கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள 7 மாவட்டங்களில் இன்று முதல் இயல்புநிலை திரும்புகிறது. உணவகங்கள், தனியார்வாகனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்கப்பட உள்ளன.
நாட்டிலேயே முதல் முதலில்கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது கேரளாவில்தான். தொடக்கத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் கேரளா முதலிடத்தில் இருந்தது. எனினும், பின்னர் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களும் விரைவாக குணமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடு தழுவிய ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்படுவதாக கடந்த 14-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதேநேரம் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் 20-ம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்றும் அறிவித்தார்.
இதையடுத்து, கேரள அரசு அம்மாநிலத்தை சிவப்பு, ஆரஞ்சு ஏ, ஆரஞ்சு பி, பச்சை என 4 மண்டலங்களாக பிரித்தது. இதன்படி, பாதிப்பு குறைவான 3 மண்டலங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான திட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக மாநில தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் தெரிவித்துள்ளார்.
எனவே, அம்மாநிலத்தில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட உள்ளன. பச்சை மண்டலத்துக்குட்பட்ட கோட்டயம், இடுக்கி ஆகிய 2 மாவட்டங்களில் இன்று முதல் இயல்புநிலை திரும்பும். உணவகங்கள், துணிக் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல இயங்கலாம். இம்மாவட்டங்களில் கரோனா நோயாளிகள் ஒருவர் கூட இல்லை.
இதுபோல ஆரஞ்சு பி மண்டலத்துக்குட்பட்ட திருவணந்தபுரம், ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்பட உள்ளன. இம்மாவட்டங்களில் உணவகங்கள் காலை 7 மணிமுதல் மாலை 7 மணி வரை சமூகஇடைவெளியை கடைபிடித்து இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளியில் செல்பவர்கள் முகக் கவசம் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒற்றைப்படை பதிவெண் கொண்ட வாகனங்களும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இரட்டைப்படை பதிவெண் கொண்ட வாகனங்களும் இயங்க அனுமதிக்கப்படும். அவசர சேவையில் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
ஆரஞ்சு ஏ மண்டலத்தில் 24-ம்தேதிக்குப் பிறகு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் சிவப்பு மண்டலத்தில் இப்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதேநேரம், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை மாநிலம் முழுவதும் மே 3 வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில்..
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில், நாட்டிலேயே மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறும்போது, “ஊரடங்கால் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. பொருளாதார நடவடிக்கைகளை இப்போது இயங்க அனுமதிக்காவிட்டால், கரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகு கடும் நிதி நெருக்கடி ஏற்படும். எனவே, சில வர்த்தக நடவடிக்கைகளுக்கு திங்கள்கிழமை முதல் நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்படும். குறிப்பாக, பச்சை மற்றும்ஆரஞ்சு மண்டலங்களில் சில கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்படும். அதேநேரம் சிவப்பு மண்டலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது.
சிவப்பு மண்டலத்துக்குட்பட்ட மும்பை, புனே நகரங்களில் நாளிதழ்களை வீடுவீடாக சென்று விநியோகிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது. மே 3 வரை மெட்ரோரயில்கள் இயங்க அனுமதிக்கப்படாது. இந்த நோயைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. நோய் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைகளை அணுகவும். அங்கு உரிய சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பலாம்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago