பி.பி.இ. உடை தயாரிப்பு; 6 மாதங்களுக்கு முன்பு ஒரு நிறுவனம் கூட இல்லை- இன்று இந்தியா 2-வது பெரிய நாடு: பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

ஆறு மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்பு உடை (பி.பி.இ.) தொகுப்பு தயாரிக்கும் வசதி ஒரு நிறுவனத்தில் கூட இல்லாத நிலை இருந்ததாகவும் தற்போது பி.பி.இ. உடை தயாரிப்பில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக மாறியுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

உயர் செயல்திறன் உள்ள மூன்று கோவிட்-19 மருத்துவப் பரிசோதனை மையங்களை பிரதமர் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இவை கொல்கத்தா, மும்பை மற்றும் நொய்டாவில் உள்ள ஐ.சி.எம்.ஆர்.-இன் தேசிய மையங்களில் அமைந்துள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி இந்த பரிசோதனை நிலையங்கள் கோவிட் நோய்க்கான பரிசோதனைகளை செய்பவையாக மட்டும் இருக்காது, எதிர்காலத்தில் ஹெப்படைட்டிஸ் பி மற்றும் சி, எச்.ஐ.வி., டெங்கு காய்ச்சல் மற்றும் வேறு பல நோய்களுக்கான பரிசோதனை செய்யும் வசதிகளைக் கொண்டதாகவும் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மத்திய அரசு சரியான நேரத்தில் எடுத்த முடிவுகள் காரணமாக, கோவிட் பாதிப்பால் மற்ற நாடுகளில் ஏற்பட்டதை விட இந்தியாவில் மரணத்தின் விகிதம் குறைவாக உள்ளது என்றும் பிரதமர் கூறினார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் குணம் அடைபவர்களின் விகிதமும் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் அதிகமாக உள்ளது என்றும், நாளுக்கு நாள் இது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றும் தெரிவித்தார். இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடவிருக்கிறது என்றார் அவர்.

கரோனா நோய்க்கான சிகிச்சைக்காக விசேஷக் கட்டமைப்பு வசதிகளை வேகமாக உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இதற்கான நடவடிக்கைகள் தொடங்கிய சமயத்தில், இதற்காக மத்திய அரசு ரூ.15,000 கோடி ஒதுக்கியதை அவர் நினைவுகூர்ந்தார். இப்போது நாட்டில் 11,000க்கும் மேற்பட்ட கோவிட் சிகிச்சை மையங்களும், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தல் படுக்கைகளும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கோவிட் பாதிப்பைக் கண்டறிய ஜனவரி மாதத்தில் ஒரே ஒரு பரிசோதனை நிலையம் மட்டுமே இருந்த நிலையில், இப்போது ஏறத்தாழ 1300 பரிசோதனை நிலையங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். இப்போதைய நிலவரத்தின்படி நாட்டில் தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்றும், வரக் கூடிய வாரங்களில் இதை 10 லட்சமாக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாகவும் பிரதமர் கூறினார்.

தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்பு உடை (பி.பி.இ.) தயாரிப்பில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக மாறியுள்ளது என்று அவர் தெரிவித்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு பி.பி.இ. உடை தொகுப்பு தயாரிக்கும் வசதி ஒரு நிறுவனத்தில் கூட இல்லாத நிலை இருந்தது. இப்போது 1200 நிறுவனங்கள் இதைத் தயாரிக்கின்றன. தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பி.பி.இ. உடைகள் தயாரிக்கப்படுகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.

என்-95 வகை முகக்கவச உறைகளுக்கு இறக்குமதியை மட்டுமே சார்ந்திருந்த நிலை மாறி, இந்தியாவிலேயே தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட என்-95 முகக்கவச உறைகள் தயாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அதேபோல ஆண்டுக்கு 3 லட்சம் வென்டிலேட்டர்கள் தயாரிக்கும் திறன் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், மருத்துவத்துக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் விவரித்தார். இவையெல்லாம் மனித உயிர்களைக் காப்பாற்ற உதவியதுடன் மட்டுமின்றி, இறக்குமதி செய்யும் நிலையில் இருந்து ஏற்றுமதி செய்யும் நாடு என்ற மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

ஊரகப் பகுதிகளில் நோய் பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், புதிய சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதுடன், ஏற்கெனவே கிராமங்களில் உள்ள சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

பொருள்கள் அளவிலான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதுடன், மனிதவளத்தை உருவாக்குவதிலும் அரசு வேகமாக நடவடிக்கைகள் எடுத்துள்ளது. துணை மருத்துவ அலுவலர்கள், ஆஷா திட்டப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோரை நியமித்தது பற்றி குறிப்பிட்டார். நோய் பரவாமல் தடுப்பதில் இவர்கள் முக்கிய பங்காற்றுவதை அவர் சுட்டிக்காட்டினார். கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு அயற்சி ஏற்படாமல் தடுப்பதற்காக ஓய்வுபெற்ற சுகாதார நிபுணர்களின் சேவைகளைப் பயன்படுத்துவது, புதியவர்களை ஈடுபடுத்துவது என தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

வரக்கூடிய திருவிழா காலங்களில், நோய் பரவாமல் தடுப்பதற்காக, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். பிரதமரின் கரீப் கல்யாண் அன்னயோஜ்னா திட்டத்தின் பயன்கள், உரிய நேரத்தில் ஏழைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று அவர் கூறினார். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் காலம் வரையில் 2 கெஜ தூரம் இடைவெளி பராமரித்தல், முகக்கவச உறை அணிதல், கைகளில் கிருமி நீக்கம் செய்தல் ஆகியவை தான் தங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மக்களுக்கு இருக்கும் வழிமுறைகள் என்றும் பிரதமர் கூறினார்.

இப்போது நாடு முழுக்க கோவிட் மருத்துவப் பரிசோதனை நிலையங்களின் வசதிகள் இருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்தார். தேசிய தலைநகரில் கோவிட் பரவாமல் தடுப்பதற்கு டெல்லி முதல்வருடன் மத்திய உள்துறை அணைச்சர் இணைந்து செயல்படுவது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவப் பரிசோதனை நிலையங்கள் தொடங்கப்பட்டிருப்பது குறித்து பிரதமருக்கு முதல்வர்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர். கடுமையான சூழ்நிலையில் தலைமை ஏற்று செயல்படுவதாக பிரதமருக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே புகழாரம் சூட்டினார். மும்பையில் மேற்கொள்ளப்படும் `வைரஸை விரட்டுவோம்' முன்முயற்சி பற்றி விளக்கிய அவர், நிரந்தரமாக தொற்றுநோய் மருத்துவமனைகளை உருவாக்க வேண்டியது அவசியமானது என்று கூறினார்.

மாநிலங்களுடன் ஒத்துழைப்பு பாணியை கடைபிடிக்கும் பிரதமரின் செயல்பாட்டுக்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பாராட்டு தெரிவித்தார். நோய் பாதித்தவர்களைத் தடமறிதல், டெலி மருத்துவ வசதிகளைப் பயன்படுத்துதல் பற்றியும், மாநிலத்தில் இப்போதுள்ள மருத்துவப் பரிசோதனை நிலையங்களின் வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும் அவர் பேசினார்.

கரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக ஓய்வின்றி உழைத்து வரும் பிரதமருக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்தார். இன்று தொடங்கப்பட்டுள்ள பரிசோதனை நிலையங்கள் காரணமாக, பரிசோதனைக்கான நேரம் வெகுவாகக் குறையும் என்று அவர் கூறினார். மாநிலத்தில் மருத்துவப் பரிசோதனை வசதியை அதிகரிப்பது பற்றி குறிப்பிட்ட அவர், தினசரி ஆண்டிஜென் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

49 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்