எவருக்கும் உதவி செய்வதே இந்தியாவின் தாரக மந்திரம், கரோனா ஊடரங்கால் ஏற்பட்டுள்ள இந்த சிரமமான காலகட்டத்தில் உலகின் மற்ற பல நாடுகள் இந்தியாவை நினைவு கூர்வதற்கு இதுவே காரணம் என பிரதமர் மோடி கூறினார்.
வேசக் புத்தபூர்ணிமாவையொட்டி பல்வேறு புத்தர் வழிபாட்டு ஸ்தலங்களிலும் கூட்டாக நடைபெற்ற பிராத்தனையின் ஒருபகுதியாக இணையம் வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:
வணக்கம் புத்த பூர்ணிமாவிற்கான நல்வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் புத்தபிரானைப் பின்பற்றுபவர்களுக்கும் வேசக் கொண்டாட்டங்களுக்கான நல்வாழ்த்துக்கள்.
இந்தப் புனித நன்னாளில் உங்களைச் சந்திப்பதும், உங்கள் அனைவருடைய ஆசீர்வாதங்களையும் பெறுவதும் எனக்கு கிடைத்த நல்வாய்ப்பு. இதற்கு முன்னரும் எனக்கு இதுபோன்ற வாய்ப்புகள் பல கிடைத்துள்ளன. 2015, 2018 ஆம் ஆண்டுகளில் டெல்லியிலும், 2017ஆம் ஆண்டில் கொழும்பிலும் இந்தக் கொண்டாட்டங்களில் உங்களுடன் ஒரு பகுதியாக, நானும் இருந்தேன்.
இப்போது சூழ்நிலை முற்றிலும் வேறாக உள்ளது. எனவே நாம் முகத்தோடு முகம் பார்த்து, நேரில் சந்திக்க இயலவில்லை.
தம்மம் மதம் மனதில்தான் உள்ளது. மனம்தான் உயர்ந்த பட்சமானது. அதுவே அனைத்து செயல்களுக்கும் முன்னோடி. மனம் தான் என்னை உங்களுடன் தொடர்பு கொள்ளச் செய்கிறது. அதனால் தான் உடல் ரீதியாக நாம் ஒருவர் முன் ஒருவர் இல்லாவிட்டாலும், அது பற்றிப் பெரிதாக உணர்வதில்லை உங்களோடு இருப்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விஷயம். ஆனால் தற்போதைய சூழ்நிலைகள் அதற்கேற்றவையாக இல்லை.
எனவே, எங்கோ தொலைதூரத்தில் இருந்த போதிலும், தொழில்நுட்ப உதவியுடன் நாம் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவே திருப்தி தரக்கூடியதாக இருக்கிறது என்று தான் நான் சொல்ல வேண்டும்.
நண்பர்களே, பொது முடக்கக் காலத்தின் கடினமான சூழ்நிலையிலும், புத்த பூர்ணிமா தினத்தை மெய்நிகர் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்துள்ளமைக்கு சர்வதேச புத்திஸ்ட் அமைப்பைப் பாராட்டியாக வேண்டும். உங்களது புதிய முயற்சிகளால், புத்தபிரானைப் பின்பற்றும் உலகெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கானவர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒருவரோடொருவர் இணைகிறார்கள்.
லும்பினி, சாரநாத், குஷிநகர் தவிர இந்த ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகள், ஸ்ரீ அனுராதபுரம் ஸ்தூபாவிலும் இலங்கையிலுள்ள வஸ்கடுவா கோயிலிலும் நடைபெறுவது மிகவும் அழகு.
எல்லா இடங்களிலும் நடைபெறும் வழிபாடுகளை ஆன்லைன் மூலமாகக் காண்பிப்பது என்பதே ஒரு அற்புதமான அனுபவமாகும். உலக அளவிலான பெருந்தொற்றான கொரோனாவுக்கு எதிராக உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் முன்னணிப் போராட்ட வீரர்களுக்காக பிரார்த்தனை செய்யும் வாரமாக இதைக் கொண்டாடுவதற்கு நீங்கள் உறுதி பூண்டிருக்கிறீர்கள். கருணை மயமான இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.
இது போன்ற முறைப்படுத்தப்பட்ட முயற்சிகளின் மூலமாக, நம்மால் இந்தக் கடினமான சவால்களில் இருந்து மனிதகுலத்தை மீட்டெடுக்க முடியும் என்றும், மக்களின் பிரச்சினைகளைக் குறைக்க முடியும் என்றும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
நண்பர்களே, ஒவ்வொரு உயிரின் பிரச்சினையையும் அகற்றுவதற்கான செய்தியும், உறுதியும், இந்திய நாகரிகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் எப்போதும் வழிகாட்டியாக உள்ளன. இந்தியாவின் இந்தக் கலாச்சாரத்திற்கு புத்தபிரான் மேலும் மெருகூட்டியுள்ளார்
தமக்கு ஞானம் கிடைத்த பிறகு, புத்தபிரான் தமது வாழ்க்கையில் மற்ற எத்தனையோ பலரது வாழ்க்கைக்கு வளம் சேர்த்துள்ளார்.
அவரது செய்தி ஏதோ ஒரு சூழ்நிலைக்கு உட்பட்டதாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு உட்பட்டதாகவோ இல்லை.
சித்தார்த்தர் பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னரும், பல நூற்றாண்டு காலத்திற்கு, சித்தார்த்தர் கௌதமர் ஆக மாறிய பிறகு, காலச் சுழற்சி நம்மைப் பல்வேறு கட்டங்களிலும், சூழ்நிலைகளிலும் சுழற்றி எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
காலம் மாறியது. நிலைமைகள் மாறின. சமுதாயம் செயல்படும் முறை மாறியது. ஆனால் புத்தபிரானின் செய்தி மட்டும் நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இவையெல்லாம் சாத்தியமானது ஏனென்றால் புத்தா என்பது பெரும் வெறும் ஒரு பெயர் மட்டுமல்ல. அது ஒரு புனிதமான எண்ணம். ஒவ்வொரு மனித மனதிலும் துடித்துக்கொண்டிருக்கும் எண்ணம். மனிதகுலத்திற்கு வழிகாட்டும் எண்ணம். துறவறத்துக்கும் தவத்திற்கும், புத்தமே எல்லை.
புத்தம் என்பது சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு இணையானது. வலிமையான மன உறுதியுடனான புத்தம், சமூக மாற்றத்தின் உச்சநிலையாகும். விடாமுயற்சி, தன்னைத்தான் தியாகம் செய்து கொள்ளுதல், உலகம் முழுவதும் மகிழ்ச்சியைப் பரவச் செய்தல் ஆகியவற்றுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் புத்தர்.
நாம் இப்போது இருக்கும் சூழலில், நம் அனைவருக்கும் உள்ள நல்ல நேரத்தைப் பாருங்கள். நம்மைச் சுற்றிலுமுள்ள பலரை நாம் பார்க்கிறோம். மற்றவர்களுக்கு சேவை செய்பவர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பவர்கள், ஏழைகளுக்கு உணவளிப்பவர்கள், மருத்துவமனைகளை சுத்தம் செய்பவர்கள், சாலைகளில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பவர்கள் என அனைவரும் தொடர்ந்து 24 மணி நேரமும், நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் நல்ல விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியிலும் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு மனிதரும் மரியாதை செலுத்தப்பட வேண்டியவர்கள். வணக்கத்திற்குரியவர்கள். போற்றப்பட வேண்டியவர்கள்.
உலகம் முழுவதும் குழப்பம் நிறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில், வருத்தம், தோல்வி மனச்சோர்வு ஆகிய உணர்வுகள் பல நேரங்களில் அதிகமாக உள்ள இந்த காலகட்டத்தில் புத்தரிடம் இருந்து கற்றுக்கொண்டவை மேலும் பொருத்தமானதாகின்றன. கடினமான நிலைமைகளில் இருந்து வெளியேற, அவற்றை எதிர்கொண்டு கடந்து செல்ல மனிதர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று புத்தபிரான் கூறியுள்ளார். சோர்வடைவது, மேலும் சோர்வடைவது என்பது ஒரு தேர்வாகாது.
புத்தபிரான் கூறியுள்ள நான்கு உண்மைகள், கருணை, பரிவு,
இன்பத்திலும் துன்பத்திலும் ஒரே நிலையில் இருத்தல். ஒருவரை அவருடைய குறை நிறைகளுடன் ஏற்றுக்கொள்ளுதல். இந்திய பூமிக்கு, இந்த உண்மைகள் தொடர்ந்து ஊக்கமளிப்பதாக உள்ளன.
இந்தியா தன்னலமற்று இருப்பதில் உறுதியாக நிற்கிறது என்பதையும் நீங்கள் பார்க்கிறீர்கள் எந்தவித வேறுபாடுமின்றி, நாட்டிலும், உலகம் முழுவதிலும் துன்பத்தில் வாடும் மக்களுக்கு உடன் நிற்கிறது.
இலாப நஷ்டங்களுக்கு அப்பால், திறன் உள்ளவர், திறனற்றவர் என்பதற்கப்பால், இந்த நெருக்கடியான நேரத்தில் நாம் செய்யவேண்டியது மற்றவர்களுக்கு உதவி செய்வது. இயன்றவரை உதவிக்கரம் நீட்டுவது என்பதேயாகும்.
உலகின் மற்ற பல நாடுகள் இந்த சிரமமான காலகட்டத்தில், இந்தியாவை நினைவு கூர்வதற்கு இதுவே காரணம். தேவைப்படும் எவருக்கும் உதவி செய்யவேண்டும் என்பதற்காக இந்தியா எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறது.
ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையையும் பாதுகாப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் அதேசமயம், இந்தியா, உலக அளவிலான தனது கடப்பாடுகளையும் அதேபோன்ற தீவிரத்துடனேயே கவனித்துக் கொண்டு வருகிறது.
நண்பர்களே, புத்தபிரானின் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு சொற்பொழிவும், மனித குலத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் பொறுப்புணர்வுக்கு மேலும் வலுவூட்டுகிறது. புத்தம், இந்தியாவின் ஞானம் மற்றும் இந்தியாவின் தன்னுணர்வு - தன்னைத் தான் அறிதல் என்ற இரண்டிற்குமான சின்னமாகத் திகழ்கிறது. இத்தகைய தன்னுணர்வின் மூலமாக, இந்தியா ஒட்டு மொத்த சமுதாயத்தின், உலகம் முழுமைக்குமான, நன்மைக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது; இனியும் தொடர்ந்து பணியாற்றும். இந்தியாவின் முன்னேற்றம் என்பது உலக முன்னேற்றத்திற்கு எப்போதும் உதவியாகவே இருக்கும்.
நண்பர்களே! வெற்றி என்பதற்கான இலக்குகள், அளவுகோல்கள் ஆகிய இரண்டுமே காலத்தைப் பொறுத்து மாறுபடும். ஆனால் ஒரு விஷயத்தை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நாம் செய்யும் பணிகள் தொடர்ந்து சேவை மனப்பான்மையுடன் செய்யப்படவேண்டும். மற்றவர்கள் மீது கருணை காட்டும் போது, கருணையும் சேவை உணர்வும் எந்த ஒரு பெரிய சவாலையும் சமாளிக்க நமக்கு வலுவூட்டும்.
எப்பொழுதும், இரவும் பகலும், மனிதகுல சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர்கள் தான், உண்மையிலேயே புத்தபிரானைப் பின்பற்றுபவர்கள். இந்த உணர்வு தான் நம் வாழ்க்கையை ஒளிரச் செய்கிறது; நம் வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறது.
இந்த வாழ்த்துக்களோடு நான் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விழைகிறேன். இந்தக் கடினமான நிலைமையில் உங்களையும், உங்கள் குடும்பத்தையும், உங்கள் நாட்டையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கே வாழ்பவராக இருந்தாலும் பாதுகாப்பாக இருங்கள். மற்றவர்களும் பாதுகாப்பாக இருக்க இயன்ற அளவு உதவுங்கள்.
எல்லோரும் நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும். இந்த விருப்பத்துடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago