ட்ரம்ப் எச்சரிக்கை எதிரொலியா? கரோனா நோயாளிகளுக்கான ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி

By பிடிஐ

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை இந்தியா ஏற்றுமதி செய்ய அனுமதி மறுத்தால் தகுந்த பதிலடி தருவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்த நிலையில், அந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் சூழலுக்கு ஏற்ப, தேவைப்படும் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸால் அமெரிக்கா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயிர் காக்கும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகள் அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மற்ற நாடுகளை அமெரிக்கா நம்பியுள்ளது.

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்தாக மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைக்குப் பின், இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்ததது.

ஆனால், இந்தியாவிடம் மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை அமெரிக்கா ஆர்டர் செய்திருந்தது. மத்திய அரசின் தடையால் அந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்குக் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் பிரதமர் மோடியிடம் தடையை விலக்கும்படி ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடியும் பரிசீலிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “ ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரை ஏற்றுமதிக்கான தடையை நீக்குங்கள் என்று இந்தியப் பிரதமரிடம் ஞாயிற்றுக்கிழமை காலை பேசினேன். மாத்திரை ஏற்றுமதிக்கு நீங்கள் அனுமதியளித்தால் அது பாராட்டுக்குரியதாக இருக்கும் என்றேன்.

நான் கேட்டுக்கொண்டபின்பும் இந்திய அரசு மத்திரைகள் ஏற்றுமதிக்கு அனுமதியளிக்காவிட்டால், எதிர்காலத்தில் நாங்களும் பதிலடி கொடுப்போம். ஏன் பதிலடி கொடுக்கக்கூடாதா” எனத் தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப்பின் எச்சரிக்கை மிகுந்த வார்த்தையைத் தொடர்ந்து ஹைட்ராக்ஸி குளோரோ குயின், பாராசிட்டமால் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்தது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நிருபர்களிடம் இன்று கூறுகையில், “ சர்வதேச சமூகத்தினரிடம் வலிமையான ஒற்றுமையையும், கூட்டுறவையும் இந்தியா எப்போதும் பராமரிக்கிறது. இந்த அணுகுமுறையின் அடிப்படையில் மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்களை நாங்கள் பல்வேறு இடங்களில் இருந்து மீட்டு வந்தோம்.

கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயின் சூழல் கருதி, பாராசிட்டமால், மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை நம் அண்டை நாடுகளுக்கு, நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கும் மனிதநேய அடிப்படையில் வழங்க முடிவு செய்துள்ளோம். இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகள் இந்த மாத்திரைகளை வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தன” எனத் தெரிவித்தார்.

மத்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கு மனிதநேய அடிப்படையில் அனுமதியளித்துள்ளது மத்திய அரசு. இதுவரை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவில்லை. நாங்கள் கட்டுப்பாடுகள் மட்டுமே விதித்திருந்தோம்’’ எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்