திருவனந்தபுர கடற்கரைப் பகுதிகளில் சமூகப் பரவல் ஆரம்பம்; இன்று 791 பேருக்குக் கரோனா: கேரள முதல்வர் பேட்டி 

By கா.சு.வேலாயுதன்

திருவனந்தபுரம் கடற்கரைப் பகுதிகளில் சமூகப் பரவல் ஆரம்பித்துள்ளதாகவும் இன்று 791 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:

’’கேரளாவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கவலையை ஏற்படுத்தும் வகையில் தினமும் அதிகரித்து வருகிறது. இன்று மிக அதிக அளவில் 791 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நமது மாநிலத்தில் மிக அதிக வேகத்தில் நோய் பரவிக்கொண்டிருக்கிறது. திருவனந்தபுரத்தில் நிலைமை மோசமான சூழலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

குறிப்பாகக் கடற்கரைப் பகுதிகளில் நோய்ப் பரவல் அதிக அளவில் உள்ளது. திருவனந்தபுரத்தில் கடற்கரை கிராமமான புல்லுவிளை பகுதியில் 97 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 51 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பூந்துறை பகுதியில் 50 பேருக்குப் பரிசோதனை செய்ததில் 26 பேருக்கும், புத்தன்குரிசு பகுதியில் 75 பேரைப் பரிசோதித்ததில் 20 பேருக்கும், அஞ்சுதெங்கு பகுதியில் 83 பேரைப் பரிசோதித்ததில் 15 பேருக்கும் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நோய் வேகமாகப் பரவி வருகிறது என்பதையே இந்தப் பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன. பூந்துறை மற்றும் புல்லுவிளை பகுதியில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டது என்றே கூற வேண்டும்.

எனவே இந்தப் பகுதிகளில் மிகத் தீவிரப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். கடற்கரைப் பகுதிகள் மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கேரளாவில் இதுவரை 11,066 பேருக்குக் கரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 532 பேருக்கு நோய் பரவி உள்ளது.

இவர்களில் 42 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது என தெரியவில்லை. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 135 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 98 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளவர்கள் ஆவர். சுகாதாரத் துறையைச் சேர்ந்த 15 பேருக்கும் இன்று நோய் பரவி உள்ளது. திருச்சூரைச் சேர்ந்த ஒருவர் கரோனா பாதித்து மரணமடைந்துள்ளார். குருசேரி என்ற பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இவரது உமிழ்நீர் மாதிரியைப் பரிசோதித்ததில் இவருக்குக் கரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இவர் தற்கொலை செய்து கொண்டதால் கரோனா மரணப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இன்று 133 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 246 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 115 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 87 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 57 பேர் ஆழப்புழா மாவட்டத்தையும், 47 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 39 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், தலா 32 பேர் கோழிக்கோடு, திருச்சூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களையும், 31 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 28 பேர் வயநாடு மாவட்டத்தையும், 25 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 11 பேர் இடுக்கி மாவட்டத்தையும், 9 பேர் கண்ணூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த 24 மணி நேரத்தில் 16,642 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கேரளாவில் பல்வேறு பகுதிகளில் 1,78,481 பேர் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 6,124 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இன்று கரோனா நோய் அறிகுறிகளுடன் 1,152 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது 6,029 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4,89,395 பரிசோதனைகள் நடத்தப்பட்ட்டுள்ளன. இதில் 7,610 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன.

மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 88,903 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதில் 84,454 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. கேரளாவில் 285 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 680 பேர் மரணமடைந்துள்ளனர்.

நமது அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் நேற்று 4,549 பேர் பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 69 பேர் மரணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் 4,169 பேருக்கு நோய் கண்டறியப்பட்டது. இந்த மாநிலத்தில் 104 பேர் மரணமடைந்தனர். டெல்லியில் நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அங்கு 58 பேர் மரணமடைந்தனர். இந்த மோசமான நிலையை நோக்கிக் கேரளாவும் சென்று கொண்டிருக்கிறதோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் நிலைமை மோசமாக உள்ளது. இன்று இங்கு நோய் பாதிக்கப்பட்ட 246 பேரில் 2 பேர் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 237 பேருக்கு நோய் பரவி உள்ளது. இந்த மாவட்டத்தில் 4 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் நோய் பரவியுள்ளது. 3 பேருக்கு நோய் எப்படிப் பரவியது என தெரியவில்லை. இது ஒரு அசாதாரண சூழ்நிலை ஆகும். திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் நோய்ப் பரவல் கவலையளிக்கும் வகையில் உள்ளது. எனவே இங்கு முழு ஊரடங்கை அமல்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் பணி முடிந்து வீடுகளில் தனிமையில் இருக்கும் சுகாதாரத்துறை ஊழியர்களை சிலர் ஒதுக்கி வைப்பதாகவும், அவமானப்படுத்துவதாகவும் புகார் வந்துள்ளது. இது தவறான நடவடிக்கையாகும். நாளை அவர்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டால் சுகாதாரத்துறையினர்தான் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கரோனா நோய் குறித்துப் பலரிடம் தவறான எண்ணங்கள் பரவி வருகின்றன. இது சாதாரண ஜலதோஷத்தால் வரும் காய்ச்சல்தான் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இது பரவாது என்றும், ஒருமுறை நோய் பாதித்துக் குணமானால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் சிலர் தவறாக கருதுகின்றனர். இதில் எந்த உண்மையும் கிடையாது’’.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்