கரோனாவுக்குக் கடிவாளம் போட்ட கேரளா; சாத்தியமானது எப்படி?

By என்.சுவாமிநாதன்

இந்தியாவிலேயே கரோனா தொற்று முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம் கேரளம். ஆனால், இப்போது இந்தியாவிலேயே கரோனாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மாநிலங்களில் முன்வரிசையில் நிற்கிறது கேரளம். இது எப்படிச் சாத்தியமானது?

கேரள மக்களிடம் இயல்பாகவே இருக்கும் விழிப்புணர்வும், அரசின் நடவடிக்கைகளுக்கு அவர்கள் தரும் பூரண ஒத்துழைப்புமே இதற்கு முக்கியக் காரணம். கூடவே அரசு முன்னெடுக்கும் விஷயங்கள், மக்கள் வீட்டைவிட்டு அநாவசியமாக வெளியே வருவதையும் கணிசமாகக் குறைத்தன. சீனாவின் வூஹானில் இருந்து வந்த மருத்துவ மாணவிதான் கேரளத்தில் கரோனா தொற்றிய முதல் பெண்.

ஜனவரி 30-ல் கேரளத்தில் கரோனா தன் கணக்கைத் தொடங்க, தேசமே கேரளத்தை உன்னிப்பாகக் கவனித்தது. கரோனா குறித்துத் தமிழகத்தில் பேசவே தொடங்காத அன்றைய நாளிலேயே கேரளத்தில் கரோனாவை எதிர்கொண்டனர் அங்குள்ள மருத்துவர்கள். ஏற்கெனவே நிபா வைரஸை எதிர்கொண்டிருந்ததால் நெருக்கடியான சூழலில் நோயாளிகளைக் கையாளும் அனுபவத்தைப் பெற்றிருந்தனர்.

தொடர்ந்து, இத்தாலியில் இருந்து கேரளம் திரும்பிய குடும்பத்தினர் தேவாலயம், உறவினர் வீடு, திருமண விழாக்கள் என ஏகத்துக்கும் சுற்றியிருந்தனர். அவர்களது குடும்பத்துப் பெரியவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்கு வந்தபோதுதான் மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் சென்ற வழித்தடம் அறியப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோரைத் தனிமைப்படுத்தி, கண்காணித்து சமூகப் பரவலைத் தடுத்தது கேரள சுகாதாரத்துறை.

கரோனா ஒழிப்புப் பணிகளில் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தொடர்ந்து பல்வேறு புதுமைகளைச் செய்துகொண்டே இருந்தார். அதனாலேயே சர்வதேச பொதுச்சேவை தினத்தன்று ஐ.நா. சபை, உலக அளவில் நடத்திய கலந்துரையாடலில் ஆறே பேரை உரையாற்ற அழைத்தபோது, ஷைலஜாவையும் அழைத்தது. காணொலி வழியே அவரும் உரையாடினார்.

ஷைலஜா சுகாதாரத்துறையில் அந்த அளவுக்கு அசுரப் பாய்ச்சல் நிகழ்த்தினார்; நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார். கேரளத்தின் 14 மாவட்டங்களிலும், மாவட்டத்துக்கு இரண்டு அரசு மருத்துவமனைகளை முழுக்கக் கரோனா நோயாளிகளுக்கானதாக மாற்றினார். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் 4 மாடிக் கட்டிடம் நிர்வாகப் பிரிவுக்காகக் கட்டப்பட்டுத் திறப்பு விழாவுக்குக் காத்திருந்தது. அதை உடனடியாகக் கரோனா வார்டாக மாற்றியவர், அங்கேயே 2-வது மாடியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட சுகாதாரப் பணியாளர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். இந்தியாவிலேயே வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அதிக முகாம்கள் அமைத்ததும் கேரளம்தான். கேரளத்தில் மட்டும் 3,02,016 தொழிலாளர்களுக்கு, 15,541 முகாம்கள் அமைக்கப்பட்டன. முகாமை விட்டு அவர்கள் வெளியே செல்லாத அளவுக்கு அவர்களுக்குத் தேவையான அனைத்தும் அங்கே வழங்கப்பட்டன.

கேரளத்தைத் தொடர்ந்து அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 11,135 முகாம்கள் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டன. ஆனால், அதில் 3,397 முகாம்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்பட்டவை. கேரளத்தில் அனைத்து முகாம்களையும் அரசே அமைத்தது. இந்திய அளவில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட முகாம்களில் 68.8 சதவீதம் கேரளத்தில் அமைக்கப்பட்டதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கேரளத்தில் கரோனா பரவலைக் குறைத்ததில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பும் மிக அதிகம். கேரளத்தில் கிராமப் பஞ்சாயத்துக்கள் அதிக அதிகாரம் பெற்றவை. மகளிர் சுய உதவிக் குழுக்களான குடும்ப ஸ்ரீ அமைப்புகளோடு சேர்ந்து உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் ‘கம்யூனிட்டி கிச்சன்’ அமைக்கப்பட்டது. இவை ஏழைகளின் பசியாற்றியதால் மக்களுக்கு வீட்டுக்குள் இருப்பதன் சங்கடங்கள் தெரியவில்லை. கூடவே சுகாதாரத்துறை இந்த உணவுகளை விநியோகிக்க இணைய வழியில் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்தது. அதில் இரண்டு லட்சம் பேர் விண்ணப்பிக்க அவர்களின் சேவையால் உணவு விநியோகமும் தடையின்றி நடந்தது. ரேஷனில் மக்களுக்குத் தேவையான அரிசியும், மளிகைப் பொருள்களும் இலவசமாக வழங்கப்பட்டன.

கேரளம் முழுவதிலும் இருக்கும் 33,115 அங்கன்வாடி மையங்களிலும் பணி செய்யும் 60 ஆயிரம் அங்கன்வாடி ஊழியர்கள், மாநிலம் முழுவதிலும் இருக்கும் 4 லட்சம் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குத் தொடர்ந்து ஊட்டச்சத்து, சத்து மாத்திரைகளை வீடுகளுக்கே போய் வழங்கி வருகின்றனர். இப்படியான தொடர் செயல்பாடுகளால் கேரளத்தில் இப்போதைய கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,691 ஆகவே உள்ளது. இதுவரை கேரளத்தில் கரோனாவால் 22 உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.

ஜனவரி 30-ம் தேதி, முதல் நோயாளி அடையாளம் காணப்பட்ட அன்று கேரள சுகாதாரத் துறையின் ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா ஒழிப்பில் ஏ, பி, சி என மூன்று திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதில் ‘ஏ ’ திட்டப்படி விமான நிலையத்திலேயே நோயாளியை அடையாளம் காண்பது, ‘பி’ திட்டபடி விமான நிலையத்தில் இருந்து தப்பியவர்களின் பயண வரலாறு, வழித்தடத்தின் மூலம் அடையாளம் காண்பது என நீள்கிறது. ‘சி’ திட்டப்படி, சமூகப் பரவல் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் தயார் நிலையில் உள்ளது கேரளம். ஆனாலும், தெளிவான திட்டமிடலால் கேரளத்துக்கு ‘சி’ திட்டத்தைச் செயல்படுத்தவேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

41 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்