் ரூ.1,309.846 கோடி செலவிட்டுள்ளன. மாநிலக் கட்சிகளான சிவசேனா, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி ஆகியவை சேர்ந்து ரூ.96.68 கோடி செலவிட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் 5 தேசியக் கட்சிகள் செலவிட்ட ரூ.1,309 கோடியில் 54 சதவீதம் அதாவது, ரூ.763.31 கோடியை பாஜக மட்டும் செலவிட்டுள்ளது. 2-வது இடத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.489.97 கோடி செலவிட்டுள்ளது. இது மொத்த செலவில் 34.85 சதவீதமாகும். பகுஜன் சமாஜ் கட்சி ரூ.55.39 கோடி அதாவது 3.94 சதவீதம் செலவிட்டுள்ளது.
இதில் சமாஜ்வாதிக் கட்சி ரூ.50.65 கோடியும், சிவசேனா ரூ.ரூ.38.45 கோடியும், ஆம் ஆத்மி ரூ.7.57 கோடியும், தேசியவாத காங்கிரஸ் ரூ.55 லட்சமும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.62 லட்சமும் செலவிட்டுள்ளன.
ஆனால், மீதமுள்ள ஐக்கிய ஜனதா தளம், ஃபார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் எந்தச் செலவும் செய்யவில்லை எனத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.
அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்தச் செலவில் 99 சதவீதம் அந்தக் கட்சிகளின் தலைமை அலுவலகத்திலிருந்து செலவிடப்பட்டுள்ளது. மாநில அமைப்புகளில் இருந்து செலவிட்டது மிகக்குறைவாகும்.
விளம்பரச் செலவு
உ.பி.யில் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் பணத்தை தேர்தல் நேரத்தில் பல்வேறு வகைகளுக்குச் செலவிட்டுள்ளன. அதில் அதிக முன்னுரிமை விளம்பரத்துக்கும், 2-வதாக போக்குவரத்துக்கும், 3-வதாக இதர செலவுக்கும், 4-வதாக வேட்பாளருக்கு ரொக்கமாக அளித்ததாகவும் தெரிவித்துள்ளன.
இதில் 10 கட்சிகள் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து தேர்தல் நேரத்தில் விளம்பரத்துக்காக ரூ.813.13 கோடி செலவிட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ரூ.341.68 கோடி போக்குவரத்துச் செலவுக்கும், ரூ.241.95 கோடி இதர செலவினங்களுக்கும், ரூ.64.08 கோடி வேட்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
ஊடகம் மூலம் விளம்பரம் செய்தல் மற்றும் பதாகைகள், சுவரொட்டிகள், பதாகைகள் வைத்தல் என விளம்பரத்தைப் பிரிக்கலாம். இதில் ஊடகம் மூலம் விளம்பரத்துக்கு ரூ.696 கோடியும், அச்சு விளம்பரத்துக்கு ரூ.95.85 கோடியும், பொதுக்கூட்டங்கள் நடத்த ரூ.20 கோடியும் அரசியல் கட்சிகளால் செலவிடப்பட்டுள்ளது.
ஊடக விளம்பரத்தில் காங்கிரஸ் முதலிடம்
இந்த விளம்பரச் செலவில் ஊடகம் மூலம் விளம்பரம் செய்ய காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக ரூ.356.10 கோடி செலவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாஜக ரூ.327 கோடியும், சிவசேனா ரூ.7.25 கோடியும் செலவிட்டுள்ளன.
ஒட்டுமொத்தச் செலவு
ஒட்டுமொத்தமாக அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து ரூ.1,461.13 கோடியை விளம்பரம், போக்குவரத்து, இதர செலவு, வேட்பாளருக்கு எனச் செலவிட்டுள்ளன. இந்த ஒட்டுமொத்த தொகையில் 55.65 சதவீதம் விளம்பரத்துக்காக மட்டும் செலவிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து போக்குவரத்துக்கு 23.38 சதவீதமும், இதர செலவுக்கு 16.56 சதவீதமும் செலவிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் ஆகிய மூன்று தேசியக் கட்சிகளில் அதிகபட்சமாக ரூ.782.37 கோடி பாஜக செலவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ரூ.525.16 கோடி காங்கிரஸ் கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சி ரூ.55 கோடியும் செலவிட்டுள்ளன.
இதில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக ரூ.402 கோடி விளம்பரத்துக்கு மட்டும் செலவிட்டுள்ளது. விளம்பரத்துக்காக அனைத்துக் கட்சிகளும் செலவிட்டதில் 49 சதவீதம் காங்கிரஸ் செலவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாஜக ரூ.376.62 கோடி அதாவது 46.32 சதவீதம் செலவிட்டுள்ளது.
இதர செலவுகள்
இதர செலவுகள் வகையில் அரசியல் கட்சிகள் சேர்ந்து ரூ.241.95 கோடி செலவிட்டுள்ளன. இதில் பாஜக அதிகபட்சமாக ரூ.214.28 கோடி (88 சதவீதம்) செலவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சமாஜ்வாதி ரூ.17.44 கோடி (7.21 சதவீதம்), சிவசேனா ரூ.8.90 கோடி செலவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.52 லட்சம் செலவிட்டுள்ளது.
ஒட்டுமொத்த தேர்தல் நிதி:
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 5 தேசியக் கட்சிகள் சேர்ந்து ரூ.4,529.56 கோடி தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளன. இதில் சிவசேனா, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், அனைத்து இந்திய ஃபார்வர்ட் பிளாக் ஆகிய மாநிலக் கட்சிகள் சேர்ந்து ரூ.153.56 கோடி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக இந்த 10 கட்சிகளும் சேர்ந்து ரூ.4,683.12 கோடி தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளன.
அதிகபட்சமாக பாஜக ரூ.3,682.06 (78.62%) கோடி தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ரூ.843.92 (18%) கோடியும், சிவசேனா கட்சி ரூ.100.59 கோடியும் (2.15%) நிதியாகப் பெற்றுள்ளன''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago