வரும் 8-ம் தேதி வழிபாட்டுத் தலங்கள் திறப்பு; தனிமை முகாமில் இருப்பவற்றை திறக்கத் தடை: வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத்துறை அமைச்சகம்
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனைத் தளர்த்தும் முதல்கட்டம் நடைமுறையில் இருக்கும் வரும் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்கும் வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 4 கட்ட லாக்டவுனை மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை கடைப்பிடித்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருந்தன.
இந்த லாக்டவுன் முடிந்து அதை நீக்கும் முதல் கட்டம் நடைமுறையில் இருக்கிறது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
இந்தச் சூழலில் வரும் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் நாடு முழுவதும் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
- வழிபாட்டுத் தலங்களின் நுழைவாயிலில் சானிடைசர் வைக்க வேண்டும். வரும் மக்கள் அனைவருக்கும் தெர்மல் பரிசோதனை கட்டாயம்.
- வழிபாட்டுத் தலங்களில் கரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
- முகக்கவசம் அணிந்திருப்பவர்களை மட்டுமே வழிபாட்டுத் தலத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.
- கரோனா வைரஸ் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பதாகைகள், சுவரொட்டிகளை வழிபாட்டுத் தலங்களில் வைக்க வேண்டும். ஒலிபெருக்கி, வீடியோ மூலம் அவ்வப்போது கரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து அறிவிக்க வேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் மக்கள் தங்கள் செருப்பு, ஷூ போன்றவற்றைத் தாங்கள் வரும் வாகனத்திலேயே விட்டுவிடலாம். அல்லது தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ நடந்து வந்திருந்தால், செருப்புகளைத் தனியாக வைக்க வேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களில் வாகனங்களை நிறுத்துமிடங்களில் முறையாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். அதைக் கண்காணிக்கவும் நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியே இருக்கும் தேநீர்க் கடைகள், உணவகங்கள், கடைகள் போன்றவற்றில் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களில் சமூக விலகலைக் கடைப்பிடித்து வரிசையில் நிற்க வேண்டும், அமர வேண்டும். அதற்கான அடையாளம் சமூக விலகலைக் கடைப்பிடித்து இட வேண்டும்.
- வழிபாட்டுத் தலத்தில் நுழைவாயில், வெளியேறும் வாயில் தனித்தனியாக அமைத்தால் சிறப்பாக இருக்கும்.
- வழிபாட்டுத் தலத்துக்குள் நுழையும்போது வரிசையில் நின்றால் 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
- சமூக இடைவெளி விட்டு இருக்கைகளை வழிபாட்டுத் தலத்தில் அமைக்க வேண்டும்.
- வழிபாட்டுத் தலத்தில் குளிர்சாதன வசதி இருந்தால் 24 முதல் 30 டிகிரி வரை இருக்குமாறும் ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதம் இருக்குமாறு வைக்க வேண்டும்.
- புனித நூல்களைத் தொடுதல், சிலைகளைத் தொடுதல் அனுமதிக்கக் கூடாது.
- கூட்டமாகக் கூடுதல், கூட்டம் நின்று வழிபாடு செய்தல் தடை செய்யப்படுகிறது.
- பதிவு செய்யப்பட்ட பக்திப் பாடல்கள் ஒலிபரப்பலாம். ஆனால், குழுவாகப் பக்திப் பாடல்களைப் பாடுவது அனுமதிக்கப்படாது.
- வழிபாட்டுத் தலத்தில் ஒருவொருக்கொருவர் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து வாழ்த்து கூறுதல் கூடாது.
- வழிபாட்டுத் தலத்தில் பொதுவான தரை விரிப்புகளில் நின்று வழிபாடு செய்வதற்குப் பதிலாக அனைவரும் தனித்தனியாக தரைவிரிப்புகளைப் பயன்படுத்தி அதைத் திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும்.
- வழிபாட்டுத் தலத்துக்குள் புனித நீர் தெளிப்பது, வழங்குவது, பிரசாதங்களைக் கைகளால் வழங்குவது அனுமதிக்கப்படாது.
- சமுதாய உணவுக்கூடம், லாங்கர் போன்றவற்றில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களைப் பராமரிக்கும் நிர்வாகம் அடிக்கடி அதை முறையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
- குறிப்பாக தரைப்பகுதியை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
- வழிபாட்டுத் தலங்களுக்கு வந்து செல்லும் பக்தர்கள் முகக்கவசம், கையுறை போன்றவற்றை முறையாக குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.
- ஒருவேளை வழிபாட்டுத் தலத்துக்குள் ஒருவருக்கு கரோனா இருப்பது தெரியவந்தால். அவரை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். அவருக்கு முகக்கவசம் வழங்கி, அருகில் உள்ள மருத்துவரை அழைத்துப் பரிசோதிக்க வேண்டும். மேலும் சுகாதார மையம், அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஒருவேளை அந்த நபர் கரோனா பாஸிட்டிவாக இருந்தால் அவர் அமர்ந்திருந்த இடத்தை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.