நீதிமன்றம் நீதி வழங்குவதில் ஏற்பட்ட தாமத்தாலும், குழப்பமான நடைமுறைகளாலும் நானும் பாதிக்கப்பட்டேன். விபத்தில் இறந்த என் தந்தைக்கு இழப்பீடு பெறுவதில் கடும் சிக்கல் இருந்தது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி உருக்கமாகத் தெரிவித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி நாளை (19-ம் தேதி) ஓய்வுபெற உள்ளார். அவருக்கு நேற்றுதான் கடைசி வேலை நாள் என்பதால், அவருக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
கடந்த 1988-ம் ஆண்டு நீதிமன்றப் பணியில் சேர்ந்து செசன்சு நீதிமன்ற நீதிபதியாக ஆர்.பானுமதி பணியைத் தொடங்கி 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 2003-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பானுமதி, பின்னர் 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று அங்கு மாற்றப்பட்டார்.
உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட 6-வது பெண் நீதிபதி, உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் இடம்பெற்ற 2-வது பெண் நீதிபதி பானுமதி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் பிரேமானந்தா வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி ஆர்.பானுமதிதான். அப்போது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியாக அவர் இருந்தார்.
சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மீதான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் வழக்கையும் விசாரித்து அவருக்கு ஜாமீன் வழங்கியவர் பானுமதி.
நாட்டையே அதிரவைத்த நிர்பயா பாலியல் கூட்டுப் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் நிராகரித்து, அவர்களுக்குத் தூக்குத் தண்டனையை உறுதி செய்தவர் பானுமதிதான். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் சில மணிநேரத்துக்கு முன்பு தாக்கல் செய்த மனுவைக் கூட விசாரித்து, அந்த மனுவை நிராகரித்து, தூக்குத் தண்டனையை உறுதி செய்தவர் நீதிபதி பானுமதி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 30 ஆண்டுகால நீதிமன்றப் பணியை முடித்து நாளையுடன் நீதிபதி ஆர்.பானுமதி ஓய்வுபெற உள்ளார். இதற்காக நேற்று நடத்தப்பட்ட பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் நீதிபதி பானுமதி காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''நான் 2 வயதாக இருந்தபோது எனது தந்தை ஒரு பேருந்து விபத்தில் உயிரிழந்துவிட்டார். அவருக்கான இழப்பீடு கேட்டு என் தாய் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். நீதிமன்றம் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பளித்தாலும், நீதிமன்றத்தின் பல்வேறு குழப்பமான நடைமுறைச் சிக்கல்கள், போதுமான சட்ட உதவிகள் இல்லாததால் அந்தப் பணத்தைப் பெற முடியவில்லை.
நீதிமன்றத்தின் செயல்முறை தாமதத்தால் நான், எனது தாய், எனது இரு சகோதரிகள் பாதிக்கப்பட்டோம். நான் ஓய்வுபெறும் இந்த நாள்வரை அந்த இழப்பீட்டைப் பெறவில்லை. நீதிமன்றப் பணியில் ஏராளமான மலையளவு தடைகள் வந்தன. அவற்றைக் கடந்துதான் வந்துள்ளேன்.
ஆனால், தற்போது மத்திய அரசும், பல்வேறு மாநிலங்களும் எடுத்துள்ள ஆக்கபூர்வமான பல்வேறு நடவடிக்கைகளால் நீதிமன்றத்தின் பணி சிறப்படைந்துள்ளது. நீதிமன்ற முறை சிறப்பாகச் செயல்பட முடிகிறது.
ஆனால், நான் நீதிமன்றத்தில் நுழைந்தபோது வழக்குகள் தொடர்ந்து தேக்கமடைந்துள்ளன என்ற பேச்சுதான் வரும். இப்போதும் அப்படித்தான் பேசுகிறார்கள். வழக்குகள் தாமதத்தால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாகக் கடந்த காலத்தில் பேசினார்கள்''.
இவ்வாறு ஆர் பானுமதி பேசினார்.
உச்ச நீதிமன்றத்தில் தற்போது 3 பெண் நீதிபதிகள் உள்ளனர். இதில் பானுமதி தவிர்த்து இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகிய இருவர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி பானுமதி தனது பதவிக் காலத்தில் மக்களுக்கு எளிமையாக நீதிமன்ற உத்தரவுகள் சென்றடையத் தேவையான முன்னெடுப்புகளைச் செய்தார். குறிப்பாக நீதிமன்ற உத்தரவுகளை விரைவாகக் கிடைக்க உத்தரவிடுதல், இ-பேமென்ட் முறை, மொபைல் ஆப்ஸ் மூலம் பணம் செலுத்துதல், இணையத்தில் தீர்ப்பு விவரங்களை விரைவாக வெளியிடுதல் போன்றவற்றைச் செய்து வெளிப்படைத் தன்மையை அதிகப்படுத்தினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago