சிலரின் செயலுக்காக ஒரு சமூகத்தையே புறக்கணிக்கக்கூடாது; பாகுபாடின்றி உதவி செய்யுங்கள்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து

By பிடிஐ

ஒரு சிலரின் அச்சம், கோபத்தால் செய்த செயலுக்காக ஒரு சமூகத்தையே குறைசொல்லி புறக்கணிக்கக்கூடாது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்

ஆர்எஸ்எஸ்அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் காணொலி மூலம் தொண்டர்களுக்கு முதல்முறையாக நேற்று உரையாற்றினார். அப்போது தப்லீக் ஜாமாத் மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கரோனா வந்தது குறித்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவி்த்தார். அதுகுறித்து அவர் பேசியதாவது:

அச்சம், கோபம் காரணமாக ஒரு சிலர் செய்த செயல்களுக்கு ஒரு சமூகத்தையே நாம் குறை சொல்வதும், அவர்களை புறக்கணிப்பதும் கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யும் போது வேறுபாடு பார்க்காமல் வழங்கிட வேண்டும்.

அனைத்து சமூகத்தின் தலைவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் கோபம், அச்சம் காரணமாக எந்த விதமான செயலையும் செய்யாதீ்ர்கள் வெறுத்து ஒதுக்கும் செயலில் ஈடுபடாதீர்கள். கோபத்தையும், அச்சத்தையும் ஒதுக்கிவையுங்கள். இதை உங்கள் உறுப்பினர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதுதான்

கரோனா வைரஸால் நமக்கு உருவான சிக்கல்களை வாய்ப்பாக எடுத்துப் பயன்படுத்தி புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும், உலகை வழிநடத்த வேண்டும்.

சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததன் காரணமாக மகாராஷ்டிராவில் இரு சாதுக்கள் கொல்லப்பட்டனர். இது விவகாரத்தில் வாதங்களை ஒதுக்கி வைத்துவிடுங்கள் இந்த சம்பவம் நடந்திருக்ககூடாது . மக்களை சட்டத்தை அவர்கள் கையில் எடுக்க அனுமதித்திருக்ககூடாது இந்த சம்பவம் நடந்தபோது போலீஸார் அங்கு என்ன செய்தார்கள். பால்கர் சம்பவத்தில் கொல்லப்பட்ட இரு சாதுக்களுக்கு நான் இரங்கல் தெரிவிக்கிறேன்

ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஜூன் மாதம் வரை ஒத்திவைக்க மார்ச் மாதமே முடிவு செய்தது. ஆனால் சிலரோ அரசு நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு தடை விதித்துவிட்டதாக கூறுகிறார்கள்.

நெருப்பை கொளுத்திப்போட சிலர் அஞ்சமாட்டார்கள். இதனால் கோபமும், அறிவிழப்பும் ஏற்பட்டு, தீவிரவாத செயலுக்கு இட்டுச்செல்லும். அதுபோன்ற செயலிலிருந்துதான் சிலர் நன்மை அடைய காத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். இந்தியாவில் கரோனா வைரஸ் பரவியதும் இதுபோன்ற ஒரு காரணத்தால்தான்

அனைத்து இடங்களிலும் மக்கள் தவறு செய்கிறார்கள். சாதாரண மக்கள் இதை உணர்ந்து, தங்களுடைய நிலைப்பாடு என்பது கூட்டுறவாகத்தான் இருக்க வேண்டும், எதிர்ப்புத் தெரிவிப்பதுஅல்ல என்று உணர வேண்டும். அதுபோன்ற செயலில் இருந்து நாம் விலகியிருக்க வேண்டும். 130 கோடி மக்களை மனதில் வைத்தும், அனைவரும் சகோதர, சகோதரிகள் என்ற நினைப்பில் செயல்பட வேண்டும்

கரோனா வைரஸால் நமக்கு நேர்ந்த சிக்கல்களை வாய்ப்பாகப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தி தன்னிறைவு அடைய வேண்டும். அனைத்து தேவைகளுக்கும் வெளிநாடுகளை நம்பியிருக்காமல் சுதேசிப் பொருட்களைத் தயாரிக்க வேண்டும், அதையே பயன்படுத்த வேண்டும். உள்நாட்டுத் தொழில்களுக்கு ஊக்களிக்க வேண்டும். பாரம்பரிய விவசாய முறை, பசு வளர்ப்பு போன்றவை எந்திரமயமாக்கப்பட்ட, ரசாயனமாக்கப்பட்ட வாழ்க்கையை மாற்ற உதவும்

இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE