கடந்த 30 ஆண்டுகளாக கொடூர செயல்களில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட போதிலும், அவர் மீதான அச்சம் கான்பூர் மாவட்ட கிராமவாசிகளிடம் தொடர்வதாக அம்மாவட்ட காவல் துறை மூத்த கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) பி.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மேட்டூர் பகுதியில் உள்ளசின்னதண்டா கிராமத்து விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரான பி.தினேஷ் குமார் ஐபிஎஸ், விகாஸ் துபே வழக்கில் முதன்முறையாக ‘இந்து தமிழ்’ நாளேட்டிற்கு அளித்த சிறப்பு பேட்டி பின்வருமாறு:
நீங்கள் பொறுப்பேற்ற பின் விகாஸ் துபே பற்றி அறிந்த விவரம் என்ன? அவருடன் சந்திப்பு நடந்ததா?
நான் கான்பூரில் பொறுப்பு ஏற்ற 12 நாட்களில் இச்சம்பவம் நடந்தது. பிக்ருவில் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடந்த தகவல் கிடைத்த பிறகுதான் அப்படி ஒருவர் இருப்பது எனக்கு தெரிந்தது. தொடர்புடையவர்களின் காவல் நிலையத்தினர்தான் குற்றவாளிகளின் குற்றப் பின்னணி, ஆயுதங்கள் மற்றும் ஆட்கள் பலம் முழுவதும் அறிந்தவர்கள். இவர்கள் விகாஸை பற்றிய விவரங்களை எங்களிடம் மறைத்து விட்டனர்.
உத்தரபிரதேசத்தின் குற்றவாளிகள் பட்டியலில் விகாஸ் துபே இடம் பெற்றிருந்தாரா?
பல ஆண்டுகளாகக் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தும் விகாஸ்துபே மீது யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் பின்னணியை ஆராயவே மாநில அரசு எஸ்ஐடி குழுவை நியமித்துள்ளது. இதில் விகாஸுக்கு இதுவரை உதவிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருமே சிக்குவார்கள்.
பிக்ரு கிராமத்துக்கு சென்ற படையினர் போதுமான ஆயுதங்கள் மற்றும்போலீஸாருடன் செல்லவில்லை எனப் புகார் எழுந்ததே?
ஒரு சாதாரண கிராமத்தில் குற்றவாளியை கைது செய்யச் செல்லும்போது இருப்பதைவிட மிக அதிகமான கவனத்துடன் தான் எங்கள் படை சென்றிருந்தது. ஒரு டிஎஸ்பி தலைமையில் 3 காவல் நிலையங்களின் துணை ஆய்வாளர்களுடன் சுமார் 40 பேர் கொண்ட படையினர் செல்வது என்பது பெரிய விஷயம். இதுபோல சாதாரண குற்ற வழக்குகளில் அந்த குற்றவாளி திடீரெனஇப்படி போலீஸாரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்வார் என யாரும் கனவிலும்எதிர்பார்க்கவில்லை.
பிக்ருவில் ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின் அங்கு முதல் நபராக சென்ற நீங்கள் கண்ட காட்சிகள் என்ன?
சம்பவத்திற்கு பின் பிக்ரு சென்றவர்களில் யார் முதலில் கிராமத்தில் நுழைவது என்ற தயக்கம் எழுந்தது. இதனால் அப்படைக்கு தலைமை ஏற்ற நானே எனது ஏஎஸ்பி டாக்டர் அனில்குமாருடன் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளுடன் துப்பாக்கிகள் ஏந்தியபடி நுழைந்தோம். விகாஸ் வீட்டிற்கு முன்பாக உள்ள வீட்டுவாசலிலேயே மகேஷ் யாதவ், நெபுலால்என 2 துணை ஆய்வாளர்கள் சுடப்பட்டுரத்த வெள்ளத்தில் உயிரற்று கிடந்தனர்.பிறகு விகாஸின் வீட்டை துப்பாக்கிமுனையில் சுற்றி வளைத்து சோதனையிட்டோம். அப்போது, வாசலிலேயே உள்ள ஒரு இருட்டறையில் துப்பாக்கி குண்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 போலீஸாரின் உடல்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. கூரை இல்லாத அந்த அறையில் மேற்புறமாக இருந்துஅவர்களை சுட்டுள்ளனர். டிஎஸ்பியை தேடியபோது அவரது உடல் எதிர்வீட்டின் கொல்லைப்புறத்தில் கிடந்தது.
விகாஸால் நடந்த படுகொலைகளுக்குப் பின்னர் காவல் துறையினரிடம் இருந்த உடனடி தாக்கம் என்ன?
தொடக்கத்தில் உடலைப் பார்த்து சிலர் கதறி அழுதனர். பிறகு இந்த வருத்தம் கோபமாக மாறியது. இதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தியதில் அப்பகுதியின் கோயில் அருகே அத்துல் துபே, பிரேம் பிரகாஷ் பாண்டேஆகிய இருவர் ஒளிந்திருந்தனர். அவர்கள் எங்கள் சக போலீஸாரிடம் இருந்து பிடுங்கிய கைத்துப்பாக்கிகளால் எங்கள் மீது சுட்டனர். புல்லட் புரூப் ஜாக்கெட்டால் தப்பிய நான், பாதுகாப்பிற்காக திருப்பிச் சுட்டதில் அவ்விருவரும் உயிரிழந்தனர்.
உ.பி.யில் 3 லட்சத்துக்கும் அதிகமானபோலீஸார் இருந்தும் அவர்களால் விகாஸை பிடிக்க முடியாமல் போனது ஏன்?
பிக்ருவை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விகாஸுக்கு வலுவான தொடர்புகள் இருந்துள்ளன. இவை அக்கிராமப் பஞ்சாயத்து தேர்தல்களில் விகாஸின் உதவியின்றி எவரும் வெல்ல முடியாத அளவிலானது. விகாஸ் நிறுத்தும் வேட்பாளர்களை எவரும் எதிர்ப்பதில்லை என்பதால் தேர்தல் நடத்தாமலே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கிராமத்தினரின் அண்டை மாநிலத் தொடர்புகளையும் தலைமறைவிற்கு விகாஸ் பயன்படுத்தி உள்ளார்.
மத்தியபிரதேச போலீஸாரிடம் தானாகச் சிக்கிய விகாஸை பத்திரமாக அழைத்து வரக்கூட கான்பூர் போலீஸாரால் முடியவில்லையே?
உங்கள் நியாயமான கேள்விக்கு வருத்தம் மட்டுமே பட வேண்டி உள்ளது.வழியில் தப்ப முயன்ற விகாஸை காவலர்கள் பிடிக்க முயன்றனர். அவர்களையும் விகாஸ் சுட்டதால் பாதுகாப்பிற்கான எதிர் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
விகாஸ் துபே வழக்கில் காவல் துறைக்கு ஏற்பட்ட களங்கம் நீங்குமா?
இதை களங்கம் என்பதற்கு பதிலாக நல்ல படிப்பினை என எடுத்துக் கொள்ளலாம். இனிவரும் காலங்களில் விகாஸ் போன்ற ரவுடிகளை ஒடுக்குவதிலும், குற்றவாளிகளை கைது செய்வதிலும் முன்னெச்சரிக்கையாக இருப்போம்.
முதன்முறையாக ஒரு தமிழர் கான்பூரின் எஸ்எஸ்பியாக நியமிக்கப்பட்டது குறித்து?
பல்வேறு வகைகளில் கான்பூர் ஒரு முக்கியமான மாவட்டம் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் எஸ்எஸ்பியாக என்னை நிமித்த உத்தரபிரதேச அரசின் நம்பிக்கையை கடுமையாக உழைத்து காப்பாற்ற விரும்புகிறேன்.
தமிழகத்தில் சந்தன கடத்தல் வீரப்பன் நடமாடிய பகுதியில் பிறந்து வளர்ந்த தமிழரான உங்களுக்கு உ.பி. குற்றவாளிகள் எந்த அளவிற்கு சவாலாக உள்ளனர்?
தமிழக தகராறுகளில் கம்பு, ஹாக்கி அல்லது கிரிக்கெட் மட்டைகளும் அதிகபட்சமாக கத்தி, அரிவாள் போன்றவை பயன்படுத்தியதை பார்த்தும், கேள்விப்பட்டும் இருக்கிறேன். ஆனால் உ.பி.யில்குறைந்தபட்சமாகவே துப்பாக்கிகளால் சுடுபவர்கள் இடையே பணியாற்றுவது பெரும் சவாலாக உள்ளது.
தமிழகத்துக்கும், உத்தரபிரதேசத்துக்கும் சட்டம் ஒழுங்கில் நீங்கள் உணர்ந்த முக்கிய வேறுபாடுகளை கூற முடியுமா?
உ.பி.யில் மக்கள் தொகை சுமார் 23 கோடி என்பதால் இங்கு குற்றங்கள் நடப்பதை முற்றிலும் தவிர்க்க முடியாது. இங்குள்ள குறிப்பிட்ட சில பழம்பெரும் சமூகங்களில் வரலாற்று பின்னணியும் முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. இவர்களிடம் படிப்பறிவும் குறைந்திருப்பதால் அனைவரும் திருந்தத் தாமதமாகிறது. இதுபோன்ற காரணங்களும் சில சமயம் சட்டம் ஒழுங்கை பாதிப்படையச் செய்கிறது.
நீங்கள்தான் விகாஸ் துபேவை என்கவுன்ட்டர் செய்ததாக தமிழகத்தில் செய்திகள் வெளியானதே?
எனது நிர்வாகத்தின் கீழ் செயல்படும் படையினரால்தான் இந்த என்கவுன்ட்டர் செய்ய வேண்டியதாயிற்று. இதற்காக அதை நானே நேரடியாக செய்தது போல சில தமிழக பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகள் ஏற்புடையதல்ல.
8 போலீஸாரை சுட்டுக்கொல்லும் அளவுக்கு விகாஸ் துணியக் காரணம் என்ன?
இதற்கு முன் விகாஸ் செய்த கொலைகள் எதிலும் சிக்காமல் எளிதாகத் தப்பியுள்ளார். இதில் கிடைத்த தைரியம்தான் அவரை இப்பயங்கரத்தையும் செய்யத் தூண்டியுள்ளது. கடந்த 30 வருடங்களாக செய்த கொடூரச் செயல்களால் விகாஸ் என்கவுன்ட்டரில் உயிரிழந்த பின்பும் அவர் மீதான அச்சம் கான்பூர்மாவட்ட கிராமவாசிகளிடம் தொடர்கிறது. இதில் சிலர் விகாஸ் இன்னும் சாகவில்லை என நம்பி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago