ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்தில் 50 சதவீதம் இந்தியாவுக்குத்தான். பெரும்பாலான மருந்துகளை அரசே வாங்குவதால், மக்கள் இலவசமாகவே தடுப்பூசி மூலம் பெறலாம் என்று செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிக் ஆகிய நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் உரிமத்தை செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மருந்து நிறுவனம் பெற்றுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்று செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா வைரஸுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தின் முதல்கட்டப் பரிசோதனை நல்ல முடிவுகளைக் கொடுத்துள்ளதாக கடந்த இரு நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.
தடுப்பு மருந்தானது மனிதர்களுக்குச் செலுத்துவதில் பாதுகாப்பாக உள்ளதாகவும், கரோனா கிருமிக்கு எதிரான வலுவான எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்டப் பரிசோதனை இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நடத்தி முடிக்க செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மருந்து நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடார் பூனாவல்லா தனியார் சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மருந்து நிறுவனம் கரோனா தடுப்பு மருந்தைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மருந்துக்கு கோவிஷீல்ட் என்று பெயரிட்டுள்ளோம்.
பரிசோதனை முயற்சிகள் அனைத்தும் சிறப்பாகச் சென்று, முடிவுகள் நமக்குச் சாதகமாக அமைந்தால், நிச்சயம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மருந்து நிறுவனம் கரோனா தடுப்பு மருந்தைத் தயாரிக்கும்.
இந்தத் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கும் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனைக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஆகஸ்ட் மாதத்துக்குள் 5 ஆயிரம் பேருக்கு செலுத்தப் பரிசோதிக்க இருக்கிறோம்.
நாங்கள் கரோனா மருந்து தடுப்பு மருந்து தயாரிக்கும் பட்சத்தில் அதில் 50 சதவீதத்தை இந்தியாவுக்கு வழங்கவே முடிவு செய்துள்ளோம். மற்றவற்றைப் பிற நாடுகளுக்கு மாதந்தோறும் முன்னுரிமை அடிப்படையில் வழங்குவோம். இந்திய அரசு எங்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.
உலக அளவில் கரோனா சிக்கல் என்ன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் மக்களுக்குத் தடுப்பு மருந்து கிடைக்கச் செய்ய சமமான முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நாங்கள் திட்டமிட்டபடி பரிசோதனை முடிவுகள் சென்றால், நவம்பர், டிசம்பர் மாதத்துக்குள் பல லட்சம் மருந்துகள் தயாரிக்க முடியும். 2021-ம் ஆண்டு முதல் காலாண்டுக்குள் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் 30 முதல் 40 கோடி மருந்துகள் தயாரிக்க முடியும்.
முதல்கட்டமாக நாங்கள் தயாரிக்கும் மருந்து யாருக்கு அதிகமாகத் தேவை என்பதையும், யாருக்கு வழங்க வேண்டும் என்பதையும் அரசுதான் முடிவு செய்யும். ஆனால், அறத்தின்படி மருந்தை வழங்க வேண்டுமென்றால், முதலில் முதியோருக்கும், அதன்பின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்போருக்கும், கரோனா ஒழிப்பில் முன்களத்தில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
கரோனா தடுப்பு மருந்தின் விலை குறித்து இப்போது சரியாகக் கூறமுடியவில்லை. ஆனால், கரோனா பரிசோதனைக்குக்கூட ரூ.2500 கட்டணம் செலுத்துகிறோம். ரெம்டெசிவிர் மருந்தை சில ஆயிரத்துக்கு நாம் வாங்குகிறோம். ஆதலால், 1000 ரூபாய்க்குள் எங்களின் கரோனா தடுப்பு மருந்து இருக்குமாறு விலை வைப்போம்.
எந்தத் தனிமனிதரும் மருந்துக்கு விலைகொடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால், பெரும்பாலான மருந்துகள் அரசால் வாங்கப்படுகின்றன. தடுப்பூசி முகாம்கள் மூலம் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் எங்கள் மருந்தை 2 அல்லது 3 டாலருக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். கரோனா தடுப்பு மருந்தை விலை குறைவாகக் கொடுக்க வேண்டும் என்று கொள்கை வகுத்துள்ளோம், பெருந்தொற்றால் நாடு சிக்கியிருக்கும்போது இதில் லாபம் பார்க்க விரும்பவில்லை.
கரோனா வைரஸ் தொற்று ஒழிந்துவிட்டால், மற்ற மருந்துகளைப் போல் வழக்கமான விலையில் சந்தையில் இந்த மருந்து கிடைக்கும். ஆனால், பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் உயர்ந்த விலைக்கு விற்கப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்''.
இவ்வாறு அடார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
44 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago