பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் காத்திருப்பதாகவும், நிலைமையை சமாளிக்க தயாராக இருப்பதாகவும் ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியது. இதையடுத்து பாகிஸ்தான் தனது தீவிரவாத நடவடிக்கைகளை மேலும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது , ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி சதி வேலைகள் நடத்த திட்டமிட்டு வருகின்றன.
எல்லையில் இந்தியா தனது ராணுவ சாமர்த்தியத்தால் சதி வேலைகளை முன்கூட்டியே கண்டறிந்து முறியடித்து வருகிறது. ஏற்கெனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஊடுருவி துல்லிய தாக்குதல் நடத்தி எல்லைக் கோட்டையொட்டி அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இந்நிலையில் மீண்டும் அந்த முகாம்கள் உயிர் பெற்றிருப்பதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அதாவது லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல்-முஜாகிதீன், ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 450 தீவிரவாதிகள் எல்லைக்கோட்டில் ஊடுருவ காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒட்டி கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகிலுள்ள துதானியல், ஷார்தா மற்றும் அத்காம் ஆகிய இடங்களில் அவர்கள் பதுங்கி இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. கடந்த மார்ச் மாதம்வரை ஏவுதளங்களில் பயங்கர வாதிகளின் எண்ணிக்கை 235 ஆக இருந்த நிலையில் தற்போது அவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல்பி.எஸ்.ராஜு செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாத முகாம்கள் நிரம்பிவழிகின்றன. அங்கு அமைக்கப்பட்டுள்ள 15 ஏவுதளங்களில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவக் காத்திருக்கின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களின் சதி வேலைகளை முறியடிக்க நமது ராணுவம் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க ராணுவம் தயாராக உள்ளது.
இந்த கோடை காலத்தில் இந்தியாவுக்கு தீவிரவாதிகள் அதிக அளவில் ஊடுருவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் பதுங்கியிருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஊடுருவல் முயற்சிகள் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம்.
காஷ்மீரில் நிலவி வரும் அமைதியையும் சட்டம்-ஒழுங்கையும் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் பாகிஸ்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. தீவிரவாதத்தின் முதுகெலும்பு முறிவதை பாகிஸ்தானால் ஜீரணிக்க முடியவில்லை.
ஜம்மு-காஷ்மீரில் பெரும்பாலான தீவிரவாதிகளை வேரறுத்துவிட்ட நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ அவர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதற்கு பாகிஸ்தான் ராணுவம் முழு உதவிகளை வழங்கி வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் செயல்படும்போது அதற்கு தக்க பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்து வருகிறது. இந்தியாவின் பதிலடியாக பாகிஸ்தான் தங்களது சதித்திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது.
தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக எவரும் ஆயுதம் எடுப்பது அல்லது தவறான நோக்கங்களை அடைவது ஆகியவை மிகவும் தண்டனைக்குரியதாக இருக்கும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவிக்கிறோம்.
உலக நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸுக்கு எதிராக போரிட்டு வரும் வேளையில் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதை எல்லையில் உள்ள நமது வீரர்கள் சமாளிக்கும் திறனைப் பெற்றுள்ளனர். அவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அண்மையில் தீவிரவாத குழுக்களின் தலைவர்கள் ரியாஸ்நைக்கூ, ஜுனாயித் அஷ்ரப் ஷெராய் ஆகியோர் கொல்லப்பட்டனர். இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் கமாண்டர்கள் ஆவர். இவர்கள் கொல்லப்பட்டுள்ளதால் அவர்களுக்குக் கீழ் பணிபுரிந்து வந்த தீவிரவாதிகள் தலைமை இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
சரியான தலைமை இல்லாமல் தீவிரவாதிகள் தங்களது அடுத்த நடவடிக்கையை முன்னெடுப்பதில் திணறி வருகின்றனர். மேலும் தலைவர்கள் இறந்துள்ளதால் பல்வேறு தீவிரவாத குழுக் களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.- பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago