நாகாலாந்தில் நடப்பது என்ன?- ஆளுநரின் கடிதம் ஏற்படுத்திய அரசியல் சர்ச்சை

By வெ.சந்திரமோகன்

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், ஆயுதக் குழுக்களின் ஆதிக்கத்தில் மாநில அரசு இருப்பதாகவும் முதல்வர் நெஃபியூ ரியோவுக்கு அம்மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

மக்களிடம் வரிவசூல் செய்துவரும் கிளர்ச்சிக் குழுக்களைத் தனது கடிதத்தில் கடுமையாகச் சாடியிருக்கிறார் ஆளுநர். இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் என்எஸ்சிஎன் - ஐஎம் (நாகாலிம் தேசிய சோஷலிச கவுன்சில்- ஐசக் முய்வா) அமைப்பு, முறைப்படியே மக்களிடமிருந்து வரி வசூல் நடப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

போட்டி அரசு
என்எஸ்சிஎன் (ஐஎம்), என்எஸ்சிஎன்(கே) உள்ளிட்ட நாகா குழுக்கள், அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களிலும், அண்டை நாடான மியான்மரிலும் நாகா இனத்தவர்கள் வசிக்கும் பகுதிகளை இணைத்து ‘நாகாலிம்’ எனும் பிரதேசத்தை உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் இயங்கி வருபவை. என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்பு 1997 முதல் சண்டை நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வந்தாலும், வேறு வகைகளில் மாநில அரசுக்குத் தலைவலியாக இருந்து வருகிறது.

வெளிமாநிலங்களிலிருந்து பொருட்களைக் கொண்டுவரும் சரக்கு வாகன ஓட்டிகளிடம், என்எஸ்சிஎன் (ஐஎம்) உள்ளிட்ட அமைப்புகள் வரி வசூல் செய்துவருகின்றன. அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஆண்டுக்கு 12 சதவீதத்தை வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. கிட்டத்தட்ட போட்டி அரசையே நடத்திவரும் இக்குழுக்கள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து, வரி விகிதத்தையும் முடிவுசெய்கின்றன. இது தவிர, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளை ஆக்கிரமிப்பது, வனத் துறையினரையும் அவர்களது குடும்பத்தினரையும் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பது போன்ற செயல்களிலும் இந்தக் குழுக்கள் ஈடுபடுவதாகப் புகார்கள் உண்டு.

ஆளுநர் கடிதம்
இந்நிலையில், ஜூன் 16-ல் நாகாலாந்து முதல்வர் நெஃபியூ ரியோவுக்கு எழுதிய கடிதத்தில், அம்மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகளைப் பட்டியலிட்டிருக்கிறார் ஆளுநர் ரவி.

“உப்பு முதல் கட்டுமானப் பொருட்கள் வரை, எல்லாப் பொருட்களுக்கும் சட்டவிரோதமாக வரி வசூல் செய்யப்படுகிறது. வரி செலுத்தவில்லையென்றால், துப்பாக்கி முனையில் கடத்தப்படும் அபாயம் இருப்பதாக வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் என்னிடம் முறையிட்டிருக்கிறார்கள். ஆயுதக் குழுக்கள் மிரட்டிப் பணம் பறிப்பதாலும், வன்முறைச் சம்பவங்களாலும் தினக்கூலிகள், சிறு வணிகர்கள், தொழிலதிபர்கள், கடைக்காரர்கள், உணவக உரிமையாளர்கள், அரசு ஊழியர்கள் எனச் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்” என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார் ரவி.

ஆளுநரின் கடிதம் கிடைக்கப் பெற்ற பின்னர், முதல்வரும், அமைச்சர்களும் நேரில் சென்று ஆளுநரிடம் அதற்கு விளக்கம் அளித்திருக்கின்றனர். அமைதி ஒப்பந்தங்களைக் கிளர்ச்சிக் குழுக்கள் மீறினால் அதை மத்திய உள்துறை அமைச்சகம் பார்த்துக் கொள்ளும் என்று ஆளுநரிடம் முதல்வர் கூறியிருக்கிறார்.

‘இது முறையானதுதான்!’
இந்நிலையில், ஆளுநரின் கடிதத்துக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்பு, “இப்படி வரி வசூல் செய்வதை அரசின் மத்தியஸ்தர்களும், இந்திய அதிகாரிகளும் அங்கீகரித்திருந்தனர். இதுவரை இது ஒரு பிரச்சினையாகவே கருதப்பட்டதில்லை. நாங்கள் ஆட்கடத்தல், பணம் பறித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுவதில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்கள் எனும் போர்வையில் சில குழுக்கள் அப்படியான செயல்களில் ஈடுபடுகின்றன. ஆனால், நாங்கள் முறைப்படிதான் மக்களிடம் வரி வசூல் செய்கிறோம்” என்று குறிப்பிட்டிருப்பதுடன் ஆளுநர் ரவியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறது.

நாகாலாந்து ஆளுநரான ரவி, நாகா குழுக்களுடனான அமைதி முயற்சியில் மத்திய அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தரும்கூட. 2015 ஆகஸ்ட்டில் மத்திய அரசுக்கும், என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்புக்கும் இடையே அமைதிக்கான வரைவு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டாலும், அந்த முயற்சி இன்னமும் இறுதிவடிவம் பெறவில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்த ரவி, பல்வேறு விஷயங்களில் என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்பு முரண்டுபிடிப்பதாகச் சில மாதங்களுக்கு முன்னர் விமர்சித்திருந்தார்.

தற்போது, தங்கள் மீது ஆளுநர் ரவி மிகக் காத்திரமான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதால் கோபமடைந்திருக்கும் என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்பு, “நாகா பிரச்சினையைச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகக் கையாள்வதில் ஆளுநர் மகிழ்ச்சியடைகிறார் என்றால், நீண்டகாலமாக இருந்துவரும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அவர் பொருத்தமான நபர் அல்ல என்றே கருத வேண்டியிருக்கிறது” என்றும் சாடியிருக்கிறது.

வரவேற்பும் எதிர்ப்பும்
இதற்கிடையே, இதுகுறித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்வினைகள் எழுந்திருக்கின்றன. “நாகாலாந்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, காஷ்மீர் மாநிலத்தைப் போன்ற நிலவரத்தை இங்கு ஏற்படுத்த ஆளுநர் முயல்வதாகத் தெரிகிறது. இது நாகா பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்கும் ஒருவர் செய்ய வேண்டிய விஷயமல்ல” என்று நாகாலாந்து மாநில முன்னாள் அமைச்சர் வாத்ஸு மெரு விமர்சித்திருக்கிறார். எனினும், ‘நாகாலாந்து போஸ்ட்’ போன்ற இதழ்கள், ஆளுநரின் நடவடிக்கையை வரவேற்றிருக்கின்றன.

நாகாலாந்து மக்களின் மனக்குமுறல்கள் உள்ளூர் ஊடகங்களில் பிரதிபலித்தாலும், தேசிய அளவில் இந்தப் பிரச்சினை மிகப் பெரிய கவனத்தைப் பெற ஆளுநரின் கடிதம் வழிவகுத்திருக்கிறது என்று குறிப்பிடும் ‘நாகாலாந்து போஸ்ட்’ இதழ், “கிளர்ச்சிக் குழுக்களின் நடவடிக்கைகளைக் கண்டித்து, நாகாலாந்து தன்னார்வ நுகர்வோர் அமைப்பு (என்.வி.சி.ஓ) தலைமையில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அவ்வப்போது நடத்தப்படும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். எனினும், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லை” என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.

உண்மையில், குறிப்பிடத்தக்க முயற்சியாக, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவரின் தலைமையில், மூன்று நபர் குழு ஒன்றை மாநில அரசு உருவாக்கியது. இக்குழு, 2015 ஜூனில் இது தொடர்பான அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்திருந்தது. எனினும், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆளுநரின் அடுத்த நகர்வு
இந்தச் சூழலில், ஆளுநர் எனும் முறையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த ரவி திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. நாகாலாந்து மக்களின் பாராம்பரிய சட்ட விதிமுறைகள், நிலம், இயற்கை வளங்கள் மீதான உரிமை, மதம் மற்றும் சமூகம் சார்ந்த பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை உறுதிசெய்யும் சட்டக்கூறு 371(ஏ), அம்மாநில ஆளுநருக்கும் சிறப்பு அதிகாரங்களை அளித்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு விவகாரத்தை மேற்பார்வையிடப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். சட்டம் - ஒழுங்கு தொடர்பான துறைகளின் முக்கிய நடவடிக்கைகள், இனி தனது ஒப்புதலுக்குப் பின்னர்தான் முடிவு செய்யப்படும் என்று ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையே, ஆளுநரின் கடிதத்தை அம்மாநிலக் காங்கிரஸ் கட்சி வரவற்றிருக்கிறது. அம்மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு நிலவரத்தை ஆளுநர் சரியாக மதிப்பிட்டிருப்பதாக நாகாலாந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.தேரீ கூறியிருக்கிறார். “நாகாலாந்து பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வல்லமை காங்கிரஸுக்குத்தான் இருக்கிறது. நாகாலாந்து அரசியலில் ஒரே மாற்றுசக்தி நாங்கள்தான்” என்று தொடர்ந்து பேசி வருபவர் தேரீ.

நாகாலாந்து கூட்டணி அரசில் பாஜகவும் அங்கம் வகிக்கிறது என்பதும், பிரதமர் மோடியின் அபிமானத்தைப் பெற்றவர் ஆளுநர் ரவி என்பதும் கவனிக்கத்தக்க அம்சங்கள். அப்படி இருந்தும் ஆளுநர் இப்படி அதிரடி காட்டுவது ஏன் என்பது இந்த விவகாரத்தின் முக்கியமான புதிர்.

எது எப்படி இருந்தாலும், ஆளுநரின் இந்த அணுகுமுறை மூலம் தங்கள் நீண்டகால மனக் குமுறல் முடிவுக்கு வருமா என்று நாகாலாந்து மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்