தோப்புக்கரணம் போட்ட தொழிலதிபர் மகன்: ம.பி.யில் வைரலான வீடியோ

லாக் டவுன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மத்தியப் பிரதேச பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர், சாலையில் ஆடம்பரக் காரருடன் ஜாலி ரைடில் ஈடுபட்டவரை கொடியசைத்து நிறுத்தி தோப்புக்கரணம் போட வைத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ம.பி.யைச் சேர்ந்த இந்தூர் நகரம் கரோனா நோயாளிகள் அதிகம் பாதிப்புக்குள்ளான நகரங்களில் ஒன்று.

இந்தூரைப் பொறுத்தவரை நகரின் அனைத்துச் சாலைகளும் சீல் வைக்கப்பட்டு கடுமையான பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இதற்காக இந்தூர் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுடன் இணைந்து நகர பாதுகாப்பு கவுன்சில் ராணுவம் தன்னார்வலர்களாகச் செயல்பட்டு வருகிறது. இதில் துணை ராணுவம் மற்றும் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று லாக் டவுன் காரணமாக போக்குவரத்து இல்லாத சாலையில் 20 வயது இளைஞர் ஒருவர், திறந்த சாலைகளில் இரண்டு மஞ்சள் இருக்கைகள் கொண்ட காரை ஓட்டி வருவதை நகரின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கண்டனர். உடனே கொடியசைத்து அவரின் காரை நிறுத்தினர்.

லாக் டவுன் நிலையில் ஏன் வெளியே வந்தீர்கள்? என்று அவரிடம் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கேட்டனர். கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இடையில் முகக்கவசமும் அந்த இளைஞர் அணிந்திருக்கவில்லை.

ஒரு மொபைல் போன் வீடியோவில், இந்தூர் தொழிலதிபர் தீபக் தர்யானியின் மகன் என அடையாளம் காணப்பட்ட அவர், காரில் இருந்து இறங்குவதும், கையில் வாகன ஆவணங்கள் இருப்பதும், பாதுகாப்பு சபை உறுப்பினர்களுடன் பேசுவதும் காணப்படுகிறது. சில நிமிடங்களில் அவர் தோப்புக்கரணம் போட்டார்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடும் லாக் டவுன் கடைப்பிடிக்கப்படும் வேளையில் ஆடம்பரக் காரில் உலா வந்த இளைஞர் தோப்புக்கரணம் போட்ட காணொலி இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE