டெல்லியில் கரோனா பரவல் தமிழகத்தை முந்தக் காரணம் என்ன? :  ஓர் அலசல்

By ஆர்.ஷபிமுன்னா

டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் தமிழகத்தை விட முந்தி நிற்கிறது. இதன் பின்னணியை ‘இந்து தமிழ் திசை’ இணையம் அலசியபோது பல புதிய தகவல்கள் வெளியாகின.

சீனாவில் கடந்த வருடம் துவங்கிய கரோனா இந்தியாவில் பரவ வெளிநாட்டவர் காரணமாயினர். இங்கு வந்தவர்களை விமானநிலையங்களில் முறையாக சோதனை செய்யாததால் இப்பிரச்சனை உருவானதாகப் புகார்கள் உள்ளன.

எனினும், வெளிநாடுகளிலும் எழுந்த இந்த புகார்கள், கரோனாவை கட்டுப்படுத்தியதன் மூலம் அடங்கின. மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில் கரோனா கட்டுப்பாடு மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் சவாலாகி விட்டது.

கரோனா பரவலை தடுப்பதில் ஊரடங்கை துவக்கி வைத்து மத்திய அரசு முன் நின்றது. பிறகு கரோனா பரவல் கட்டுக்கடங்காத நிலை உருவாகவே அதன் பொறுப்பை படிப்படியாக மாநில அரசுகளுக்கு அளித்து வருகிறது.

இதனால், கேரளா போன்ற மாநிலங்களில் இருந்த கரோனாவின் தீவிரம் குறைந்தது. அதேசமயம், மகராஷ்டிரா, தமிழகம் போன்ற மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்தது.

குறிப்பாக சென்னையில் அதிகரித்தப் பரவலால் தமிழகத்தின் கரோனா தொற்று எண்ணிக்கை பெரும் அச்சுறுத்தலானது. தற்போது, தமிழகத்தை பின்னுக்கு தள்ளும் வகையில் நாட்டின் தலைநகரமான டெல்லியில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 19 ஆம் தேதி முதல் இது முதன்முறையாக தமிழகத்தை விட அதிகரிக்கத் துவங்கியது. நேற்று வெளியான புள்ளிவிவரத்தின்படி டெல்லியில் ஒரே நாளில் 3,947 பேருக்கு தொற்று ஏற்பட்டு அதன் எண்ணிக்கை 66,602 என உயர்ந்துள்ளது.

24 மணி நேரத்திற்கான இது மற்ற அனைத்து மாநிலங்களில் இல்லாத எண்ணிக்கை ஆகும். இது, மகராஷ்டிராவில் அடுத்த எண்ணிக்கையாக 3,214 மற்றும் தமிழகத்தில் 2,516 என்றுள்ளது.

இந்த உயர்வின் பின்னணியில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொதுவாகவே அதிகமாகக் கரோனா மருத்துவப் பரிசோதனை நடத்தும் மாநிலங்களில் அதன் தொற்று எண்ணிக்கையும் அதிகரிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.

இதை ஆதரிக்கும் வகையில் டெல்லியில் அதிகமாக நடத்தப்படும் கரோனா மருத்துவப் பரிசோதனையால் தொற்று எண்ணிக்கையும் அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது. இந்த சோதனையின் எண்ணிக்கை கடந்த மாதம் இரட்டிப்பானது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியின் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது, ‘நாட்டிலேயே அதிகமான மருத்துவப் பரிசோதனை டெல்லியில் நடைபெறுவதால் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த சோதனை, ஒரு மில்லியனில் 19,415 மக்களுக்கு என்ற விகிதாச்சாரத்தில் உள்ளது.

அதிகமான மக்களுக்கு சோதனை செய்து தொற்று இருப்பவர்களுக்கான முறையான மருத்துவ சிகிச்சை செய்வது எங்கள் நோக்கம். அதேசமயம் உயிரிழப்பு குறைந்து குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.’ எனத் தெரிவித்தார்.

டெல்லியை விட அதை சுற்றியுள்ள மாநிலங்களின் முக்கிய நகரங்களான குருகிராம், நொய்டா, காஜியாபாத் போன்றவற்றிலும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதற்கு அந்நகரங்களுக்கும், டெல்லிக்கும் இடையே சென்று வருவதில் இருந்த தடை முற்றிலுமாக நீக்கப்பட்டது காரணமானது.

கரோனா துவக்கத்தில் வெளிநாட்டவர், தப்லீக்-எ-ஜமாத்தினர், வீடு திரும்பும் தொழிலாளர்கள் எனக் காரணங்கள் வரிசைப்படுத்தப்பட்டன. இப்புகார்களில் தற்போது டெல்லியின் நெரிசல் பகுதிகள் சிக்கி உள்ளன.

ஏனெனில், சமூகப் பரவலாகி விட்டதாகக் கருதப்படும் கரோனோ நெருக்கமாக மக்கள் வசிக்கும் மாவட்டங்களில்

அதிகமாக உள்ளது. சமீபத்தில் ஐசிஎம்ஆர் சார்பில் டெல்லியின் 11 மாவட்டங்களில் ஒரு கணக்கெடுப்பு நடைபெற்றது.

அதில், டெல்லியின் பிறமாநில எல்லைகளை ஒட்டி அமைந்த மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகம் இருப்பதாகத் தகவல் வெளியானது. இந்த மாவட்டங்களில் குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் என்பதுடன் நெருக்கத்துடன் வசிக்கும் பொதுமக்களும் அதிகம்.

இதனால், சமூகப்பரவல் நிலைக்கு மாறி விட்டதாக யூனியன் பிரதேசமான டெல்லியின் முதல்வர் கேஜ்ரிவால் கூறி வருகிறார். இதனால், டெல்லியின் ’ஹாட்ஸ்பாட்’ பகுதி என அறிவிக்கப்படும் பகுதிகளில் முன்பு இருந்த அளவிற்கு கட்டுப்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்பகுதியில் கரோனாவின் ஆபத்தை பெரும்பாலான பொதுமக்கள் உணரவில்லை. அவர்கள் காவல்துறை கட்டுப்பாடை மீறி வெளியில் சென்று வருவது தொடர்வதாகப் புகார்கள் உள்ளன.

இந்த சூழலில், டெல்லியில் சமூகப் பரவல் இருப்பதாக மத்திய அரசு இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு டெல்லியின் பெரும் நிர்வாகப் பொறுப்பு மத்திய அரசிடம் இருப்பது காரணம் எனவும் கருதப்படுகிறது.

எனினும், கடந்த வாரம் முதல்வர் கேஜ்ரிவாலை நேரில் அழைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கரோனா கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தார். மற்ற கட்சி தலைவர்களின் கருத்துக்களையும் அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார்.

இதையடுத்து, டெல்லியின் கரோனா பரவல் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசும் முன்னிறுந்து செய்யத் துவங்கி உள்ளது. இத்துடன், கரோனா பரவல் அதிகரிப்பால் அஞ்சப்படும் டெல்லிவாசிகள் தானாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்வதும் அதிகரித்துள்ளது.

இந்த மருத்துவப் பரிசோதனை துவக்கத்தில் டெல்லிவாசிகளின் வீடு தேடிச் சென்று நடத்தப்பட்டு வந்தது. முதல்வர் கேஜ்ரிவாலின் உத்தரவை ஆளுநர் மூலம் ரத்து செய்த மத்திய அரசு, அதற்காக பரிசோதனைக் கூடங்கள் அமைத்தது.

இதனால், தமக்கு உள்ள கரோனாவை சோதிக்க அங்கு செல்லும் பொதுமக்களுக்கு இடையிலும் தொற்றுள்ளவர்கள் மூலம் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதை குறிப்பிட்ட முதல்வர் கேஜ்ரிவால் பழைய முறையில் கரோனா சோதனை செய்யப்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.

இதுபோல், இரு அரசுகளுக்கு இடையிலான மோதலுக்கு இடையிலும் சிக்கிய கரோனாவால் தன் கோரமுகத்தை மறைக்க முடியவில்லை. இம்மாத இறுதியில் கரோனா தொற்று எண்ணிக்கை ஐந்து லட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்