நாம் ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்: கேரளத்தில் கரோனா பரவல் குறித்து பினராயி விஜயன் அச்சம்

By கா.சு.வேலாயுதன்

“கேரளத்தில் இதுவரை தினமும் ஒற்றை இலக்கத்துக்குள் இருந்த கரோனா தொற்றுப் பரவல் இப்போது இரட்டை இலக்கத்துக்கு மாறியிருக்கிறது. இது நாம் ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது” என கேரள முதல்வர் பினராயி விஜயன் அச்சம் தெரிவித்திருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன், கேரளத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருவதாக அச்சம் தெரிவித்தார். இதற்கான காரணிகளைப் பட்டியலிட்ட அவர், “நேற்று கேரளத்தில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 14 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். 11 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. கடந்த சில தினங்களாக கேரளத்தில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்தது. ஆனால், நேற்றும் இன்றும் அது இரட்டை இலக்கத்துக்கு மாறி இருக்கிறது. இது நாம் ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.

உலக சுகாதார மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு தகவலில், கரோனா நோயை எளிதில் கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் காலங்களில் நாம் கரோனாவை மனதில் வைத்துக்கொண்டு நமது பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தேவையில்லாத பயணங்களையும், விழாக்களையும் தவிர்ப்பது நல்லது. வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்வதுடன் தனிமனித விலகலையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஓட்டல்கள் உள்ளிட்ட பகுதிகளில் முன்கூட்டியே நேரத்தை நிச்சயித்துக் கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இதுவரை 124 மலையாளிகள் இறந்துள்ளனர். இது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வருபவர்கள் பின்னர் விமான நிலையத்தில் இருந்து தங்களது வீடுகளுக்குச் செல்லும்போது வழியில் கழிப்பறை உட்பட வசதி கிடைக்காமல் தவிக்கின்றனர். இதற்காக 185 இடங்களில் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

வெளிமாநிலங்களில் இருந்து வருவோரைக் கேரள எல்லையில் பணம் வாங்கிக் கொண்டு சிலர் கேரளாவுக்குள் கடத்துவதாக தகவல் வந்துள்ளது. இது தொடர்பாகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த மே 8-ம் தேதி சென்னையிலிருந்து வந்த மலப்புரத்தை சேர்ந்த 8 பேரில் ஒருவருக்குக் கரோனா நோய் தொற்று உறுதியானது.

இவர் சோதனைச் சாவடியில் இருந்தபோது தான், சோதனைச் சாவடியில் பணம் வாங்கிக்கொண்டு ஆட்களை அனுமதிப்பதாக கூறி காங்கிரஸைச் சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள், ஒரு எம்எல்ஏ உள்பட சிலர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கு அருகில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவரும் இருந்துள்ளார். இதனால் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏ, அங்கு பணியில் இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் போலீஸார் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாலக்காடு மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். கரோனாவைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினருடன் போலீஸாரும் இணைந்து செயல்படுகின்றனர்.

இந்நிலையில், தற்போது சுகாதாரத் துறையினருடன் போலீஸாருக்கும் கரோனா நோய் பரவி வருவது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 32 நாட்கள் பச்சை மண்டலத்திலிருந்த வயநாடு மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்த ஒரு டிரைவரால் மீண்டும் கரோனா தொற்று பரவி வருகிறது. அந்த டிரைவர் மூலம் இந்த மாவட்டத்தில் 10 பேருக்கு நோய் பரவியுள்ளது. இவர் மூலம்தான் மூன்று போலீஸாருக்கும் நோய் பரவியது.

ரயில் நிலையங்களில் விமான நிலையத்தில் இருப்பதை போலவே அனைத்துப் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதை போலவே மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருந்தும் கேரளாவுக்கு இடை நில்லா ரயில்கள் இயக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கேரளா வரும் ரயில்கள் வெளிமாநிலங்களில் பல இடங்களில் நின்று வருகிறது. இதன் மூலம் கேரளாவில் நோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே, வெளிமாநிலங்களில் இந்த ரயில்களுக்கு அதிகமாக நிறுத்தம் அனுமதிக்க வேண்டாம் என்று ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் கேரளா வருபவர்களுக்கு முறையான பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. எனவே, இந்த ரயில்களில் முன்பதிவு செய்யும்போது பாஸ் உள்ளவர்களுக்கு மட்டும் டிக்கெட் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மே 18-ம் தேதி தொடங்கும். கேரளாவில் இவ்வருடம் பருவமழை மிக அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களைத் தங்க வைக்க உரிய வசதி ஏற்படுத்த இப்போதே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்