ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக முதல்வருக்கு மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கடிதம்

By செய்திப்பிரிவு

ஜல் ஜீவன் திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துமாறு தமிழ்நாடு முதல்வருக்கு மத்திய நீர் வள அமைச்சர் கடிதம் எழுதினார்.

ஜல் ஜீவன் திட்டத்தை (JJM) மாநிலத்தில் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாட்டு முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய நீர் வள அமைச்சர், கஜேந்திர சிங் செகாவத் கோரியுள்ளார். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024க்குள் செயல்படும் வீட்டுக் குழாய் இணைப்புகளின் மூலம் பாதுகாப்பான தண்ணீரை வழங்கி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே ஜல்ஜீவன் திட்டத்தின் நோக்கமாகும். நீர் வள அமைச்சகத்திடம் வருடாந்திர செயல்முறைத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் முதல்வருக்குக் கடிதம் எழுதிய அமைச்சர், ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் அரசின் உறுதியின் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள பெண்களும், பெண் குழந்தைகளும் படும் துயரம் முடிவுக்கு வரும் என்றுக் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் குறிப்பிட்டக் காலத்தில் செயல்படுத்தப்படுவதன் மூலம், மக்களுக்கு தங்களது வீடுகளிலேயே போதுமான அளவில், பரிந்துரைக்கப்பட்ட தரத்தில், நீண்ட காலத்துக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்கும் என்று அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த இலக்கை எட்டுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும். செயல்படும் வீட்டுக் குழாய் இணைப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், மத்திய மற்றும் மாநிலப் பங்களிப்பில் இருந்து பயன்படுத்தப்பட்ட நிதியின் அடிப்படையிலும் இந்திய அரசு நிதியை வழங்கும்.

13.86 லட்சம் வீடுகளுக்கு தண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என்னும் இலக்குடன் ஒப்பிடும் போது, குறைவான வீடுகளுக்கே 2019-20-இல் மாநிலத்தில் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இது குறித்த தனது கவலையை தெரிவித்தார். குழாய் இணைப்புகளைக் கொடுப்பதற்காக ரூ 373.87 கோடி தமிழகத்துக்கு 2019-20-இல் வழங்கப்படும் எனக் குறிப்பிடடிருந்ததைத் தொடர்ந்து, ரூ 373.10 கோடி விடுவிக்கப்பட்டது. ஆனால், மார்ச் 2020 இறுதியில், ரூ 114.58 கோடியை மட்டுமே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மாநிலத்தால் பயன்படுத்த முடிந்தது.

பயன்படுத்தக்கூடியத் தண்ணீரை கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்குவது ஒரு தேசிய முன்னுரிமை என்று மேலும் குறிப்பிட்ட திரு. செகாவத், இதன் அடிப்படையில், ரூ 373.87 கோடியில் இருந்து ரூ 917.44 கோடியாக 2020-21-இல் தமிழகத்துக்கான நிதி அதிகரிக்கப்பட்டிருப்பதாகத் தெர்வித்தார். இதன் படி, எஞ்சியுள்ள ரூ 264.09 கோடியுடன் சேர்த்து, ரூ 1,181.53 கோடி உறுதிப்படுத்தப்பட்ட மத்திய நிதி தமிழ்நாட்டிடம் இருக்கிறது. நிதிப் பொறுப்பு மற்றும் நிதி நிலை மேலாண்மை சட்டத்தின் கீழ் கடன் வாங்கும் அளவு 3.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, மத்திய நிதியுடன் சேர்த்து, அதற்கு இணையான மாநிலத்தின் பங்கும் திட்டத்தை செயல்படுத்தும் முகமைக்கு சரியான நேரத்தில் வழங்கப்பட்டுவிடும் என்று மத்திய அமைச்சர் நம்பிகைத் தெரிவித்தார். இதன் படி, மாநிலத்தின் பங்குத் தொகையும் சேர்த்து, குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு 2020-21-இல் மாநிலத்திடம் மொத்த நிதியாக ரூ 2,363 கோடி இருக்கும்.

ஆனால், 2019-20-இல் செயல்படும் வீட்டுக் குழாய் இணைப்புகளை வழங்குவதில் திருப்திகரமாக இல்லாத செயல்பாட்டையும், நிதியின் குறைவானப் பயன்படுத்துதலையும் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் நடைமுறையில் உள்ள தண்ணீர் விநியோகத் திட்டங்களின் திட்டமிடுதலையும், செயல்படுத்துதலையும் ஆய்வு செய்யுமாறு முதல் அமைச்சரை அமைச்சர் கேட்டுக்கொண்டார். மேலும், 105 லட்சம் செயல்படும் வீட்டுக் குழாய் இணைப்புகளை வழங்க மாநிலத்தில் வாய்ப்பிருப்பதால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் திட்டங்களையும் ஆய்வு செய்து, தேவைப்படும் பழுது நீக்கங்களையும், மாற்றங்களையும் துரிதமாகச் செய்ய நடவடிக்கை எடுத்து, 'அனைத்து வீடுகளிலும் தண்ணீர் கிடைக்கும் கிராமங்களை' உருவாக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மாநிலத்தில் மொத்தமுள்ள 1.27 கோடி கிராமப்புற வீடுகளில், 21.85 லட்சம் வீடுகள் தண்ணீர் இணைப்புகளை ஏற்கனவே பெற்றுள்ளன. 34 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு இந்த ஆண்டு குழாய் தண்ணீர் வழங்க மாநிலம் திட்டமிட்டுள்ளது. சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனாவின் கீழ் உள்ள அனைத்து 117 கிராமங்களுக்கும், முன்னேறும் முனைப்புடன் உள்ள மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும், பட்டியல் இனத்தினர்/பழங்குடியினர் 90 சதவீதம் உள்ள கிராமங்களுக்கும் 100 சதவீத இணைப்புகள் வழங்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 78 சதவீதம் குழாய் இணைப்புகள் உள்ள சிவகங்கை மாவட்டத்துக்கும், 61 சதவீதம் இணைப்புகள் உள்ள வேலூர் மாவட்டத்துக்கும், 58 சதவீதம் இணைப்புகள் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் நடப்பு ஆண்டில் 100 சதவீத இணைப்புகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிராமத்துக்கும் கிராம அளவிலான செயல்திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், கிராமப்புறத் தூய்மை இந்தியா திட்டம், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு 15வது நிதி ஆணையத்தின் மானியங்கள், மாவட்டக் கனிம வளர்ச்சி நிதி, காடு வளர்ப்பு ஈடு செய்யும் நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடும் ஆணையம், பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி, உள்ளூர்ப் பகுதிகள் வளர்ச்சி நிதி ஆகிய பல்வேறு திட்டங்களை இணைத்து, நீண்ட கால தண்ணீர் விநியோக அமைப்புகளை உறுதி செய்வதற்கு ஏற்கனவே இருக்கும் தண்ணீர் ஆதாரங்களை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்கப்படுவதை தீவிரமாகப் பரிசீலிக்குமாறு முதல்வரை மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார். தண்ணீர் பாதுகாப்பு நீண்ட காலம் நீடித்திருப்பதை உறுதி செய்ய, கிராமங்களில் உள்ள நீர் அமைப்புகளின் திட்டமிடல், அமல்படுத்துதல், மேலாண்மை, செயலாக்கம் மற்றும் பராமரிப்பில் உள்ளூர் கிராம சமூகம்/கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும்/அல்லது அவற்றின் துணைக் குழுக்கள்/பயனாளிகள் குழுக்கள் ஆகியவற்றை ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். ஜல்ஜீவன் திட்டத்தை ஒரு உண்மையான மக்கள் இயக்கமாக மாற்ற அனைத்து கிராமங்களிலும் தகவல் அளித்தல், கற்பித்தல் மற்றும் தகவல் தொடர்புப் பிராச்சரம் (IEC) மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பு செய்யப்பட வேண்டும்.

இந்தத் திட்டத்தின் விளைவாக பொதுத் தண்ணீர் ஆதாரங்கள் மற்றும் பொதுக்குழாய்கள் முன் மக்கள் கூட்டமாக நிற்கத் தேவையில்லை

என்பதால், கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் இந்தக் கடிதம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, சமூக விலகலைப் பழக மக்களுக்கு உதவும் மற்றும் உள்ளூர் மக்கள்/இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து ஊரகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர்க் குழாய் இணைப்புகளை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தை '100 சதவீத செயல்படும் வீட்டுக் குழாய் இணைப்புகளைக் கொண்ட மாநிலமாக' மாற்றத் தேவைப்படும் நிதியை வழங்குவது உட்பட தனது நிபந்தனையற்ற ஆதரவை முதல்வருக்கு உறுதி அளித்த மத்திய நீர் வள அமைச்சர், ஜல்ஜீவன் திட்டம் குறித்த திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் பற்றி முதல் அமைச்சர் மற்றும் மாநிலத்தின் நிதி அமைச்சருடன் காணொலிக் காட்சி மூலம் விரைவில் விவாதிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்