கேரளாவில் இன்று 885 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:
இன்று நமக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு உள்ளது. இன்று நோய் உறுதி செய்யப்பட்டவர்களை விட கூடுதல் பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்று 885 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அதைவிட அதிகமாக 968 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை கேரளாவில் 16,995 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 724 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவி உள்ளது. இதில் 56 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது என தெரியவில்லை.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 64 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 68 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளவர்கள் ஆவர். இன்று சுகாதாரத் துறையை சேர்ந்த 24 பேருக்கு நோய் பரவி உள்ளது. கரோனா பாதித்து இன்று 4 பேர் மரணமடைந்தனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 46 வயதான முருகன் என்பவரும், காசர்கோட்டை சேர்ந்த 48 வயதான கைருன்னிசா என்பவரும், இதே மாவட்டத்தைச் சேர்ந்த 68 வயதான மாதவன் என்பவரும், ஆலப்புழாவை சேர்ந்த 85 வயதான மரியாம்மா என்பவரும் இன்று மரணமடைந்தனர்.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 167 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 133 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 106 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 82 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 69 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், தலா 58 பேர் பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களையும், 50 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 44 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 33 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 29 பேர் இடுக்கி மாவட்டத்தையும், 23 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 18 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 15 பேர் வயநாடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,564 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9, 371 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 25,160 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தற்போது கேரளாவில் பல்வேறு பகுதிகளில் 1,56,767 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,47,470 பேர் வீடுகளிலும், 9,297 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 1,346 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதுவரை 3,38,038 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 9,185 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 1,09,635 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 1,05,433 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது.
கேரளாவில் தற்போது 453 நோய் தீவிர உள்ள பகுதிகள் உள்ளன. கேரளாவில் இன்று புதிதாக நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை விட குறைந்துள்ளது. ஆனால் பல பகுதிகளில் நோயின் தீவிரம் மிக அதிகமாக உள்ளது. எனவே அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருவனந்தபுரம் மாவட்டத்தில் பூந்துறை, பீமாபள்ளி உள்பட 5 பகுதிகளில் நோய் பரவல் அதிக அளவில் உள்ளது. இந்த பகுதிகளில் இதுவரை நோயின் தாக்கம் குறையவில்லை. இந்தப் பகுதிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கும் நோய் பரவி வருகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் 17 முதல் நிலை கரோனா சிகிச்சை மருத்துமனைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 2,103 படுக்கைகள் உள்ளன.
மேலும் 18 மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன. இதில் 1,817 படுக்கைகள் இருக்கும். திருவனந்தபுரம் புல்லுவிளை பகுதியில் கடந்த 10 நாட்களில் 671 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 288 பேருக்கு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதன்முதலில் கரோனா நோய் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் சிறந்த தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நோய் பரவலை பெருமளவு கட்டுப்படுத்த முடிந்தது. முதல் இரண்டு கட்டங்களில் நோய் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் மூன்றாவது கட்டத்தில் நோய் பரவும் வேகம் அதிகமாக இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான். கேரளாவில் கரோனா மூலம் ஏற்படும் மரணத்தையும் குறைக்க முடிந்தது.
உலகின் மற்ற நாடுகளில் மரண சதவீதம் 4 முதல் 10 வரை உள்ளது. ஆனால் கேரளாவில் வெறும் 0.33 சதவீதம் மட்டுமே உள்ளது. இது நம்முடைய சாதனையாகும். நேற்று வரை கரோனா நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,110 ஆகும். 50 பேர் மரணமடைந்தனர். இந்தியாவிலேயே கரோனா பரிசோதனையில் கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலில் ஆலப்புழாவில் மட்டுமே பரிசோதனை கூடம் இருந்தது. ஆனால் தற்போது பரிசோதனை கூடங்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் ஆன்டிஜன் பரிசோதனைக்காக 10 பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் 100 க்கு கீழ் மட்டுமே கரோனா பரிசோதனை நடத்தப்பட்டன. ஆனால் தற்போது பரிசோதனைகள் 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 25,160 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. எனவே கேரளாவில் குறைவாக பரிசோதனைகள் நடத்தப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளின் உதவியும் கோரப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் நோய் பரவுதல் அதிகரித்து வருகிறது. இது அதிபரவலாக மாறாமல் இருக்க சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் விவசாயிகளுக்கு ரூபாய் 77 கோடி மதிப்பிலான உதவி திட்டங்களை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி விவசாயிகளுக்கு பசுமாடுகள், ஆடுகள், கால்நடை தீவனம் ஆகியவை மானியமாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago