உலகின் சிறந்தவற்றுடன் இந்திய மாணவர்கள் போட்டியிட முடியும்: புதிய கல்விக் கொள்கைக்கு சந்திரபாபு நாயுடு பாராட்டு

தேசிய கல்விக்கொள்கை 2020, இந்திய மாணவர்களை உலகின் சிறந்தவற்றுடன் போட்டிக்குத் தயார்ப்படுத்தும் என்று தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, “ நரேந்திர மோடிஜி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 2020 தேசியக் கல்விக் கொள்கையை நான் வரவேற்கிறேன்.

இந்தச் சீர்த்திருத்தம் கல்வித்துறையை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். உலகம் முழுதும் சிறந்த மாணவர்களுடன் இந்திய மாணவர்கள் போட்டியிட இந்தக் கல்வி முறை வழிவகுக்கும்.

இந்தக் கல்விக் கொள்கை 5ம் வகுப்பு வரை தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழியை பாடம்புகட்டும் முறையாக வலியுறுத்துகிறது. நிச்சயமாக இது வரவேற்கத்தகுந்த முறையே.

இதன் மூலம் குழந்தைகளுக்கு விமர்சனச் சிந்தனை வளர்வதோடு இலக்கியத் திறன்களும் இதனால் கல்வியில் சிறப்பாகவும் செயல் பட முடியும்.” என்று பாராட்டியுள்ளார்.

ஆனால் நாட்டின் பன்முகத்தன்மை, கூட்டாட்சிக் கோட்பாடுகளை சீர்குலைக்கும் புதிய கல்விக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மதிமுகவின் வைகோ இதனை கண்டித்துள்ளார். வைகோவின் பார்வை என்னவெனில், “பிரதமர் தலைமையில் அமைக்கப்படும் ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக் (RSA) எனப்படும் தேசிய கல்வி ஆணையம் உயர் அதிகாரம் கொண்டதாக இருக்கும்.

மழலையர் பள்ளியிலிருந்து உயர் கல்வி, ஆராய்ச்சி மையம் வரை ஒட்டுமொத்தக் கல்வித்துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கக்கூடிய அமைப்பாக தேசியக் கல்வி ஆணையம் இருக்கும்.

கல்விக் கொள்கை, நிதி ஒதுக்கீடு, கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, தர நிர்ணயம் வழங்குவது, பாடத் திட்டங்கள் உருவாக்கம் போன்ற அனைத்தும் இந்த ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

மாநிலங்கள், தேசிய கல்வி ஆணையத்தின் உத்தரவுகளைக் கீழ்பணிந்து நிறைவேற்ற வேண்டும். மாநில அரசுகளுக்கு இனி கல்வித்துறை தொடர்பான எள்ளளவு அதிகாரம்கூட கிடையாது.

மாநில உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சிக் கோட்பாட்டைச் சிதைக்கும் புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டுமா?

பல்வேறு மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள இந்திய நாட்டில், தேசிய இனங்களின் அடையாளத்தை அழித்து ஒரே நாடு; ஒரே பாடத்திட்டம் என்று திணிப்பதை எப்படி சகிக்க முடியும்?

மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கி இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தைத் திணிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்துத்துவ சனாதான வேதகால நம்பிக்கை முறையுடன் மதிப்புமிக்க கல்வியை இணைத்து மையப்படுத்தப்பட்ட ஒரு தேசிய ஆய்வு நிறுவனம் (National Research Foundation -NRF) உருவாக்குவது என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்த்துவிடும்” என்கிறார் வைகோ.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE