இந்தியாவில் கரோனாவின் பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்குகிறது; பலி 50 ஆக அதிகரிப்பு; 3-வது இடத்தில் தமிழகம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

கரோனா வைரஸின் கிடுக்கிப்பிடியில் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணக்கை 41 லிருந்து 50 ஆக அதிகரித்தள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது. அதாவது 1,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 12 மணிநேரத்தில் 131 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

''இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1,965 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 41லிருந்து 50 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 151 பேராக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 13 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 42 பேர் குணமடைந்துள்ளனர். 2-வது இடத்தில் உள்ளா கேரள மாநிலத்தில் 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் குணமடைந்துள்ளனர், 2 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணக்கை 152 ஆக அதிகரித்துள்ளது. 6 பேர் குணமடைந்துள்ளனர், 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 234 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் குணமடைந்துள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிகமான உயிரிழப்புகளைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் 13 பேரும், குஜராத், மத்தியப் பிரதேசத்தில் தலா 6 பேரும், பஞ்சாபில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் மாநிலங்களில் தலா 3 பேர், காஷ்மீர், உத்தரப் பிரதேசம், கேரளாவில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர்''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE