கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க வரும் 31-ல் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும்: ராஜஸ்தான் ஆளுநருக்கு முதல்வர் அசோக் கெலாட் மீண்டும் கடிதம்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து விவாதிக்க வரும் 31-ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு முதல்வர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. துணை முதல்வராக பதவி வகித்த சச்சின் பைலட்டுக்கும் முதல்வர் கெலாட்டுக்கும் இடையே ஆரம்பம் முதல் மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி ஆகியவை பறிக்கப்பட்டன.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, சிதம்பரம் உள்ளிட்டோர் தனித்து செயல்பட்டு வரும் சச்சின் பைலட்டை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. எனவே, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இதற்காக ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

இதையடுத்து, சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்ட அசோக் கெலாட், பேரவையைக் கூட்டுவதற்கு அனுமதி கேட்டுஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்தார்.

ஆனால் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராஎந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் அசோக் கெலாட்தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் ஆதரவு எம்எல்ஏ-க்களுடன்ஆளுநர் மாளிகைக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஆளுநர், சட்டப் பேரவையைக் கூட்டுவதற்கான காரணம் மற்றும் தேதியுடன் கூடிய புதிய கடிதத்தை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனிடையே நேற்று முன்தினம், ஜெய்ப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள தனது ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் அசோக் கெலாட் ஆலோசனை நடத்தினார்.

அப்போது முதல்வர் அசோக் கெலாட் பேசும்போது, “தேவைப்பட்டால் நாம் டெல்லி சென்று குடியரசுத் தலைவரையும் சந்திப்போம். மேலும், டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம் முன்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார். இதனிடையே 2-வது கடிதத்தை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு முதல்வர் அசோக் கெலாட் நேற்று அனுப்பியுள்ளார்.

அதில் அவர், “கரோனா வைரஸ் பரவல் குறித்து பேரவையில் எம்எல்ஏ-க்களுடன் விவாதிக்க வேண்டும். இதற்காக வரும் 31-ம்தேதி சட்டப் பேரவையைக் கூட்டவேண்டும். வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அவையில் விவாதம் நடத்த வேண்டியது அவசியம்” என கூறியுள்ளார்.

ஆனால் இந்தக் கடிதத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஒரு வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்த முறை பேரவையைக் கூட்டுவதற்கு, ஆளுநர் அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஜனநாயகப் படுகொலை’

ஜனநாயகத்துக்காக பேசுங்கள் என்ற ஹேஷ்டேக்குடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒரு வீடியோவை நேற்று வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:இன்று ஒட்டுமொத்த நாடும் கரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் நிலையில், பாஜகவோ அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்கும் செயலில் இறங்கியுள்ளது. 2018-ம் ஆண்டு ராஜஸ்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை, சதி செய்து கவிழ்க்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் செய்ததை போல, ராஜஸ்தானிலும் ஜனநாயக படுகொலையை பாஜக அரங்கேற்றுகிறது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கள் அரசியலமைப்பு உரிமைகளை மதித்து உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும். எங்களுடன் இணைந்து ஜனநாயகத்துக்காக குரல் கொடுங்கள். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்