அவசரம் காட்டக்கூடாது; ஆகஸ்ட் 15-ம் தேதி கரோனா தடுப்பூசி மருந்தை அறிமுகம் செய்வது சாத்தியமற்றது: இந்திய அகாடெமி ஆஃப் சயின்ஸ் அமைப்பு கருத்து

By பிடிஐ

கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அறிமுகப்படுத்தும் ஐசிஎம்ஆர் முயற்சி சாத்தியமற்றது, நடைமுறைக்கு வராத ஒன்று என்று தி இந்தியன் அகாடமி ஆஃப் சயின்ஸ் அமைப்பு (ஐஏஎஸ்சி) கருத்துத் தெரிவித்துள்ளது

பெங்களூரில் செயல்படும் தி இந்தியன் அகாடமி ஆஃப் சயின்ஸ் அமைப்பு என்பது பல்வேறு அறிவியல் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிரான கோவாக்ஸின் என்ற பெயரில் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தத் தடுப்பு மருந்து கரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்தாகும். இந்த மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் முயற்சி வரும் 7-ம் தேதி இரு கட்டங்களாகத் தொடங்க உள்ளது.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா சமீபத்தில் கடிதம் எழுதி, பரிசோதனை முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பரிசோதனை வெற்றியடைந்தால், ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐசிம்ஆர் அமைப்பு கரோனா தடுப்பு மருந்தை விரைவுபடுத்துவதற்கு பல்வேறு அறிவியல் வல்லுநர்கள், மருத்துவ ஆராய்ச்சி வல்லுநர்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து, கரோனா தடுப்பு மருந்து 2021-ம் ஆண்டுக்கு முன்பாக தயாராகச் சாத்தியமில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அறிவியல் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் இந்திய அகாடமி ஆஃப் சயின்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''கரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு எந்தவிதமான கேள்வியும் அவசரத் தேவையில்லாத நிலையில், மனிதர்களுக்குத் தேவைப்படும் இந்த மருந்து முறைப்படி கிளினிக்கல் பரிசோதனையைப் படிப்படியாகக் கடந்துதான் வர வேண்டும்.

மருந்து கண்டுபிடித்தலுக்கு நிர்வாக ரீதியான ஒப்புதல்களை விரைவுபடுத்தலாம். ஆனால், அறிவியல் ரீதியிலான பரிசோதனைகள், விவரங்களைச் சேகரித்தல் போன்றவை இயல்பான, இயற்கையான நேரத்தில்தான் சேகரிக்க முடியும். இதை அவசரகதியில் நமது தேவைக்கு ஏற்ப, அறிவியலின் கடுமையான தரத்தைச் சமரசம் செய்துகொள்ள முடியாது.

மனிதர்கள் மீதான கிளினிக்கல் பரிசோதனை முடிந்து இந்த மருந்தை ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அறிமுகப்படுத்த ஐசிஎம்ஆர் கடிதம் எழுதியுள்ளதை அறிந்தோம். கரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து இந்தக் கட்டத்தை அடைந்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். விரைவாக மக்களின் பயன்பாட்டுக்குக் கிடைக்க வேண்டும் என்பதை நாங்களும் விரும்புகிறோம்.

ஆனால், ஐசிஎம்ஆர் நிர்ணயித்துள்ள ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனையை முடித்து அறிமுகம் செய்வது என்பது சாத்தியமற்றது. இந்த காலக்கெடு நடைமுறைக்கு வராத நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் நமது மக்களின் மனதில் ஏற்படுத்திவிடும்.

கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.

கரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பாதுகாப்பு எவ்வாறு இருக்கிறது என்பது முதல் கட்டப் பரிசோதனையிலும், 2-வது கட்டத்தில் அந்த மருந்தின் செயல்திறன், பக்க விளைவுகள் ஏதேனும் வெவ்வேறு அளவுகளில் கொடுத்தால் வருகிறதா என்பதையும் கண்டறிய வேண்டும்.

3-வது கட்டத்தில் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றறும் செயல்திறன் ஆகியவற்றை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரோக்கியமான உடல்நிலை கொண்டவர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்க வேண்டும். இதுதான் முறையாகும்.

இந்த கிளினிக்கல் பரிசோதனையில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். பரிசோதனையைத் தொடங்குவதற்கு முன் பல்வேறு தார்மீக, மருத்துவ ரீதியான ஒப்புதல்களைப் பெறுவதும் அவசியம்.

ஒருவருக்கு உடலில் மருந்தை ஏற்றிப் பரிசோதித்தால், அதன் விளைவு தெரிவதற்கு பல வாரங்கள் ஆகும். அப்படியிருக்கும்போது அவசரப்பட்டு விரைவாக விவரங்களைச் சேகரிக்க முடியாது.

ஒரு கட்டத்தில் கிடைத்த புள்ளிவிவரங்களைத் தீவிரமாக ஆய்வு செய்தபின்புதான் அடுத்தகட்டப் பரிசோதனையைத் தொடங்க முடியும். முதல்கட்ட ஆய்வில் விவரங்கள் சரியாக வரவில்லையென்றால், ஏற்கமுடியாத நிலையில் இருந்தால், உடனடியாகப் பரிசோதனையை நிறுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

உதாரணமாக, முதல்கட்டப் பரிசோதனையில் கிடைத்த தரவுகள்படி தடுப்பு மருந்து பாதுகாப்பானது இல்லை எனத் தெரியவந்தால், 2-வது கட்டப் பரிசோதனைக்குள் செல்ல முடியாது. அந்தத் தடுப்பு மருந்து நிறுத்தப்படும். ஆதலால், குறிப்பிட்ட காலத்துக்குள் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறுவது முன்மாதிரியில்லாமல் கூறுவது நியாயமற்றது.

கடுமையான விஞ்ஞான செயல்முறைகள் மற்றும் தரத்தில் சமரசம் செய்துகொண்டு எடுக்கக்கூடிய எந்தவொரு அவசர முடிவும், மக்கள் மீது எதிர்பாராத அளவில் நீண்டகால பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்''.

இவ்வாறு இந்தியன் அகாடமி ஆஃப் சயின்ஸ் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்