கரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுகிறார்கள்: மத்திய அரசு, தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

By பிடிஐ

கரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் மிருகங்களைக் காட்டிலும் மோசமாக நடத்தப்படுகிறார்கள். கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் குப்பைகளில் காணப்படுகின்றன. டெல்லியில் ஏன் கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைந்தது என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக விமர்சித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

அதுமட்டுமல்லாமல், டெல்லி, தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளின் நிலை என்ன, படுக்கைகள் இருப்பு குறித்து அறிக்கை அளிக்கவும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை இறுதிச்சடங்கின்போது மனிதநேயமற்று கையாண்டு வீசி எறிதல், நோயாளிகளை மரியாதைக் குறைவாக நடத்துதல் தொடர்பான செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வானி குமார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி கரோனா நோயாளிகள் மோசமாக நடத்தப்படுவது குறித்தும், உயிரிழந்தவர்களி்ன் உடல்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு அடக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது.

கரோனா நோயாளிகள் மோசமாக மருத்துவமனைகளில் நடத்தப்படுவது குறித்தும், கரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மரியாதைக்குறைவாக கையாளப்படுவது குறித்தும் நீதிபதிகள் காட்டமாகக் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பல மாநில அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுகிறார்கள். ஒரு புறம் கரோனாவில் உயிரிழந்தவர்கள் உடல்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படுவதைப் பார்க்கிறோம். கரோனா நோயாளிகள் நாள்தோறும் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கவனிக்கக்கூட ஒருவரும் இல்லை.

மகாராஷ்டிரா, தமிழகத்தில் கரோனா பரிசோதனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்போது டெல்லியில் மட்டும் பரிசோதனை அளவு குறையக் காரணம் என்ன? டெல்லியில் நாள்தோறும் 7 ஆயிரமாக இருந்த பரிசோதனை 5 ஆயிரமாகக் குறைந்ததற்குக் காரணம் என்ன?

கரோனா வைரஸைத் தடுப்பது குறித்து மத்திய அரசு வகுத்த வழிகாட்டி நெறிமுறைகளை டெல்லியில் மாநில அரசு கடைப்பிடிக்கவில்லை. டெல்லியில் உள்ள சூழல் அச்சுறுத்தலாக, கொடூரமாக, பரிதாபமான நிலையில் இருக்கிறது. கரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசாக நடத்தப்படுகிறார்கள்.

டெல்லியில் உள்ள மருத்துமனை நிலவரத்தைச் சொல்லவே வருத்தமாக இருக்கிறது. கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உயிரிழந்தவர்களின் உடலைக் கையாளுதல் போன்றவை கவலையளிக்கும்விதமாக இருக்கின்றன.

கரோனாவால் ஒரு நோயாளி இறந்துவிட்டால், அவரின் இறப்பு குறித்து அவரின் குடும்பத்தாருக்கூட தகவல் சொல்வதில்லை. சில நேரங்களில் நோயாளியின் உறவினர்களைக் கூட இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிப்பதில்லை.

டெல்லி மருத்துவமனைகளில் ஏராளமான படுக்கைகள் காலியாக இருந்தும், மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர நோயாளிகள் அலைபாய்கிறார்கள். எங்களுக்குக் கிடைத்த செய்திகள் அடிப்படையில் டெல்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல்கள், நடைபாதையிலும், காத்திருப்பு அறையிலும் வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான படுக்கைகள் காலியாகவே இருக்கின்றன. ஆனால், கரோனவில் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக அனுமதிப்பதில்லை.

ஒரு மாநில அரசின் கடமை என்பது நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகளை மட்டும் உருவாக்குவது அல்ல, மருத்துவ கட்டமைப்பு, மருத்துவர்கள், ஊழியர்கள் அனைத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

டெல்லி மருத்துவமனைகள் மட்டுமல்ல மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் கூட மோசமானநிலைதான் நிலவுகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் எந்த அளவுக்கு உள்ளன, மருத்துவ ஊழியர்கள், மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு இருக்கிறதா என்பதை விளக்க நோட்டீஸ் அளிக்க உத்தரவிடுகிறோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசும் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை அடுத்த வாரம் மீண்டும் விசாரிக்கிறோம்''.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்