தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்குப் பரவும் வைரஸ்: கேரள முதல்வர் பினராய் விஜயன் எச்சரிக்கை

By கா.சு.வேலாயுதன்

“கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவது ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை இனியும் தொடர வேண்டும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர், “கேரளத்தில் நேற்று 16 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 பேர் வயநாடு மாவட்டத்தையும், 4 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், தலா 2 பேர் ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும், தலா ஒருவர் கொல்லம், பாலக்காடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள்.

கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 7 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 4 பேர் தமிழ்நாட்டிலிருந்தும், 2 பேர் மும்பையிலிருந்தும் வந்துள்ளனர். இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 576 பேரில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 311 பேர். மற்ற மாநிலங்களிலிருந்து வந்த 70 பேருக்கும், கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 187 பேருக்கும் நோய் பரவியுள்ளது. இதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 8 பேர் வெளிநாட்டினர் ஆவர்.

இதுவரை 576 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 80 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 3 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று (மே 15) யாரும் நோயிலிருந்து குணமடையவில்லை.

கேரளத்தில் பல்வேறு மாவட்டங்களில் 48,825 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 48,287 பேர் வீடுகளிலும், 538 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். கரோனா அறிகுறிகளுடன் புதிதாக 122 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோட்டில் 17 பேரும், காசர்கோட்டில் 16 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வயநாடு மாவட்டத்தில் 19 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 42,201 பேரின் உமிழ்நீர் மாதிரிகளைப் பரிசோதித்ததில் 40,631 பேருக்குக் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

சுகாதாரத் துறையினர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என 4,630 பேரின் உமிழ்நீர் மாதிரிகளைப் பரிசோதித்ததில் 4,424 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது. கேரளத்தில் தற்போது நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 16” என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “கேரளத்தில் தற்போது மீண்டும் நோய் பரவுவது கவலையளிக்கிறது. கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுவது ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுவரை நாம் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளை இனியும் தொடர வேண்டும். தனிமனித இடைவெளி உள்பட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எந்தக் காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது. அவ்வாறு வெளியே வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறியது தொடர்பாக இதுவரை 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க போலீஸார் பைக் மூலம் ரோந்து செல்வார்கள். தனிமையில் இருப்பவர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரிக்கவும், அந்த நபர்களைக் கண்காணிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளத்தில் தற்போது அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தொடர வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தைப் போலவே வரும் ஞாயிற்றுக்கிழமையும் கேரளத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

எல்லைகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 4 சர்வதேச விமான நிலையங்கள் மூலம் 17 விமானங்களிலும், கொச்சிக்கு 3 கப்பல்கள் மூலமும் கேரளத்துக்கு இதுவரை 3,732 பேர் வந்துள்ளனர். கேரளத்திலிருந்து 29 ரயில்கள் மூலம் 33,000 வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்களுடைய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கப்பலில் வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் அந்தக் கப்பலில் வந்த அனைவரும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று டெல்லியிலிருந்து கேரளம் வந்த ரயிலில் 1,045 பேர் வந்துள்ளனர். திருவனந்தபுரத்துக்கு வந்த ஒருவருக்கு நோய் அறிகுறி தென்பட்டதால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல கோழிக்கோடு வந்த 7 பேருக்குக் கரோனா அறிகுறி தென்பட்டதால் அவர்களும் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களிலிருந்து கேரளத்துக்கு வர இதுவரை 2,85,880 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை 1,23,972 பேர் இ பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 47,151 பேர் கேரளத்துக்கு வந்துள்ளனர். ரயில்கள் மூலம் 4,694 பேர் வந்துள்ளனர். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவதில் எந்தக் குழப்பமும் இல்லை.

கேரளத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவது வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதுதான் கேரளத்தில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கடும் நிபந்தனைகள் தொடரும். இந்தப் பகுதிகளிலிருந்து யாருக்கும் வெளியே செல்ல அனுமதி கிடையாது.

இஸ்ரேலில் சிக்கியுள்ள 83 கேரள செவிலியர்களை இந்தியா கொண்டுவர மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள மாணவர்களை அழைத்து வர, சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 8 மாநிலங்களிலிருந்து கேரளத்துக்கு விரைவில் ரயில்கள் இயக்கப்படும். இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சிறிய துணிக் கடைகளைத் திறக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 15 சதவீதக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் ஏதாவது குழப்பம் இருக்கிறதா என்பது குறித்து ஆராயப்படும். சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களைத் திறந்து தூய்மைப்படுத்த அனுமதி அளிக்கப்படும்” என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்