பொதுத் தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்ட தேதிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது:
''கேரளத்தில் இன்று 24 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 4 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 3 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், தலா 2 பேர் பத்தனம்திட்டா திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களையும், தலா ஒருவர் காசர்கோடு, கோழிக்கோடு, எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள்.
இன்று 5 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களில் 2 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், தலா ஒருவர் கண்ணூர், வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள்.
இன்று வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 12 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 8 பேர் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்தும், 3 பேர் தமிழ்நாட்டிலிருந்தும் வந்தவர்கள். கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது. கேரளத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 666 ஆகும். தற்போது 161 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தற்போது பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 74,398 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 73,865 பேர் வீடுகளிலும், 533 பேர் மருத்துவமனையிலும் உள்ளனர். இன்று கரோனா அறிகுறிகளுடன் 155 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 48,543 பேரின் உமிழ்நீர் மாதிரிகளைப் பரிசோதித்ததில் 46,961 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
சுகாதாரத் துறையினர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கம் கொண்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என 6,090 பேரின் உமிழ்நீர் மாதிரிகளைப் பரிசோதித்ததில் 5,728 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இன்று நோய் தீவிரம் உள்ள பகுதிகளின் பட்டியலில் புதிதாக எந்தப் பகுதியும் சேர்க்கப்படவில்லை.
கேரளத்தில் நோய்ப் பரவல் ஆபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். பொதுமுடக்கத்தில் சில நிபந்தனைகள் சமீபத்தில் தளர்த்தப்பட்டன. ஆனால், சில துறைகளில் நிபந்தனைகளைக் கடுமையாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து நமது சகோதர, சகோதரிகள் கேரளத்துக்கு வரத் தொடங்கிய பின்னர்தான் இங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
மே 7-ம் தேதி கேரளத்துக்கு வெளிநாட்டிலிருந்து முதல் விமானம் வந்தது. மே 1, 3, 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கேரளத்தில் புதிதாக யாரும் கரோனா நோயால் பாதிக்கப்படவில்லை என்ற நிலை இருந்தது. 8-ம் தேதி ஒருவருக்கு மட்டுமே நோய் பாதிப்பு ஏற்பட்டது. அன்று 16 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். மே 13-ம் தேதி முதல் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
அன்று 10 பேருக்கும், 14-ம் தேதி 26 பேருக்கும், 15-ம் தேதி 16 பேருக்கும், 16-ம் தேதி 11 பேருக்கும், 17-ம் தேதி 14 பேருக்கும், 18-ம் தேதி 29 பேருக்கும், நேற்று 12 பேருக்கும், இன்று 24 பேருக்கும் புதிதாக நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தற்போது புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 8-ம் தேதி 16 பேர் நோயாளிகளாக இருந்த நிலையில் இன்று நோயாளிகளின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. இதை மனதில் வைத்துதான் கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நமது சகோதர சகோதரிகள் வருவதை எந்தக் காரணம் கொண்டும் தடுக்க முடியாது. அவர்கள் அவர்களது சொந்த மண்ணுக்கு வருகின்றனர். அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டியது நமது கடமையாகும். அவர்கள்தான் நோயைப் பரப்புகின்றனர் என்ற தவறான கண்ணோட்டம் யாருக்கும் இருக்கக் கூடாது.
ஆனாலும் வருபவர்களில் யாருக்கு நோய் இருக்கும், யாருக்கு நோய் இருக்காது எனக் கண்டுபிடிப்பது சிரமமாகும். இதனால்தான் வாளையார் உள்பட சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அவர்களுக்குக் கூடுதல் மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டியது கட்டாயமாகிறது.
கேரளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி மே 26-ம் தேதி தொடங்கும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். ஏற்கெனவே இம்மாத இறுதியில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால், பொதுமுடக்கம் முடியாத நிலையிலும், கரோனா பீதி குறையாததாலும் தேர்வுக்கு மாணவர்களால் வர முடியாத நிலை உள்ளது என்று பெற்றோர்கள் சிலர் கவலை தெரிவித்ததனர். இதனால் தேர்வுகளை அடுத்த மாதத்திற்குத் தள்ளி வைக்க முன்னர் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், தற்போது தேர்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் மீண்டும் அதே தேதியில் திட்டமிட்டபடி தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பெற்றோர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை.
சுகாதாரத் துறையில் ஏற்கெனவே 3,700 புதிய தற்காலிகப் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது மீண்டும் 2,948 தற்காலிகப் பணியிடங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மதுக் கடைகளைத் திறப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்''.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago