கரோனா நோயாளிகள் குணமடைவது 21.90 சதவீதம்: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா நோயாளிகள் குணமடையும் விகிதம் 21.90 சதவீதமாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்தார்.

கரோனா பாதிப்பை தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்த்தின் (எய்ம்ஸ்) அவசர சிகிச்சைப் பிரிவுக்கு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர், ஹர்ஷ் வர்தன் சென்றார். கோவிட்-19 நோயாளிகளுக்கான தனிமைப்படுத்துதல் பிரிவு இருக்கும் அனைத்து வசதிகளையுடைய கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளை அவர் பார்வையிட்டார். அப்போது, கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளிடம் மனித இயந்திரம் (ரோபோ) மூலம் இயங்கும் தொலைபேசியில், காணொலி அழைப்பின் மூலம் பேசிய அமைச்சர், அவர்களின் நலனைக் கேட்டறிந்தார். தேவைப்படும் மேம்படுத்துதலை செய்வதற்காக, எய்ம்ஸில் உள்ள வசதிகளைப் பற்றி கேட்டறிந்தார்.

விரிவான ஆய்வுக்குப் பின்னர், பல்வேறு பிரிவுகளின் செயல்பாட்டை பற்றி ஹர்ஷ் வர்தன் கேட்றிந்தார். டிஜிட்டல் தளங்கள் மற்றும் காணொலி, குரல் அழைப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கோவிட்-19 தொற்று உறுதிபடுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படுகிற நபர்களின் நலன் 24x7 கண்காணிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் அவர் கூறுகையில் ‘‘ஊடங்கை முழுமையாக கடைபிடித்து அதை கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கையாக மக்கள் கருத வேண்டும்.
ஆபத்து அதிகமுள்ள மாவட்டங்கள் ஆபத்து குறைந்த மாவட்டங்களாக மாறிக்கொண்டு வருவதால் இந்தியாவில் நிலைமை மேம்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட நபர்கள் அதிகமுள்ள மாநிலங்கள் பொது முடக்க நடவடிக்கைகளின் சிறப்பான அமல்படுத்துதலிலும் தடுப்பு திட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் ஆகியவற்றின் போதிய கையிருப்பு போன்ற‌ மருத்துவ கட்டமைப்பின் மீதும் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
கரோனா பரவுதல் குறைந்து வருகிறது. சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் சதவீதம் அதிகரித்து வருகிறது. 5804 நபர்கள் இது வரை குணமடைந்துள்ளனர். 21.90 சதவீதம் குணமாகும் சதவீதமாக உள்ளது.
26,496 பேர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 824 இறப்புகள் இது வரை இந்தியாவில் மொத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE