கரோனா வைரஸ் பொதுமுடக்கத்தால் இந்தியாவில் ஆரம்பக் கல்வி மற்றும் மேல்நிலைப் பள்ளியியில் பயிலும் 24 கோடியே 70 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதில் அங்கன்வாடி மையங்களுக்குச் செல்லும் 2.80 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யுனிசெஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெற்காசியாவில் மட்டும் கரோனா வைராஸால் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கத்தால் குறைந்தபட்சம் 60 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற உறுதியற்ற சூழல் நிலவுகிறது. பொதுத் தேர்வுகளையும் பல்வேறு மாநிலங்கள் ரத்து செய்துள்ளன. 12, 10-ம் வகுப்புத் தேர்வுகளையும் பல்வேறு மாநிலங்கள் ரத்து செய்தபோதிலும், இன்னும் சில மாநிலங்கள் முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகின்றன.
இந்தச் சூழலில் கரோனா வைரஸ் பொதுமுடக்கத்தால் இந்தியாவில் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது குறித்து யுனிசெஃப் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தொடங்கியபின் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கத்தால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் ஆரம்பக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியில் பயிலும் 24 கோடியே 70 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 2 கோடியே 80 லட்சம் குழந்தைகள் பள்ளிக் கல்வியைத் தொடங்கும் முன் அங்கன்வாடி மையத்தில் பயில்பவர்கள். கரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்பே, 60 லட்சம் சிறுவர், சிறுமியர் ஏற்கெனவே பள்ளியிருந்து விலகிவிட்டனர்.
இருப்பினும் மாணவர்களின் கல்வி பாதிப்படையாமல் இருப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு வழிகளைக் கையாண்டு கல்வி போதித்து வருகின்றன. குறிப்பாக மின்னணு தளங்கள் வாயிலாக அதாவது மொபைல் செயலிகள், தொலைக்காட்சி சேனல்கள், 'திக்சா தளம்', 'ஸ்வயம் பிரபா' சேனல், இ-பாடசாலை' போன்றவற்றின் மூலம் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கப்படுகிறது.
சமீபத்தில் கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாற்றுக்கல்வித் திட்டத்தையும் தயாரித்துள்ளது. அதாவது கரோனா வைரஸ் காலத்தில் பள்ளிக்கு வரமுடியாத சூழலில், அவர்களுக்கு வீட்டிலிருந்தே பயிலும் திட்டத்தை வகுத்துள்ளது.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தியாவில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கால்பங்கு அதாவது 24 சதவீதம் மாணவர்களுக்கு மட்டும்தான் வீடுகளில் இணையதளம் மூலம் கல்வி பயிலும் வசதி இருக்கிறது. அதிலும் நகர்ப்புறங்களில் மட்டும் அதிகம். பாலின அடிப்படையிலும் வேறுபாடு இருக்கிறது.
ஆனால், பெரும்பாலான மாணவர்களுக்குத் தொலைநிலைக் கல்வி வாயிலாக கல்வி பயிலும் வசதி இல்லை. அதாவது இண்டர்நெட் மூலம் கல்வி பயிலும் வசதி இல்லை.
கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேி வரை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுக்கு 4 லட்சத்து 60 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. இது வழக்கமாக வரும் புகார்களின் எண்ணிக்கையைவிட 50 சதவீதம் அதிகமாகும். இதில் 10 ஆயிரம் புகார்கள், அழைப்புகள் குழந்தைகளுக்கு ஆதரவு கேட்டு வந்தன. 30 சதவீதம் அழைப்புகள், புகார்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் துன்புறுத்தல், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் ஆகியவை பற்றி வந்துள்ளன.
இந்த கரோனா வைரஸால் மற்றொரு முக்கியமான பாதிப்பு குழந்தைகளை எதிர்நோக்கியுள்ளது. சத்தான சரிவிகித உணவு, எளிதாகக் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 2 கோடி குழந்தைகள் உடலுறுப்பு வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்படுகிறார்கள், 4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோர், சத்தான உணவு இல்லாமல் வளர்ச்சியில் பின்தங்குகிறார்கள். 15 முதல் 49 வயதுடைய பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நோய் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
யுனிசெஃப் அமைப்பின் இந்தியாவுக்கான பிரதிநிதி மருத்துவர் யாஸ்மின் அலி ஹக் கூறுகையில், “இந்தக் கரோனா வைரஸ் குழந்தைகளின் பலவீனத்தை வெளிப்படுத்திவிட்டது. வைரஸால் பாதிப்பு குறைவுதான் என்றாலும், முறைமுக மற்றும் நீண்டகால பாதிப்புகள் குழந்தைகளின் கல்வியில் ஏற்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான குழந்தைகள் தங்களின் வளர்ச்சி, கல்வி கற்கும் வாய்ப்பு, வாழும் உரிமை ஆகியவற்றை இழந்துள்ளனர்.
சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் சமூதாயத்தில் பாதிப்பின் விளிம்பில் இருக்கும் குடும்பத்தைக் காக்க வேண்டும். அவர்களுக்கு உதவியும், மருத்துவ வசதியும், அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வியும், போதுமான சத்தான உணவும் வழங்கிட வேண்டும் என்பது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் உறுதியான பொறுப்பாகும்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கத்தால், வழக்கமாக குழந்தைகளின் உயிர்காக்க போடப்படும் தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் வழங்குதில் சிக்கல் ஏற்பட்டு 3 லட்சம் குழந்தைகள் அடுத்த 6 மாதங்களில் உயிரிழக்க நேரிடலாம் எனத் தெரிவித்துள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago