இன்று உலகமே கரோனாவுக்குப் பயந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கரோனா தாக்கத்தால் சகலதுறைகளும் கடும் பின்னடவைச் சந்தித்து வருகின்றன. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கூடிவருகிறது. கரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருந்த கேரளாவிலும் இப்போது மெல்ல வேகமெடுக்கிறது கரோனா. இப்படியான சூழலில் இந்தியாவின் முதல் கரோனா தொற்றாளரான சீனாவின் வூஹானிலிருந்து வந்த அந்த மருத்துவ மாணவியிடம் ’இந்து தமிழ்’ இணையத்துக்காகப் பேசினேன்.
வூஹான் நகரில் மூன்றாமாண்டு மருத்துவம் படித்து வரும் அந்த மாணவி இப்போது கேரளத்தில் தனது வீட்டில் பூரண நலத்துடன் இருக்கிறார்.
“இந்தியாவிலேயே முதன் முதலா எனக்குத்தான் கரோனா தொற்று வந்தது என்றபோது ரொம்பவே உடைஞ்சுட்டேன். சீனாவில் வூஹான் நகரில் கரோனா ஏற்படுத்திய தாக்கத்தை, இழப்புகளைக் கண்ணால பார்த்துட்டதால அச்சம் அதிகமா இருந்துச்சு. ஆனா, கேரளத்தின் மருத்துவர்கள் அதை ரொம்பவே சரியாக் கையாண்டாங்க. ஏற்கெனவே நிபா வைரஸ் தாக்கத்தில் கேரளம் கத்துக்கிட்ட பாடமும் அதுக்கு ஒரு காரணம்” எனப் படபடவென பேசிய அந்த மாணவியிடம், “அந்த நாளின் நினைவுகளைச் சொல்லுங்களேன்” என்றேன்.
“வூஹானில் கரோனா வேகமாப் பரவும்போதே எங்களுக்குச் சாப்பாடு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எதுவுமே சரிவர கிடைக்காமப் போச்சு. அப்படியான சூழலில்தான் இனி அங்கே இருப்பதில் அர்த்தமில்லைன்னு சொந்த ஊருக்குக் கிளம்பி வந்தோம். இங்க வந்ததும் ஜனவரி மாசம் 30-ம் தேதி எனக்கு கரோனா தொற்று உறுதியாச்சு. உடனே, என்கூட வந்த எனது நண்பர்களையும் கூப்பிட்டு டெஸ்ட் பண்ணிக்கச் சொன்னேன்.
திருச்சூர் மருத்துவமனையில் மருத்துவர்களும் அன்பாப் பேசினாங்க. ‘யாரெல்லாம் உன் கூட வந்தாங்க... விமானத்துல உன்னோட இருக்கை எண் என்ன... விமான நிலையத்தில் இருந்து எங்கெல்லாம் போனே?’ன்னு நிறையக் கேள்விகள் கேட்டாங்க. நான் சொன்ன பதில்களை வைத்துத்தான் எனது பயண வழித்தடத்தை எடுத்து நிறையப் பேருக்கு கரோனா சோதனை நடந்துச்சு. இதெல்லாம் ஜனவரி 30-ம் தேதி நடந்த விஷயம். அப்போ இந்தியாவில் வேறெந்த மாநிலமும் கரோனா பத்தியே பேசாத காலம்!
டிவியைப் போட்டாலே ‘சீனாவில் கொத்துத்கொத்தா கரோனாவில் பலி’ன்னு காட்டுவாங்க. அதையெல்லாம் பாத்துட்டு, மகளை மருத்துவம் படிக்க அனுப்பி நோயாளியா ஆக்கிட்டோமேன்னு என்னோட அம்மா வீட்டுல இருந்து கதறினாங்க. இன்னிக்குத் தனிமனித இடைவெளி, தனிமைப்படுத்துதல் பத்தி எல்லாரும் பேசுறோம். ஆனா, அன்னிக்கு அப்படியில்லை. என்னை யாரும் பார்க்கவோ, பேசவோ கூடாதுன்னு சொன்னதும் ஒரு தாயா எப்படித் தவிச்சிருப்பாங்க?
அந்த நேரத்துலதான் எங்க அம்மாவுக்கு ஒரு போன் வந்துருக்கு. போனில் பேசுனது கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா. ‘உங்க பொண்ணுக்குப் பின்னாடி எங்க மொத்த டீமும் இருக்கு’ன்னு அம்மாவுக்கு ஆறுதல் சொன்னாங்க. அந்த நிமிஷம் அம்மாவோட கண்ணீரைத் துடைச்ச மருந்து அதுதான்!
ஜனவரி மத்தியில்தான் வூஹானில் கரோனா தொற்று வேகமாப் பரவ ஆரம்பிச்சது. 13-ம் தேதி, வூஹானில் வைரஸ் பரவுதுன்னு சொல்லி எங்க கல்லூரிக்கு ஒருமாசம் லீவு விட்டாங்க. அப்படிச் சொன்ன பின்னாடிகூட ரெண்டு மூணு நாள் சீனத் தெருக்கள் எல்லாம் இயல்பாத்தான் இருந்துச்சு. மக்கள் நோய் பத்திப் பேசிக்கிட்டாங்களே தவிர அதோட தீவிரத்தை உணரல. 17-ம் தேதியெல்லாம் எல்லாருக்கும் ஒருவிதப் பதற்றம் வந்து முகக்கவசம் போட ஆரம்பிச்சாங்க.
திடீர்னு கல்லூரிக்கு ஒரு மாசம் லீவு விட்டதும் கேரள மாணவர்கள் அனைவருமே கேரளாவுக்கு வர்றதுன்னு முடிவு செஞ்சோம். அப்படிக் கிளம்பி வரும்போது சீனாவில் விமானம், ரயில் நிலையம், கல்லூரியின் நுழைவு வாயில் உள்ளிட்ட அனைத்து இடத்திலும் தெர்மல் ஸ்கேனர் வைத்து எங்களுக்கு டெஸ்ட் எடுத்தாங்க. ஒருவழியா ஜனவரி 23-ல் வூஹானில் இருந்து கிளம்புன நாங்க 20 பேர் கொல்கத்தா வந்து சேர்ந்தோம். அங்க இருந்து கேரளத்துக்கு விமானம் ஏறினோம்.
ஜனவரி 25-ம் தேதி, ‘வெளிநாடுகளில் இருந்து யார் சொந்த மண்ணுக்குத் திரும்பினாலும் அருகிலுள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் தகவல் கொடுக்கணும்’னு இந்தியத் தூதரகத்தில் இருந்து மெசேஜ் அனுப்புனாங்க. நானும் அதன்படி ஊர்வந்து சேர்ந்ததைச் சொன்னேன். தினமும் என்னை எங்கள் பகுதியின் சுகாதார அலுவலர்கள் வந்து பார்த்துட்டுப் போனாங்க. அப்ப எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. ரெண்டு நாள் கழிச்சு, சாப்பிட்டா விழுங்கும்போது தொண்டை வலிச்சது. தொடர்ந்து எப்போதும் வலிப்பதை உணர்ந்தேன். உடனே, சுகாதாரத்துறை அலுவலருக்குத் தகவல் கொடுத்தேன். வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்தது. என்னை கூட்டிட்டுப் போனாங்க. 30-ம் தேதி எனக்குக் கரோனா தொற்று இருக்குன்னு உறுதி செஞ்சாங்க.
பிப்ரவரி 20-ம் தேதி நோய்த்தொற்றில் இருந்து முற்றாக விடுபட்டேன். தனிமைப்படுத்தும் நாள்கள் கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது. ஏன்னா அதுக்கு முன்ன நாம் அதைப் பார்த்ததே இல்லை. உறவுகள் கூப்பிட்டு நலம் விசாரிச்சுக்கிட்டே இருந்தாங்க. இப்பல்லாம் நோயாளிகள் குறித்த பிம்பம் கொஞ்சம் கொஞ்சமா மாறி வருது. கரோனா தொற்றுக்கு ஆளான முதல் நோயாளி என்னும் அடையாளமே என்னை மனசளவில் ரொம்பவே வாட்டிருச்சு. என்னுடன் எனது வகுப்பில் மொத்தம் 65 பேர் படிக்கிறோம். அதில் 45 பேர் இந்தியர்கள். விமான சேவைகள் இல்லாத நிலையில், இங்கிருந்தபடியே ஆன்லைன் வகுப்பில்தான் கலந்துக்குறோம்.
சீக்கிரமே உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பணும். யாராக இருந்தாலும் மன தைரியத்தோடு எதிர்கொண்டாலே கரோனாவை எளிதில் ஜெயிச்சிடலாம். முதல் நோயாளியாக அறைக்குள் அடைபட்டுத் தனித்து இருந்தாலும் கேரள அரசின் சார்பில் தொடர்ந்து எனக்கு கவுன்சலிங் கொடுத்தாங்க. அது ஆறுதலாக இருந்துச்சு. சீக்கிரமே இந்தியாவில் கரோனா தொற்று ஒழியணும்.
அடிக்கடி கைகளை சோப்பால் கழுவி, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தாலே போதும். இந்த விழிப்புணர்வு கொஞ்சமாவது இருந்ததால்தான் என்னுடன் விமானத்தில் பயணித்த எனது நண்பர்கள் யாருக்கும் கரோனா தொற்று வரல. இந்த விழிப்புணர்வு எல்லாருக்கும் இருந்தாலே கரோனாவில் சிக்காமல் தப்பிச்சிடலாம்.
ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது, இவரிடமிருந்து நமக்குக் கரோனா தொற்று வரலாம் என்று நினைத்துத் தள்ளி நின்னே பேசுங்க. இந்த விழிப்புணர்வு இருந்தாலே போதும் கரோனாவை எளிதில் வென்றிடலாம்” என்று முடித்தார் கேரளத்தின் அந்த மருத்துவ மாணவி.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago