மரபணு வரிசை செய்யப்பட்ட இந்தியகரோனா நோயாளிகளில் சுமார் 41.2சதவீதம் புதிய ஏ3ஐ (A3i)என்ற கிளையினம் என்ற வியப்பான தகவலை, ஹைதராபாத்தில் உள்ள ‘சென்டர் பார் செல்லுலர் - மாலிகுலர் பயாலஜி' மற்றும் டெல்லியில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் பார் ஜீனோமிக்ஸ் அண்ட் இன்டகிரெடிவ் பயாலஜி', ஆகிய நிறுவனங்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளன. ஃபைலோஜெனடிக் எனப்படும் பரிணாம மரபு வரிசை பட ஆய்வு முறையின் வழி இந்த புதிய கிளையினத்தை கண்டுபிடித்துள்ளனர்.
உலகில் பரவலாக இருக்கும் ஏ2ஏ (A2a) என்ற கிளையினம் தான் இந்தியாவிலும் முதலாவது என்றாலும் இந்த புதிய A3i இரண்டாம் இடத்தில் உள்ளது பெரும் வியப்பை அளித்துள்ளது. மேலும் தெலங்கானா, தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் முதலிடம் இந்த A3i புதிய கிளையினம்தான். இந்த ஆய்வு முடிவுகள் வெளியானதும், போலி செய்திகள் பரவி வெற்று பீதி ஏற்படக் கூடாது என்று இந்த ஆய்வு நிறுவனங்களின் மைய அமைப்பான சிஎஸ்ஐஆர் நிறுவனம் தெளிவான விளக்கம் அளித்தது. ‘‘புதிதாக இனம் காணப்பட்டுள்ள கிளையின வைரஸ் கூடுதலாக பாதிப்பு ஏற்படுத்தும் என்றோ அல்லது குறைவாக தாக்கம் செலுத்தும் என்றோ கூற எந்த ஆதாரமும் இல்லை’’ என்று சிஎஸ்ஐஆர் தெளிவுபடுத்தியது.
வைரஸ் வம்ச கிளைப்படம்
நமக்கு போதிய தரவுகள் இருந்தால் கொள்ளு கொள்ளு தாத்தா - பாட்டி, கொள்ளுத் தாத்தா - பாட்டி, தாத்தா - பாட்டி,அப்பா - அம்மா, உடன் பிறந்தவர்கள், நாம் என குலவரிசை வம்ச கிளைப்படதை உருவாக்கலாம்.
திடீர் மரபணு மாற்றத்தின் தொடர்ச்சியாக நாவல் கரோனா வைரஸில் புதிய புதிய வேற்றுருவங்கள் உருவாகும். உலகெங்கும் இதுவரை சுமார் 200 வேற்றுருவ வைரஸ்கள் உருவாகி உள்ளதாக மதிப்பீடு செய்கிறார்கள். இந்த வெவ்வேறு வேற்றுருவ வைரஸ்களை பரிணாம மரபு வரிசைப்படி தொகுக்கலாம்.
நான் -> எனது அம்மா-> எனது பாட்டிஎன எனது வம்ச வழியை வகுக்கலாம். அதுபோல எனது சித்தியின் மகள் வரிசைசெய்யும் போது, சித்தி மகள்-> சித்தி-> எனது பாட்டி என அமையும். அதாவது எனக்கும் எனது சித்தி மகளுக்கும் பொதுமூதாதையர் எங்களது தாய் வழிப்பாட்டி. இதுதான் எனக்கும் என் சித்தி மகளுக்கும் உள்ள பரிணாம மரபு வரிசை.
இதேபோலதான் குறிப்பிட்ட ஒரு வேற்றுருவ வைரஸ் வேறு ஒரு வேற்றுருவ வைரஸிடம் இருந்து பரிணமித்து இருக்கும். அந்த வைரஸ் வேறு ஒரு வேற்றுருவ வகையில் இருந்து உருவாகி இருக்கும். இவ்வாறு வெவ்வேறு வேற்றுருவ நாவல் கரோனா வைரஸ்களின் பரிணாமமரபு வரிசையை தொகுத்து பார்ப்பதுதான் ஃபைலோஜெனடிக் வரைபடம் எனப்படும் வைரஸ் வம்ச கிளைப்படம்.
வம்ச கிளைகள்
எனது தாய் வழி பாட்டிக்கு ஒரு சகோதரன் எனக் கொள்வோம். அந்த சகோதரனுக்கும் குழந்தைகள் இருக்கும். அந்த குழந்தைகள் பெரியவர்களாக மாறி அவர்களுக்கும் எங்களை போல குழந்தைகள் இருக்கும் அல்லவா?
எங்கள் பாட்டியின் தாய் - தந்தை, அதாவது எங்கள் கொள்ளு பாட்டி - தாத்தாவிடம் தொடங்கி வம்ச கிளைப்படம் தொகுத்தல் அடி மரம் போல, எங்கள்கொள்ளு பாட்டி - தாத்தாவும் ஒரு கிளையில் எங்கள் பாட்டியின் சகோதரன், மறுகிளையில் எங்கள் பாட்டி. எங்கள் பாட்டியின் கிளையில் ஒரு உப கிளையாக என் அம்மா; வேறு ஒரு உப கிளையாக எனதுசித்தி. இப்படி அமையும் தானே? அதேபோல எங்கள் பாட்டியின் சகோதரன், அவரின் குடும்பம் வேறு ஒரு குடும்ப கிளையாக அமையும் அல்லவா?
வெவ்வேறு வேற்றுருவ நாவல் கரோனா வைரஸ்களின் மூதாதையர் யார் என கண்டுபிடித்து பரிணாம மரபு வரிசையை தொகுத்து பார்த்தல் அதிலும் பல வம்ச கிளைகள் தென்படும்.
பத்தோடு பதினொன்று
இதுவரை உலகெங்கும் 80 நாடுகளை சார்ந்த சக்ஸ் கிருமி தொற்றியவர்களிடம் இருந்து வைரஸ் மாதிரிகளை பெற்று மரபணு வரிசை செய்துவிட்டார்கள். உலகெங்கும் உள்ள வைரஸ் வேற்றுவ வகைகளை ஃபைலோஜெனடிக் வரை படம்செய்து பார்த்தபோது A1a, A2, A2a, A3, A6,A7, B, B1, B2 மற்றும் B4 என்கிற பத்துகிளைகளை இனம் காண முடிந்துள்ளது. இந்த ஆய்வு வழி பதினோராவதாக A3i என்ற வகை இந்தியாவில் இனம் காணப்பட்டுள்ளது. டிசம்பரில் சீனாவின் வூஹான் பகுதியில் மனிதரிடம் பரவிய முதல் வைரஸ் வகைதான் அடிமரம். அதன் பின்னர் 2 பெரும் கிளைகள் உருவாகின. இந்த பெரும் கிளைகளை A மற்றும் B பெரும் கிளைகள் என்கின்றனர். A பெரும் கிளை பரிணமித்தது ஐரோப்பா என்பதால் ஐரோப்பிய பெரும் கிளை எனவும், B பெரும் கிளை மரபணு மாற்றங்கள் ஏற்பட்டது பெருமளவில் கிழக்கு ஆசிய என்பதால் இதனை கிழக்காசிய பெரும் கிளை என்றும் கூட சுட்டுவார்கள். இந்த இரண்டு பெரும் கிளைகளில் இருந்து உருவான கிளைகளே A1a, A2, A2a, A3, A6, A7, B, B1, B2 மற்றும் B4.
இந்தியாவில் கிருமி தொற்று ஏற்பட்டவர்களிடம் இருந்து சேகரித்தவைரஸ் மாதிரிகளை வைத்து 361 வைரஸ்களின் மரபணு வரிசையை செய்து முடித்தார்கள். மரபணு வரிசைகளை ஒப்பிட்டு பார்த்து எது எந்த கிளையினம் என வகைசெய்தார்கள். அவ்வாறு எல்லா வைரஸ்களையும் அதுவரை அறிந்த 10 கிளைகளாக பகுத்த போது எந்த கிளை இனத்திலும் சேராத வைரஸ் வகையினங்கள் இருந்தன. இவற்றை உற்று நோக்கிய போது இவற்றுள் ஒற்றுமை புலப்பட்டது. இவற்றில் பல இதுவரை இனம் காணப்படாத புது கிளையினம் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. உலகெங்கும் உள்ளமரபணு செய்யப்பட்ட வைரஸ்களில் சுமார் 3.5% இந்த கிளையை சார்ந்தது. இந்தியா தவிர சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குறிப்பிடும்படியான அளவில் இந்த கிளை வைரஸ் உள்ளது.
நான்கு உப கிளைகள்
ஜனவரி 2-ம் தேதி உலகில் பெருமளவுபரவியுள்ள A2a கிளையினம் தோன்றியது. அதன் பின்னர் A3i என்ற இந்த கிளையினம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பிறந்தது எனக் கணித்துள்ளார்கள். இதன்பிறப்பிடம் சிங்கப்பூர் அல்லது இந்தோனேசியாவாக இருக்கும் எனவும் மதிப்பீடு செய்கிறார்கள். இந்த கிளையினம் உருவாக்கி இயல்பான திடீர் மரபணு மாற்றத்தின் விளைவாக இதுவரை நான்கு உப கிளைகள் துளிர்த்துள்ளன.
வயதான மரம் என்றால் அதிக கிளைகள், கூடுதல் உப கிளைகள் இருக்கும். இளம் மரத்தில் குறைவான கிளை வளர்ச்சிதான் காணப்படும். அதுபோல ஃபைலோஜெனடிக் வரை படம் கொண்டு இந்த A3iகிளையினம் எப்படி தமிழ்நாடு,தெலங்கானா என பரவியுள்ளது எனஅறியலாம். ஒரே ஒரு கிருமி தொற்று உடையவர் மூலமே இந்த கிளையினம் இந்தியாவுக்குள் வந்துள்ளது. அவரிடம்இருந்து பலருக்கும் இந்த கிளையின வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தனித்தன்மை
வேறு வகை கிளையினத்தால் பாதிக்கப்பட்டவர்களோடு இந்த கிளையினத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஒப்பீடு செய்து பார்த்த போது நோய் தன்மையில் எந்தவித மாற்றமும் புலப்படவில்லை.மற்ற கிளையினங்களை விட கூடுதல் பரவும் தன்மை உள்ளது என்பதற்கும் சான்றுகள் இல்லை. இந்த கிளையின கிருமி தொற்று உள்ள முதல் நோயாளி ஊரடங்குக்கு முன்பே சிங்கப்பூரில் இருந்து மார்ச் மாதம் 11-ம் தேதியே ஹைதராபாத் வந்துவிட்டார். அவருக்கு முன்பே கூட இந்த கிருமி கொண்டவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்க கூடும். இவர்கள் வழியே ஹைதராபாத் வந்த கிருமி தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் கூடுதல் அளவில்பரவிவிட்டது. இந்த கிளையினத்துக்கு என்ற எந்தவித தனித்தன்மையும் இதுவரை இனம் காணப்படவில்லை.
கட்டுரையாளர்: விஞ்ஞானி, விக்யான் பிரச்சார், புதுடெல்லி
முக்கிய செய்திகள்
இந்தியா
35 secs ago
இந்தியா
11 mins ago
இந்தியா
26 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago