சீனாவுக்குப் பதிலடி கொடுக்க ஆயத்தம்; முப்படை ஆயுதக் கொள்முதலுக்கு ரூ.500 கோடி அவசர நிதி: மத்திய அரசு ஒப்புதல்

By பிடிஐ

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த விவகாரத்தில், சீனா அடுத்ததாக எல்லை மீறலில் ஈடுபட்டால் பதிலடி தர இந்திய ராணுவம் தயாராகி வருகிறது. அதற்காக ஆயுதங்கள் வாங்குவதற்காக ரூ.500 கோடி அவசர நிதியாக மத்திய அரசு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த வாரம் திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

"கல்வான் எல்லைப் பகுதி எங்களுக்குச் சொந்தமானது. அதில் இறையாண்மை இருக்கிறது" என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்திய அரசு, சீனாவின் பேச்சை ஏற்க முடியாது. அது மிகைப்படுத்தப்பட்டது என்று மறுப்புத் தெரிவித்தது.

மேலும், சீனாவின் அத்துமீறல் நடவடிக்கை, இரு நாட்டு உறவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு சீன ராணுவம் நேரடியாகவே பொறுப்பேற்க வேண்டும் என இந்தியா சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளக்கிழமை மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த பிரதமர் மோடி, “இந்தியாவின் எந்தப் பகுதியையும், எந்த எல்லையையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை. இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாக்க ராணுவம் எந்த நேரத்திலும் தகுந்த பதிலடி கொடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள்பயணமாக ரஷ்யா புறப்படும் முன், முப்படைத் தளபதிகளான ராணுவத் தளபதி ஜெனரல் எம்எம் நரவானே, கப்பற்படைத் தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், விமானப்படைத் தளபதி ஆர்கேஎஸ் பகதூரியா, தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பிபின் ராவத் ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் எல்லைப் பகுதியில் சீனாவின் அத்துமீறல், ஆவேசமான போக்கிற்குத் தகுந்த பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழுமையான சுதந்திரம் வழங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சீன ராணுவத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தேவையான ஆயுதங்களை வாங்கவும் முப்படைக்கும் அவசர நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கி அனுமத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறுகையில், “சீனாவுக்கு எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கும் சூழல் ஏற்பட்டாலும் அதற்காக முப்படைகளும் தயாராக இருக்க வேண்டும்.

இதற்காக முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய ரூ.500 கோடி அவசர நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதி மூலம் புதிய ஆயுதங்கள், தளவாடங்களை வாங்கிக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் பாதுகாப்புப் படைகள், பாதுகாப்பு அமைச்சகத்திடம் என்ன மாதிரியான ஆயுதங்களை வாங்க முடிவு எடுத்திருப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. எந்தெந்த ஆயுதங்கள் பற்றாக்குறையாக உள்ளன, எவை அதிகமாகத் தேவைப்படும் போன்றவை பட்டியலிடப்பட்டு வருகின்றன.

மிகக் குறுகிய நாட்களில் இந்த ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதற்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுக்களுக்கு முன் நடந்த உரித் தாக்குதலுக்கு பின் ஏராளமான ஆயுதங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் அவற்றின் பட்டியல் வேகமாகத் தயாராகி வருகின்றன.

விமானப் படையும் சீனாவுக்குப் பதிலடி தரும் வகையில் தேவையான ஆயுதங்கள் குறித்த பட்டியலைத் தயாரித்து வருகிறது. இந்த ஆயுதங்கள் அனைத்தையும் பல்வேறு தரப்பிடம் வாங்காமல் ஒரே விற்பனையாளரிடம் வாங்கவும் பேசப்பட்டு வருகிறது'' எனத் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE