கரோனா லாக்டவுன் காலத்தில் ஊழியர்களுக்கு முழு ஊதியம் தராத, தர முடியாமல் போன தனியார் நிறுவனங்கள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் ஜூலை மாதம் இறுதி வரை எடுக்க மத்திய அரசுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த மனு மீது இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.
லாக்டவுன் காலத்தில் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பிடித்தமின்றி முழு ஊதியம் வழங்க வேண்டும் என 2005-ம் ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி மத்திய உள்துறைஅமைச்சகம் கடந்த மார்ச் 29-ம் தேதி அறிவித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.கே.கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கை கடந்த மே மாதம் 15-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், அடுத்த இரு வாரங்களுக்கு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதித்து, மத்திய அரசு பதில் அளிக்கக் கோரியிருந்தது. இந்த சூழலில் மார்ச் 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பிரமாணப் பத்திரம் கடந்த 4-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கடந்த மார்ச் 29-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது அல்ல.
லாக்டவுன் காலத்தில் ஒப்பந்த ஊழியர்களும், தொழிலாளர்களும் ஊதியமில்லாத சூழலுக்கு ஆட்படக்கூடாது என்பதற்காகவே அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பொதுநலன் கருதி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தேசிய நிர்வாகக் குழு எடுத்த முடிவாகும். நிறுவனங்கள், தொழிற்சாலைகளால் முழுமையான ஊதியத்தை வழங்க முடியாத சூழலில் இருந்தால் அதற்கான ஆதாரங்களை அதாவது தங்களால் ஊதியம் வழங்க முடியாத சூழலில் இருக்கிறோம் என்பதற்கான ஆதாரத்தை நிறுவனங்கள் தங்களின் பேலன்ஸ் ஷீட்டிலும், வரவு செலவுக் கணக்கிலும் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்காமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.கே.கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்த வழக்கில் உத்தரவுகளைப் பிறப்பித்தது.
அதில், “ லாக்டவுன் காலத்தில் ஊழியர்களுக்கு முழு ஊதியம் தர முடியாத தனியார் நிறுவனங்கள் மீது ஜூலை மாதம் இறுதி வரை மத்திய அரசு எந்த விதமான கடுமையான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.
நிறுவனங்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஊழியர்களுடன் அமர்ந்து பேசி, ஊதியம் வழங்குவது தொடர்பாக சுமுக முடிவை எடுக்க வேண்டும்.
இதற்குத் தேவையான வசதிகளை, செயல்முறைகளை அந்தந்த மாநில அரசுகள் உருவாக்கிக் கொடுத்து அதற்கான அறிக்கையை தொழிலாளர் ஆணையரிடம் அளிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசும் உதவி செய்து தேவையான சுற்றறிக்கையை தொழிலாளர் துறை மூலம் வழங்கிட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் கடந்த மார்ச் 29-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் சட்டபூர்வத்தன்மை குறித்து அடுத்த 4 வாரங்களுக்குள் பிரமாணப்பத்திரமாக மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை ஜூலை இறுதி வாரத்துக்கு ஒத்தி வைக்கிறோம்” என உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago