பிஹாரில் தந்தை லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆட்சியின் தவறுக்கு மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ் மன்னிப்பு கேட்டுள்ளார். இதன், பின்னணியில் அங்கு வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக உள்ளது.
இதுகுறித்து இன்று தன்னை சந்திக்க வந்த கட்சித் தொண்டர்கள் முன் தேஜஸ்வி கூறும்போது:
‘‘சுமார் 15 வருடங்கள் நாம் பிஹாரின் ஆட்சியில் இருந்தோம். இதில் கடைப்பிடிக்கப்பட்ட சமூகநீதியை எவராலும் மறுக்க முடியாது. இதில், வேறு எதுவும் தவறுகள் நடந்திருந்தால் அதற்காக நான் இப்போது மன்னிப்பு கோருகிறேன். இன்னொரு முறை பிஹாரை ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை வீணாக்க மாட்டோம்.’’ எனத் தெரிவித்தார்.
பாஜக ஆதரவுடன் பிஹார் முதல்வராக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாரின் ஆட்சி ஓரிரு மாதங்களில் முடிவடைய உள்ளது. வரும் அக்டோபரில் அதற்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேஜஸ்வி கேட்ட மன்னிப்பு பிஹார் அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளது.
தேஜஸ்வீ கேட்ட மன்னிப்பின் பின்னணியில் அவரது தந்தையான லாலு செய்த ஆட்சியின் தவறுகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் முன்னிறுத்தப்படும் இந்த தவறுகளால் லாலு கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்து வருகிறது.
எனவே, வரும் தேர்தலில் கடந்தகாலத் தவறுகள் மீண்டும் கையில் எடுக்கப்படாமல் இருக்கும் பொருட்டு இந்த மன்னிப்பை தேஜஸ்வி கேட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. கடந்த 1990 ஆம் ஆண்டுகளின் இறுதியில் உயர்சமூகத்தினர் ஆதிக்கம் அதிகம் எனும் புகாரில் பிஹார் சிக்கியிருந்தது.
இதனால், சமூகநீதியை தூக்கிப் பிடிக்கும் தலைவராக உருவானார் லாலு. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை துவக்கியவரின் ஆட்சி, 1990 முதல் 2005 வரை பிஹாரில் இருந்தது.
சுமார் 17 சதவிகிதம் இருந்த யாதவ், 13 சதவிகித முஸ்லிம்களுடன் தலித் சமூகத்தினரை ஒன்றிணைத்து வெற்றி பெற்று வந்தவர் லாலு. ‘‘சமோசாவில் ஆலூ (உருளைக்கிழங்கு) இருக்கும் வரை இந்த பிஹாரில் லாலு இருப்பான்’’ எனவும் அவர் கிண்டலாகக் கூறி வந்தார்.
எனினும், கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதாகி பதவி இழந்தது வரை மட்டுமே லாலுவால் முதல்வராக இருக்க முடிந்தது. பிறகு அப்பதவியில் தன் மனைவியான ராப்ரி தேவியை அமரவைத்த லாலு, பிஹாரின் திரைமறைவு முதல்வராக இருந்தார்.
இந்த 15 வருட ஆட்சிக் காலத்தின் மோசமான சட்டம் ஒழுங்கு மீது லாலுவிற்கு எதிராகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆள்கடத்தல், கிரிமினல்கள் ஆதிக்கம். கொலை கொள்ளை என சட்டம் ஒழுங்கு பிஹாரில் மோசமானதாகப் புகார் இருந்தது.
இருப்பினும், இதன் மீதான வழக்குகள் பிஹார் காவல்நிலையங்களில் அதிகமாகப் பதிவாகவில்லை. தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகத்தின்படி மற்ற மாநிலங்களை விட பிஹாரில் குற்றங்கள் குறைவாகவே இருந்தது.
இப்பதிவுகளையே தன் முன் கேள்விகளை வைப்பவர்களிடம் லாலு பதிலாகக் கூறி சமாளித்து வந்தார். இதன் எல்லைகள் மீறும் அளவிற்கு ஆள்கடத்தல் ஒரு தொழிலாகவும் பிஹாரில் மாறத் துவங்கியது.
இந்நிலையில், 2006 தேர்தலில் லாலு ஒதுக்கி வைத்த உயர்சமூகம் வாக்குகளுடன் மற்றவர்களும் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாரை ஆதரித்தனர். இதனால் பாஜக ஆதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிஹாரில் ஆட்சி செய்து வருகிறார்.
இடையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ், லாலுவுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்தார். இதன் சார்பிலும் முதல்வரானவர் லாலு மீதான கால்நடை வழக்கை காரணம் காட்டி அவரிடம் இருந்து விலகினார்.
மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தவர் தலைமையில் வரவிருக்கும் தேர்தலில் போட்டி நிகழ உள்ளது. இந்தமுறை எப்படியும் ஆட்சி பிடித்து விடுவது என லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி முயன்று வருகிறார்.
மகனுக்கு சிறையில் இருந்தபடி லாலு அரசியல் பாடம் எடுத்து வருகிறார். காங்கிரஸுடன் இணைந்து மீண்டும் தேர்தலை சந்திக்க உள்ள ஆர்ஜேடிக்கு இந்தமுறை பிஹார்வாசிகள் அளிப்பது என்ன என்பது சில மாதங்களில் தெரியும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
48 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago