“தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் பெயரைக் களங்கப்படுத்த காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. விளம்பரத்துக்காக அவர்கள் செய்யும் இந்த மலிவு அரசியல் கேரள மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது” என்கிறார் கேரளத்தின் தேவிகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்எல்ஏவான ராஜேந்திரன்.
இது தொடர்பாக ’இந்து தமிழ்’ இணையத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து...
தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சி சர்ச்சையைக் கிளப்புகிறதே?
சரிதா நாயர் சம்பந்தப்பட்ட சோலார் பேனல் ஊழல் வழக்கைப் போல இதையும் சித்தரிக்கப் பார்க்கிறது காங்கிரஸ். ஆனால், சோலார் பேனல் விவகாரம் என்பது வியாபார ரீதியில் நடந்த ஒரு ஊழல். இதில் அப்போதைய கேரள காங்கிரஸ் அரசுக்கும் அதன் முதல்வர் உம்மன் சாண்டிக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணைக் கமிஷன் விசாரித்து அளித்த ரிப்போர்ட் எங்கள் கையில் இருக்கிறது. அதில், உம்மன் சாண்டி எத்தனை முறை யார் யாரிடமெல்லாம் போனில் பேசினார் என்ற விவரங்கள்கூட தெளிவாக இருக்கின்றன.
அந்த வழக்கைப் போல தங்கக் கடத்தல் விவகாரத்தை கேரள அரசுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் கொண்டு செல்ல காங்கிரஸ்காரர்கள் மூவ் செய்கிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு கூட்டுநடவடிக்கை சார்ந்த நிகழ்வில் எங்களது முதல்வர் பினராயி விஜயனுடன் ஸ்வப்னா சுரேஷும் இருந்தார் என்பதை மட்டுமே வைத்து முதல்வருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது போல் முடிச்சுப்போடப் பார்க்கிறது காங்கிரஸ். சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் அவர்கள் அரசியல் விளம்பரத்துக்காக இதைச் செய்கிறார்கள்.
அப்படியானால் இந்த விவகாரத்தில் முதல்வர் அலுவலகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்கிறீர்களா... அப்படியானால் முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை இடமாற்றம் செய்தது ஏன்?
சிவசங்கர் முதல்வர் அலுவலகத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரி. பிரின்சிபல் செகரட்டரியாக இருந்த அவர் தங்கக் கடத்தல் விவகாரம் பற்றி முன்கூட்டியே முதல்வருக்குத் தகவல் தெரிவித்து அவரிடம் அதுகுறித்துக் கலந்து பேசி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். அதுபோன்ற நடவடிக்கைகளுக்காகத்தான் அவர் அந்த இடத்தில் இருக்கிறார். அப்படிச் செய்திருந்தால் ஆரம்பத்திலேயே இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்திருக்கலாம்; பிரச்சினை இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது. ஆனால், சிவசங்கர் அப்படிச் செய்யவில்லை. அதற்காகத்தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறாரே தவிர, தங்கக் கடத்தலில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக அர்த்தம் ஆகாது.
» கரோனா நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி திருவனந்தபுரத்தில் போராட்டம்
தங்கக் கடத்தல் வழக்கில் பாஜகவை விடவும் உங்களது தேசியக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி அதிக ஆக்ரோஷம் காட்டுகிறதே?
எல்லாம் அரசியல்தான். இன்னும் மூன்று மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் வரவிருக்கின்றன. அதைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலும் வரவிருக்கிறது. கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உலக அளவில் சிறப்பாக செயல்பட்ட அரசு என எங்களுடைய அரசுக்கு உலக அளவில் நல்ல பெயர் இருக்கிறது. அதை எப்படியாவது கெடுத்தால் மட்டுமே காங்கிரஸார் அரசியல் பண்ண முடியும். அதற்காக இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.
அப்படியானால் தங்கக் கடத்தல் விவகாரத்தால் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் எவ்விதப் பின்னடைவும் ஏற்படாது என்று சொல்கிறீர்களா?
நிச்சயமாக எங்களுக்கோ எங்களது ஆட்சிக்கோ எங்கள் முதல்வருக்கோ இந்த விவகாரத்தால் எவ்விதப் பின்னடைவும் ஏற்படாது. இங்கு நடக்கும் அனைத்தையும் கேரள மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களது முதல்வர் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மக்களைக் காக்கும் முதல்வராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால், எதிலும் அரசியல் பேசும் காங்கிரஸ்காரர்கள் கரோனாவையும் அரசியலாக்கிப் பார்த்தார்கள்.
அதனால்தான், ‘அரசு ஊழியர்கள் முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு தங்களது ஊதியத்திலிருந்து நிதி தரவேண்டும்’ என்ற முதல்வரின் வேண்டுகோளை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார்கள். அதையும் மீறி, கரோனாவைக் கையாண்ட விதத்தில் அரசுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துவிட்டது என்பதால் இப்போது தங்கக் கடத்தல் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். இதெல்லாம் மக்கள் மன்றத்தில் எடுபடாது.
கேரளத்தில் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜூலை வரை தொடரும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார். கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலையும் சட்டப்பேரவைத் தேர்தலையும் எப்படி நடத்துவீர்கள்?
இப்போதைக்கு இதுபற்றி பேசமுடியாது. ஏனென்றால் தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. அதற்குள்ளாக சூழ்நிலைகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாமே! ஒருவேளை, அதற்குள்ளாக கரோனா கட்டுக்குள் வந்திருக்கலாம். அல்லது மத்தியில் ஆளும் பாஜககாரர்கள், ‘ஒரே நாடு... ஒரே தலைவன்’ என்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்களே... அதை நடைமுறைப்படுத்த மாநில சட்டப் பேரவைகளுக்குத் தேர்தல் நடத்தாமலேகூட ஒத்திப்போடலாம்.
இன்னும் ஒருபடி மேலே போய், இப்போது எல்லாமே ஆன்லைனுக்கு மாறிவருவது போல் மக்களை ஆன்லைனிலேயே வாக்களிக்க வைக்கவும் முயற்சிக்கலாம். எனவே, அதைப்பற்றி எல்லாம் இப்போது பேசமுடியாது.
முக்கிய செய்திகள்
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago