மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மாநில அரசுகளைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறது. பொருளாதார நிதித்தொகுப்பு மோசடித் திட்டமாக இருக்கிறது. மாநிலங்கள் கடன் பெறுவதற்கு வேடிக்கையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். சுயசார்பு பொருளாதாரத்துக்காக இதுவரை ஐந்து கட்டங்களாகத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 லட்சத்து 2 ஆயிரத்து 650 கோடியாகும். ரிசர்வ் வங்கி அளித்துள்ள சலுகைகளின் மதிப்பு ரூ.8 லட்சத்து ஆயிரத்து 603 கோடிக்குத் திட்டங்களை அறிவித்துள்ளதால் ஒட்டுமொத்தமாக ரூ.20.97 லட்சத்துக்குத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்களில் மாநில அரசுகளின் கடன் பெறும் உச்ச வரம்பு 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக ரூ.4 லட்சம் கோடி கடன் பெற முடியும் என்றபோதிலும் மத்திய அரசின் திட்டங்களைப் படிப்படியாக அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
மத்திய அரசின் பொருளாதார நிதித்தொகுப்பு குறித்து தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது மத்திய அரசைக் காட்டமாக விமர்சித்தார்.
அவர் கூறியதாவது:
''மத்திய அரசு அறிவித்த சுயசார்பு பொருளாதாரத் திட்டம் உண்மையான மோசடித் திட்டம். வெறும் எண்களை மட்டும் கூறி மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் துரோகம் விளைவிக்கிறது.
மாநில அரசுகள் கடன் பெறுவதற்கு நகைப்புரிய கட்டுப்பாடுகளைக் கூறி மத்திய அரசு தன்னுடைய மரியாதையைத் தானே குறைத்துக்கொள்கிறது. சர்வதேச பத்திரிகைகள் எல்லாம் மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பைப் பார்த்துக் கிண்டல் செய்கிறார்கள். நிதியமைச்சர் உண்மையாகவே ஜிடிபியை உயர்த்தத் திட்டமிடுகிறாரா அல்லது ரூ.20 லட்சம் கோடி எண்களை அடைவதற்காக அறிவி்ப்புகளை வெளியிடுகிறாரா என்று கேட்கிறார்கள்.
இக்கட்டான இந்த நேரத்தில் பொருளாதார நிதித்தொகுப்பு மாநிலங்களுக்கு மிகவும் அவசியமானது. ஆனால், மத்திய அரசின் மனப்போக்கு நிலப்பிரபுவுத்துவக் கொள்கை போலவும், எதேச்சதிகார மனப்போக்கையும் காட்டுகிறது. இதை நாங்கள் முழுமையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற திட்டங்களை நாங்கள் கேட்கவில்லை.
கரோனா வைரஸ் பாதிப்பால் மாநில அரசுகளின் நிதிநிலைமை மோசமாக இருக்கும் போது, மக்களுக்குத் தேவையான உதவிகளையும், திட்டங்களையும் செய்யவே நாங்கள் மத்திய அரசிடம் இருந்து நிதி கோருகிறோம்.
நாங்கள் உங்களிடம் பணம் கேட்டால், நீங்கள் எங்களைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறீர்கள். மத்திய அரசு என்ன செய்கிறது? எனக் கேட்கிறேன். இந்தியாவில் சீர்திருத்தங்கள் கொண்டுவரும் முறை இதுதானா? மாநிலங்கள் தங்கள் நிதிப்பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மையில் 2 சதவீதம் கூடுதலாகக் கடன் பெற மத்திய அரசு அனுமதித்துள்ளது.
அப்படியென்றால் தெலங்கானாவுக்கு ரூ.20 ஆயிரம் கோடிதான் கிடைக்கும். இந்தக் கடனை வாங்குவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நகைச்சுவையாக உள்ளன. இந்தக் கடனை வாங்கினால் செலுத்துவது மாநிலங்கள்தானே!.
மத்திய அரசு அறிவித்தது பொருளாதார ஊக்குவிப்பு திட்டமா?.என்ன இது? இதை பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் என அழைக்க முடியாது. கூட்டாட்சி முறையில் இதுபோன்ற கொள்கையைப் பின்பற்ற முடியாது. இப்படி நீங்கள் அறிவித்தால் மாநில அரசுகள் எதற்கு? அரசியலமைப்புச் சட்டப்படிதான் மாநில அரசுகள் இயங்குகின்றன. உங்களுக்குக் கீழ் இயங்கவில்லை.
கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்க்கும் விதமாக மத்திய அரசு செயல்படுவதும், மாநில அரசுகளைக் கட்டுப்படுத்த நினைப்பதும் வேதனையாக இருக்கிறது. பிரதமர் மோடி கூட்டாட்சி குறித்துப் பேசுகிறார். ஆனால், எல்லாம் போலித்தனமாகவும், வெறுமையாகவும் இருக்கிறது''.
இவ்வாறு சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago