அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வரும் ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் முன்னிலையில் பூமி பூஜை நடத்தப்படுவதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளதையடுத்து அயோத்திக்குச் சென்று இன்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ராமரைக் கும்பிட்டு வந்தார்.
பிற்பாடு ராமர் கோயில் அறக்கட்டளைக் குழுவிடம் பேசிய யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகளை விரிவாகக் கேட்டறிந்தார்.
ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் அடிக்கல் நாட்டவிருக்கிறார். அடிக்கல் நாட்டு விழா முடிந்த பிறகு ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். இதில் பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோஹன் பாகவத், ஆகியோர்கள் பங்கு பெறுவார்கள் என்று தெரிகிறது.
பூமி பூஜையை தீபாவளிப் பண்டிகை போல் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தீபாவளி போல் விளக்குகள், மெழுகுவர்த்திகள் ஏற்றி வீடுகள் தோறும் நாடு முழுதும் உள்ள கோயில்கள் தோறும் பூமி பூஜையை ஒளிர்விக்கவிருப்பதாகத் தெரிகிறது.