ஜமாத் பிரச்சாரத்துக்கு வந்த தமிழர், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் நேற்று மரணம் அடைந்தார். இவர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தவர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் எஸ்.எல்.முகம்மது நூஹு (76). சவுதியில் கடை நடத்தி வந்தவர் அதை மகனிடம் ஒப்படைத்து ஓய்வில் உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். தப்லீக் ஜமாத் சார்பிலான 120 நாள் பிரச்சாரத்திற்காக நூஹு, ஜனவரி இறுதியில் தன் வீட்டிலிருந்து கிளம்பினார்.
தமிழகத்தின் தென்பகுதி மாவட்டங்களில் 40 நாள் பிரச்சாரம் செய்தவர் உ.பி.யின் சம்பலுக்கு மார்ச் 3-ல் வந்துள்ளார். ஜமாத் பிரச்சாரங்களில் இவருடன் மேலும் 10 தமிழர்கள் இருந்தனர்.
டெல்லியின் நிஜாமுதீனில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு நூஹு செல்லவில்லை. எனினும், அங்கிருந்து வந்தவர்களால் நூஹு உள்ளிட்ட 6 பேருக்கு கரோனா தொற்று பரவி சிகிச்சையில் இருந்தனர். இதில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவரான நூஹுவின் உடல்நிலை இரண்டு தினங்களுக்கு முன் அதிகம் குன்றியது. இதனால், அவர் அருகிலுள்ள பெரிய மாவட்டமான முராதாபாத்தின் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நூஹு, தம் தொகுதிவாசி என்பதால் தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழியும் முராதாபாத் அரசு மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அதன் அவசர சிகிச்சைப் பிரிவிலும் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணிக்கு நூஹு உயிரிழந்தார். இந்தத் தகவல் சம்பல் மாவட்ட ஆட்சியர் மூலமாக நூஹுவின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் ஹாங்காங்கில் பணியாற்றும் இளைய மகனான மின்ஹாஜ் நூஹு தொலைபேசியில் கூறும்போது, ''கரோனா ஊரடங்கில் போக்குவரத்து இன்மையால் எனது தந்தையின் உடலை சம்பல் அல்லது அவர் இறந்த முராதாபாத்திலேயே நல்லடக்கம் செய்ய கோர உள்ளோம். இதற்கான கடிதப் போக்குவரத்துகளுக்காக எனது குடும்பத்தார் தமிழகத்தில் காத்திருக்கின்றனர்'' எனத் தெரிவித்தார்.
இதுபோல், தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த தமிழர்களில் சமீப நாட்களில் ஐந்தாவதாக நூஹு மரணம் அடைந்துள்ளார். இதில், டெல்லி மாநாட்டிற்கு செல்லாத நிலையிலும் உயிரிழந்த முதல் நபரும் நூஹு ஆவார்.
நல்லடக்கம் செய்யத் தாமதமாவது ஏன்?
இதுபோன்ற மரணங்களில் அந்தச் சம்பவம் நிகழ்ந்த மாவட்ட ஆட்சியர் தம் மாநில தலைமைச் செயலாளருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கிறார். இங்கிருந்து அந்தத் தகவல் மரணம் அடைந்தவரின் மாநில தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்படுகிறது.
பிறகு, மருத்துவரின் இறப்புச் சான்றிதழுடன் இறந்தவர் சார்ந்த மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் அளிக்கப்படுகிறது. இந்த ஆட்சியர் மூலமாக சம்பந்தப்பட்ட தாசில்தார் மூலமாக இறந்தவர் குடும்பத்தினருக்குத் தகவல் கூறப்படுகிறது.
இதே வழியில் இறந்தவரை நல்லடக்கம் செய்வது குறித்தும் அவரது குடும்பத்தாரின் கடிதமும் போய் சேருகிறது. இதையடுத்து உள்ளூர் முஸ்லிம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்ய அம்மாநில சன்னி வஃக்பு வாரியத்திடம் அனுமதி பெறப்படும்.
இந்த அனுமதிக்குப் பின் உடலை நல்லடக்கம் செய்யும் பணியை ஏற்க அப்பகுதியின் பொதுநலம் கொண்ட முஸ்லிம்களும் முன்வருவது அவசியம். அவர்களும் கிடைத்த பின் நல்லடக்கப் பணி நடந்தேறுகிறது.
டெல்லியில் தாமதமான நால்வரின் நல்லடக்கம்
கடிதங்கள் அனைத்தும் மின்னஞ்சலில் சென்றாலும் பலசமயம் இறந்தவரின் நல்லடக்கம் தாமதமாவது பரிதாபத்திற்கு உரியது ஆகும். இதே காரணங்களால் டெல்லியின் மாநாட்டிற்கு வந்து இறந்த நால்வரின் நல்லடக்கமும் சற்று தாமதமானது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago