டெல்லி அருகிலுள்ள நொய்டாவின் மருத்துவமனையில் மகப்பேறுக்கு வந்த பெண்ணின் கணவர் அவசர உதவி கேட்டு போன் செய்துள்ளார். அங்கு வந்த போலீஸார் தானே ரத்தம் கொடுத்து அப்பெண்ணைக் காப்பாற்றியது பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசம் நொய்டாவின் 112 அவசர போலீஸ் எண்ணிற்கு நேற்று மாலை 6.46 மணிக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் அழுதபடி பேசிய விஜயகுமார் என்பவர், தன் மனைவி ரஜினியின் மகப்பேறுக்கு அவசரமாக ரத்த தானம் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு நொய்டா காவலர்களான அனுஜ்குமார் தியாகியும், லாலா ராமும், செக்டர் 24 இல் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உடனடியாக நேரில் சென்றுள்ளனர். அப்பெண்ணிற்குத் தேவையான ரத்தப் பிரிவில் தாங்களே இருந்தமையால் காவலர்களான தியாகியும், லாலாவும் தானே முன்வந்து ரத்த தானம் அளித்துள்ளனர்.
இதனால், மகப்பேறு பெண் ரஜினியின் உயிர் காக்கப்பட்டதுடன் அவருக்கு நல்ல முறையில் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதைப் பாராட்டி சமூக வலைதளங்களில் இரண்டு காவலர்களுக்கும், நொய்டா போலீஸாருக்கும் பாராட்டுகள் குவிகின்றன.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கவுதல் புத் நகர் மாவட்ட 112 அவசர உதவிப் பிரிவின் பொறுப்பாளரும் தமிழருமான உதவி ஆணையர் எஸ்.ராஜேஷ் ஐபிஎஸ் கூறும்போது, ''குறிப்பிட்ட ரத்தம் அவசரமாகக் கிடைக்காமையால் செய்வதறியாது தாமே அதைக் கொடுத்து உதவியுள்ளனர். இருவரையும் பாராட்டி எங்கள் ஆணையர் பாராட்டுப் பத்திரமும், ஏடிஜி ரூ.5000 ரொக்கமும் பரிசாக அளித்துப் பாராட்டியுள்ளனர்.
மருத்துவர்களும், காவல்துறையினரும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றத் தயாராக உள்ளனர். இதை மதிக்கும் வகையில் பொதுமக்கள் ஊரடங்கை மதித்து நடந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம்'' எனத் தெரிவித்தார்.
உ.பி.யின் மெயின்புரியைச் சேர்ந்தவரான விஜய்குமார் ஊரடங்கால் தன் மனைவியை ஊருக்கு அனுப்ப முடியாமல் தவித்தார். எனினும், மகப்பேறு சமயத்தில் தம் மனைவிக்குக் கிடைத்த உதவியை கடவுளைப் போல் காவலர்கள் செய்திருப்பதாகக் கூறி வணங்குகிறார்.
மருந்து அனுப்பி முதியவரின் உயிரைக் காத்து உதவி
இதேபோல், மற்றொரு பெரிய உதவியையும் நொய்டா போலீஸார் செய்து ஒரு முதியவரின் உயிரைக் காப்பாற்றினர். அதில், டெல்லியில் இருந்து ஒரு அரிய மருந்தை உரிய நேரத்தில் பைரைச்சிற்கு அனுப்பிப் பாராட்டை பெற்றுள்ளனர்.
நேபாள எல்லையை ஒட்டியுள்ள பைரைச்சை சேர்ந்தவர் ஓட்டப்பந்தய வீரரும் உ.பி.யின் காவலருமான ஜி.எம்.கான். இவரது தந்தை நூருல் ஹுட்டா கானுக்கு உடல் நலம் குன்றி சிகிச்சையில் உள்ளார்.
இவருக்கு அவசரமாக சில முக்கிய மருந்துகள் தேவைப்பட்டன. இதற்காக ஜி.எம்.கான் உ.பி. காவல்துறையின் ட்விட்டரில் உதவி கேட்டு நேற்று மாலை 4.24 மணிக்குப் பதிவு செய்தார். அதில் இந்த மருந்துகளின் பெயருடன் அவை டெல்லியில் மட்டுமே கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார். இதற்காக உதவ முன்வந்த உ.பி. காவல்துறை கானின் தகவலை டெல்லி போலீஸாருக்குத் தெரிவித்தது.
டெல்லியில் இருந்து அனுப்பட்ட மருந்துகளை அதன் எல்லையில் பெற்ற நொய்டா போலீஸார், அதை ஆசம்கர் சென்ற ஒரு ஆம்புலன்ஸ் மூலமாக பைரைச் அனுப்பியுள்ளனர். சுமார் 960 கி.மீ. தொலைவு பயணம் செய்த மருந்து, இன்று விடியற்காலை போய் சேர்ந்து ஹுட்டாவின் உயிரைக் காக்க உதவியது.
இதற்கும் உ.பி. காவல்துறைக்கு பொதுமக்களிடம் இருந்து சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன. இதுபோன்ற மேலும் பல உதவிகள் பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கும் உ.பி. போலீஸாரால் தொடர்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
50 mins ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago