கரோனாவைக் கச்சிதமாய்க் கட்டுப்படுத்திய கேரளா: நோம் சாம்ஸ்கி, அமர்த்தியா சென், சவுமியா சுவாமிநாதன் புகழாரம்

By கா.சு.வேலாயுதன்

“கோவிட் -19 பெருந்தொற்றைக் கேரளம் கையாண்ட விதம் உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று பிரபலத் தத்துவஞானியும் சமூக விமர்சகருமான நோம் சாம்ஸ்கி தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் ஆகியோரும் கேரளம் எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளனர்.

கோவிட் தொற்றின் பின்னணியில் புதிய யோசனைகளை ஆராயக் கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த ‘கேரள உரையாடல்’ எனும் இணையவழி விவாத மன்றத்தில் நோம் சாம்ஸ்கி, அமர்த்தியா சென், சவுமியா சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். ‘கேரள உரையாடல்’ என்பது முன்னணிச் சிந்தனையாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைக்கும் ஒரு தளமாகும்.

இதில் நோம் சாம்ஸ்கி கூறுகையில், “இந்த நெருக்கடிக்கு முகம் கொடுப்பதில், கேரளத்துக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், உலகின் பிற பகுதிகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் ஆச்சரியப்பட வைக்கின்றன. கேரளத்தைப் போல பெரும்பாலான பகுதிகள் இந்த நெருக்கடியைக் கையாளவில்லை. இந்தப் பெருந்தொற்று அசாதாரண சமத்துவமின்மையை மிகக் கூர்மையாக வெளிப்படுத்தியுள்ளது. இந்தச் சமத்துவமின்மை நிச்சயமாக எப்போதும் இருக்கிறது என்றாலும், புதிய தாராளமய காலத்தின் மூலம் இது பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

கோவிட் தொற்றின் முடிவில் உலகில் ஓர் அடிப்படை மாற்றம் ஏற்படுமா எனும் கேள்விக்குப் பதிலளித்த சாம்ஸ்கி, “அமெரிக்கா போன்ற நாடுகள் தற்போதைய நிலைமையைத் தொடரவும், இன்னும் அதிகமான சர்வாதிகாரம், கட்டுப்பாடுகள் மற்றும் மக்கள் கண்காணிப்பு ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் முயல்கின்றன. ஆனால், இதை எதிர்கொள்ள உலகம் முழுவதும் இயக்கங்கள் உள்ளன. இவற்றை ஒருங்கிணைத்தால் அது ஒரு பெரிய சக்தியாக இருக்கும். அவர்கள் மாற்றங்களை உருவாக்கலாம். அவர்கள் அனைவரும் ஒரு புதிய உலகத்தை உருவாக்க முயல்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

நிகழ்வில் பேசிய அமர்த்தியா சென், கேரளத்தின் பொது சுகாதார அமைப்பு, உயர் கல்வி ஆகியவற்றைப் பாராட்டினார். “கேரளத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் இயக்கமாகக் கோவிட் இருக்கும் என்று கருதுகிறேன். இன்றைக்கு இந்தியாவில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய, ஏமாற்றும் தன்மை கொண்ட பொருளாதார முழக்கத்தின் கீழ் நாடு மூழ்கடிக்கப்படும் அபாயம் உள்ளது. அதற்குப் பரவலான எதிர்ப்புணர்வும் இருக்கிறது. ஆனால், அதிகாரத்துவத்தை எதிர்த்துப் போராடுவது, சிவப்பு நாடா முறையை எதிர்த்துப் போராடுவது, அதிவேகத்தில் விஷயங்களைச் செய்வது போன்ற விஷயங்களையும் இது கோருகிறது. உண்மையில், கோவிட்டை எதிர்கொள்ளும் விஷயத்தில் இவற்றைக் கேரளம் கையாண்டிருப்பதாகத் தெரிகிறது” என்று கூறியிருக்கிறார் சென்.

ஐரோப்பாவில் பொது அமைப்பில் ஏற்பட்ட சரிவு கேரளத்தில் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டிய சென், “பொதுத்துறையின் தலையீட்டை ஐரோப்பா ஒரு பாரம்பரியமாகக் கொண்டிருந்தது என்றாலும், தற்போது அப்படியான சூழல் இல்லை. ஆனால், பொதுத்துறையின் மீது அதுபோன்ற நம்பகத்தன்மையை இப்போதும் கேரளத்தில் பார்க்க முடிகிறது” என்று பாராட்டினார்.

மேலும் இந்தியாவில் திட்டமிடப்படாமலும், கட்டமைப்பு இல்லாமலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதாகவும், அது பெரும் துயரத்தையும் கஷ்டத்தையும் ஏற்படுத்தியதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

நிகழ்வில் பேசிய டாக்டர் சவுமியா சுவாமிநாதன், “உலக சுகாதார நிறுவனம் ஆரம்பத்தில் விடுத்த எச்சரிக்கைகளுக்கு ஏற்ப எதிர்வினையாற்றிய நாடுகள், இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்வதில் சிறப்பான முறையில் தயார் நிலையில் இருந்தன. ஜனவரி 30-ல், உலகளாவிய அளவில் ‘கோவிட்-19’ பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்வது தொடர்பாக, ஒரு அவசர எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது.

ஆனால், பிரச்சினைகள் ஏற்படும் என்று கணித்திருந்த கேரளம், ஜனவரி மாத ஆரம்பத்திலேயே தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தது. அதனால்தான், வூஹானிலிருந்து வந்த கரோனா தொற்றுகளைக் கண்டறிய முடிந்தது. இதைத் தொடர்ந்தே, தொற்றுக்குள்ளானோருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியவும் தனிமைப்படுத்தவும் முடிந்தது. அதன் மூலம் இந்தப் பெருந்தொற்றைக் கட்டுக்குள் வைக்க முடிந்தது. முறையான தடுப்பு நடவடிக்கைகள் மூலம், முடிந்தவரை விரைவாக இந்த நோயைக் கேரளத்தால் கட்டுப்படுத்த முடிந்தது” என்று குறிப்பிட்டார் சவுமியா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்