பாகிஸ்தானில் சிக்கிய இந்திய இளம்பெண்ணை மீட்க உபி முதல்வர் உத்தரவு

By ஆர்.ஷபிமுன்னா

பாகிஸ்தானில் சிக்கி வாழும் கீதா எனும் இளம்பெண்ணை மீட்க உபி முதல் அமைச்சரான அகிலேஷ் சிங் யாதவ் தன் பிரதாப்கர் மாவட்ட ஆட்சியருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார். 14 வருடங்களுக்கு முன் காணாமல் போனவரை போன்ற ஒரு சம்பவத்தை கதையாகக் கொண்டு வெளியான பாலிவுட் படத்தை அடுத்து இந்த சுவையான விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சல்மான்கான் நடித்து சமீபத்தில் வெளியான பாலிவுட் படம் ’பஜ்ரங்கி பைஜான்’. இதில், பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் தம் சிறு வயதில் காணாமல் போய் தவறுதலாக எல்லை தாண்டியதால் இந்தியாவில் சிக்கி விடுகிறார். இவர், சல்மான் கானால் மீட்கப்பட்டு பாகிஸ்தானில் உள்ள அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவது படத்தின் கதை.

இது வெளியானதை அடுத்து அதுபோல் உண்மையிலேயே எதிர்மறையாக நடந்த ஒரு சம்பவம் தொலைக்காட்சி செய்திகளில் வெளியானது. அதில், பாகிஸ்தானில் வாழும் கீதா என்ற 23 வயது இளம்பெண் இந்திய எல்லையை தவறுதலாக தாண்டி வந்து கராச்சியில் வாழ்வதாகக் ஒளிபரப்பானது. இவர், காது கேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத் திறனாளி என்பதால் தம்மை பற்றி விளக்கமாக எடுத்துக் கூற முடியாமல் இருந்திருக்கிறார்

இந்த செய்தியை பார்த்த உபியின் பிரதாப்கரின் மஹேஷ்கன்ச் பகுதியில் வாழும் ராம்ராஜ் கவுதம் மற்றும் அனாரா தேவி தம்பதியினர் கீதா 14 வருடங்களுக்கு முன் காணாமல் போன தம் மகள் சவீதா எனக் கூறினர். உடன் அவரை மீட்கும் முயற்சியில் தம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து ’கீதா’ அவரது பெற்றோர்களிடம் சேர்ப்பிக்கப்பட வேண்டும் என சமூக இணையதளங்களிலும் குரல்கள் எழத் துவங்கியது. இதனால், சவீதாவை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி அகிலேஷ் சிங் யாதவ் பிரதாப்கர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விஷயத்தில் ஏற்கனவே மத்திய அரசு செயல்படத் துவங்கி விட்டது. சவீதாவை மீட்கும் முயற்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் இறங்கியுள்ளார். இது குறித்து சுஷ்மா சனிக்கிழமையன்று தம் ட்விட்டர் பக்கத்தில், ‘கீதாவை இந்தியாவிற்கு திரும்பக் கொண்டு வருவதற்கான சம்பிரதாயங்களை முடித்து விட்டோம்.’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் வெளியானதை தொடர்ந்து அடுத்தடுத்து ஜார்கண்ட், மபி மற்றும் பிஹார் மாநிலங்களின் குடும்பங்களும் கீதா தம் குடும்பத்தை விட்டு பிரிந்தவர் எனக் கூறியுள்ளனர்.

இதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னதாகக் குறிப்பிட்ட சுஷ்மா, சம்மந்தப்பட்ட மாநில முதல்வர்கள் விசாரித்து உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலக அதிகாரியிடம் கீதா கூறிய சில தகவல்கள் உபி தம்பதிகள் அளித்ததுடன் ஒத்திருந்தன. இதனால், அந்த கீதா 14 வருடங்களுக்கு முன் பிஹாரில் காணாமல் போன சவீதாவாகத்தான் இருக்க வேண்டும் என உபி மாநில போலீஸார் கடந்த வாரம் உறுதிப்படுத்தி உள்ளனர்.

கடந்த 2003-ல் பிஹாரில் உள்ள தன் சகோதரன் வீட்டிற்கு 11 வயது பெண்ணான சவீதாவுடன் சென்றிருந்தார் அனாரா. அங்கு வழியில் காணாமல் போனவர் தவறுதலாகப் பஞ்சாபிற்கு ரயில் ஏறி பாகிஸ்தான் எல்லையை தாண்டி இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. அதே வருடம் சவீதாவை கண்டு எடுத்த பாகிஸ்தானின் எல்லைப் பாதுகாப்பு படையினர் அங்குள்ள ‘எடி பவுண்டேஷன்; எனும் பிரபல தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

லாகூரில் இருந்து அந்நிறுவனத்தின் கராச்சி கிளைக்கு மாற்றப்பட்டு கீதா என்ற பெயருடன் வாழ்ந்து வருகிறார் சவீதா. இங்கு இந்துக்கடவுள்களின் படங்களை பெரிதாக மாட்டி பூஜை செய்யவும் அனுமதிக்கப்பட்ட கீதா, ரமலான் மாத விரதங்களையும் அனுசரித்துள்ளார்.

தற்போது சவீதா மீட்கப்படுவதில் பாகிஸ்தானை சேர்ந்த பொதுநலவாதியான அன்சார் பர்ணியின் பங்கும் அதிகமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இவர், கடந்த பல வருடங்களாக இரு நாடுகளுக்கு இடையே காணாமல் போய் இடம் மாறியவர்களை மீட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி செய்து வருகிறார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் சிக்கியுள்ளவர் எங்கள் மகள் என தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெற்றோரும் கூறத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்