கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் 3-கட்டத்துடன் முழுமையாக முடியப்போவதில்லை, சில தளர்வுகளுடன் 4-வது கட்டமாக நீடிக்கும் என நேற்று முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் மூலம் அறிய முடிகிறது.
ஆனால் முதல் 3 கட்ட லாக்டவுனில் பின்பற்றிய கடுமையான விதிகள் தேவைப்படாமல் சில தளர்வுகளுடன் கடைப்பிடிக்கப்பட்டு, படிப்படியாக பொருளாதார நடவடிக்கை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். லாக்டவுனை எவ்வாறு தளர்த்துவது என்பது குறித்து வரும் 15-ம் தேதிக்குள் செயல்திட்டத்தை அனுப்பி வைக்குமாறு அனைத்து மாநில முதல்வர்களையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு தொடர்பாகவும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் மற்றும் 27-ம் தேதிகளில் ஆலோசனை நடத்தி முதல்வர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
அதன்படி 3-வது கட்ட லாக்டவுன் வரும் 17-ம் தேதி முடிவதையடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். ஏறக்குறைய 6 மணிநேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடந்தது.
» ரயில் கட்டணத்தை சோனியா கொடுத்ததாக வெளி மாநில தொழிலாளர்களிடம் நோட்டீஸ் வழங்கிய காங். எம்எல்ஏ
தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் தங்கள் கருத்துகள், தேவையான நிதியுதவிகள், அதிகாரங்கள், சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துக் கூறினர், அதை பிரதமர் மோடியும் கவனத்துடன் கேட்டார்.
அதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது:
“நாட்டில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பல்வேறு கட்ட முயற்சிகளோடு, தடுப்பு நடவடிக்கைகளோடு, இணையாக பொருளாதார நடவடிக்கைகளயைும் தொடங்குவதற்கு மாநில அரசுகள் முயல வேண்டும். கிராமப்புறங்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.
நம் கண்முன் இரு சவால்கள் இருக்கின்றன. கரோனா பரவும் பாதிப்பையும் கட்டுப்படுத்த வேண்டும். 2-வதாக பொதுமக்களின் செயல்பாட்டுக்கும், பொருளாதார நடவடிக்கைக்கும் அனுமதிக்க வேண்டும். அதற்கான அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும் நோக்கி நாம் நகர்வோம்.
கரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், சமூக விலகல் மட்டுமே அதைத்தடுக்கும் ஆயுதம். கரோனா பாதிப்புக்குப் பின் உலகம் பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கரோனாவுக்கு முன், கரோனாவுக்குப் பின் என்று உலகப்போரைப் போல் மாறிவி்ட்டது. இந்த மாற்றங்களை நாம் எவ்வாறு செயல்படுத்தப்போகிறோம் என்பதை நாம் கண்டிப்பாகத் திட்டமிட வேண்டும்.
மாற்றம் என்பது தனிமனிதர்களிடமிருந்து ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் வர வேண்டும் என்ற புதிய கொள்கையில் செயல்பட வேண்டும்.
ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது பொருளாதார நடவடிக்கைக்கு அவசியமானது. ஆனால், அனைத்து வழிகளிலும் இயக்கப்படவில்லை, மிகவும் குறைந்த வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்படுகிறது.
முதல்கட்ட லாக்டவுனில் பின்பற்றப்பட்ட கட்டுப்பாடுகள் 2-வது கட்டத்தில் தேவைப்படவில்லை. 2-வது கட்டத்தில் இருந்த கடின விதிமுறைகள் 3-வது கட்டத்தில் இல்லை. 3-வது கட்ட லாக்டவுனில் இருக்கும் கட்டுப்பாடுகள் 4-வது கட்டத்துக்கும் தேவைப்படாது.
அனைத்து முதல்வர்களும் கரோனாவுக்கு எதிராக தீவிரமாக, முழு மூச்சுடன் செயல்பட்டு, தங்களுடைய மதிப்புமிக்க ஆலோசனைகளையும், அனுபவங்களையும் பகிர்ந்துள்ளீர்கள். அதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.லாக்டவுனை எவ்வாறு படிப்படியாகத் தளர்த்துவது, பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்குவது குறித்து வரும் 15-ம் தேதி்க்குள் முதல்வர்கள் அனைவரும் எனக்குச் செயல்திட்டத்தை அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
கரோனா வைரஸ் குறி்ப்பாக கிராமங்களில் பரவாமல் மாநில அரசுகள் கவனத்துடன் இருக்க வேண்டும். லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தியபின், புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகமாக கிராமத்துக்குச் செல்வார்கள். அப்போது அங்கு கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டும்.
பொருளாதார நடவடிக்கை படிப்படியாக, உறுதியாக பல்வேறு மாநிலங்களிலும் தொடங்கப்பட வேண்டும்''.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதன் மூலம் 4-வது கட்ட லாக்டவுனுக்கு இந்தியா தயாராகிவிட்டது என்பது தெரிகிறது. ஆனால் கடந்த 3 கட்ட லாக்டவுனில் இருந்தது போன்ற கட்டுப்பாடுகள் இல்லாமல், சில தளர்வுகள் இருக்கும். அந்தத் தளர்வுகள் குறித்து அடுத்து வரும் நாட்களில் மத்திய அரசு அறிவிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago