அஸ்ஸலாமு அலைக்கும்; உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறோம்: வானில் எதிர்பாராத பாராட்டால் அதிர்ச்சியில் உறைந்த ஏர் இந்தியா விமானியின் சுவாரஸ்ய அனுபவம்

By ஏஎன்ஐ

அஸ்ஸலாமு அலைக்கும்… உங்களை வரவேற்கிறோம். கடினமான நேரத்தில் உங்களின் சேவைகளைப் பார்த்து பெருமைப்படுகிறோம் என்று வானில் பறந்து கொண்டிருந்த ஏர்இந்தியா விமானத்தின் தலைமை விமானிக்கு திடீரென பாராட்டும், வரவேற்பும் எதிர்பாராத இடத்திலிருந்து வந்தால் எப்படி இருக்கும்?

அந்த எதிர்பாராத இடம் வேறு எதுவுமல்ல. பாகிஸ்தான் நாடுதான். பாகிஸ்தான் வான் எல்லைக்குள் ஏர் இந்தியா விமானம் சென்றதுமே இந்த வரவேற்பு கிடைத்தள்ளது.

இந்தியாவில் சிக்கியிருந்த ஐரோப்பிய நாட்டு மக்கள், கனடா நாட்டுப் பயணிகளை ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரம் கொண்டு சேர்க்க ஏர் இந்தியா விமானம் சார்பில் மும்பை, டெல்லியிலிருந்து இரு போயிங் விமானங்கள் கடந்த சில நாட்களுக்கு முன் இயக்கப்பட்டன. இந்த விமானத்தில் பயணிகளுடன், நிவாரணப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டன.

இந்த விமானம் மும்பையிலிருந்த புறப்பட்டது முதல் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் சேரும் வரை எந்தவிதமான தடங்களும் இன்றி அனைத்து நாடுகளும் 20 மணிநேரம் பயணித்துப் பயணிகளைக் கொண்டு சேர்த்தது. பாகிஸ்தான், ஈரான், துருக்கி என அனைத்து நாடுகளும் ஏர் இந்தியா விமானத்துக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளன.

அதிலும் ஈரான் நாடு எந்த நாட்டு விமானத்தையும் தனது வான் எல்லைக்குள் நேரடியாகச் செல்ல அனுமதிக்காத நிலையில், இந்திய விமானத்துக்கு சிறப்பு அனுமதியளித்தது.

தனது பயண அனுபவத்தை ஏர் இந்தியாவின் சிறப்பு விமானத்தின் கேப்டன் நிருபரிடம் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது:

''மும்பை, டெல்லியிலிருந்து இரு போயிங் விமானங்கள் மூலம் ஐரோப்பிய, கனடா நாட்டுப் பயணிகள், நிவாரணப் பொருட்களுடன் ஜெர்மனிக்குப் புறப்பட்டோம். நாங்கள் புறப்பட்ட தகவலை ஏர் ட்ராபிக் கன்ட்ரோலர் (ஏடிசி) அனைத்து நாடுகளுக்கும் அறிவித்தார்.

நாங்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் வந்தபோது, எங்களைப் பாராட்டி வந்த வார்த்தைகள் ஒட்டுமொத்த ஏர் இந்தியா விமானிகளுக்கும் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்த தருணத்தில் நாங்கள் நுழைந்தபோது, அஸ்ஸலாமு அலைக்கும். இது கராச்சி வான் எல்லை என்று பாகிஸ்தான் விமானத் தகவல் மையத்திலிருந்து செய்தி கிடைத்தது. இதைக் கேட்டு வியப்படைந்துவிட்டோம்.

நீங்கள் பிராங்க்பர்ட் நகருக்குப் பயணிகளையும், நிவாரணப் பொருட்களையும் கொண்டு செல்கிறீர்கள் என்பதை உறுதி செய்யலாமா என்று கேட்டனர். அதற்கு நாங்கள் ஆம் என்று எங்கள் வருகையை உறுதி செய்தவுடன், “உங்களுக்கான வெளியேறும் பாதை தயாராக இருக்கிறது. எந்தத் தடையும் இல்லை நீங்கள் செல்லலாம்” என்றனர். அதற்கு நாங்கள் நன்றி தெரிவித்தோம்.

அப்போது பாகிஸ்தான் தரப்பிலிருந்து, “இதுபோன்ற கடினமான, பெருந்தொற்று நோய் பரவும் நேரத்தில் நிவாரணப் பொருட்களையும், பயணிகளையும் அழைத்துச் செல்லும் உங்களைப் பார்த்துப் பெருமைப்படுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

உடனே நாங்கள், “ஈரானின் ரேடார் தொடர்பு கிடைக்கவில்லை அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்றோம். அதற்கு பாகிஸ்தான் விமான தகவல் மையம் தரப்பிலிருந்து, “கவலைப்படாதீர்கள். டெஹ்ரான் ரேடார் மையத்துக்கு உங்கள் வருகையைத் தெரிவித்து விடுகிறோம். நீங்கள் தொடர்ந்து செல்லலாம்” என எங்களை வழியனுப்பி வைத்தார்கள். இந்த வரவேற்பை எங்களால் மறக்க முடியாது.

இதைவிட முக்கியமான விஷயம் மத்தியக் கிழக்கு நாடுகளில் 1000 மைல்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் நேரடியாக யாரும் கடந்தது இல்லை. ஆனால், ஏர் இந்தியாவின் செயலைப் பார்த்த ஈரான் அதிகாரிகள் 1000 மைல்களுக்கு தங்கள் நாட்டு வான் எல்லைக்குள் நேரடியாகச் செல்ல அனுமதித்தார்கள். எனது வாழ்க்கையில் இதுபோன்று ஈரான் எந்த அந்நிய நாட்டு விமானத்தையும் அனுமதித்தது இல்லை. முதல் முறையாக ஏர் இந்தியாவை மட்டும்தான் அனுமதித்தது.

பெரும்பாலும் ஈரான் தனது ராணுவ விமானம் செல்ல மட்டும் இந்த வான் வழித்தடத்தைப் பயன்படுத்தும். அந்த வழித்தடத்தில் ஏர் இந்தியா விமானத்தை 10000 மைல்கள் இடையூறின்றிச் செல்ல அனுமதித்தது. நாங்கள் ஈரான் எல்லையிலிருந்து வெளியேறும் முன் அந்நாட்டு ரேடார் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எங்களுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்கள்.

துருக்கி, ஜெர்மன் வான் எல்லைக்குள் செல்லும் போதும் இதேபோன்ற வரவேற்பு ஏர் இந்தியா விமானத்துக்குக் கிடைத்ததை மறக்க முடியாது''.

இவ்வாறு கேப்டன் தெரிவித்தார்.

கரோனா பாதித்த நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானிகள், ஊழியர்கள் சென்று திரும்பியதால், தற்போது 14 நாட்கள் சுய தனிமையில் இருந்து வருகிறார்கள் என்பது குறி்ப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்